தமிழ்நாடு

இடைத்தேர்தலுக்கு ரெடியான 2 தொகுதிகள்! மதுராந்தகம், தாராபுரம் 'பார்முலா' மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா? தவெக போடும் தேர்தல் கணக்கு!

Muthu Lakshmi

அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. - சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமாசெய்திருந்தனர். 

இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதியளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  இசக்கி சுப்பையா, 26 மே அன்று தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்று மீண்டும் எம்எல்ஏ-வாகப் பணியாற்ற அனுமதிக்குமாறு 29 ஆகஸ்ட் 2026 அன்று சட்டப்பேரவைத் தலைவருக்குக் கடிதம் அளித்திருந்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றமும் சட்டப்பேரவையும் அவரது கோரிக்கையை நிராகரித்திருந்தது. இந்நிலையில் இந்த தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதேபோல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். ஜெயக்குமார், 2026 மே 13 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். அதனையடுத்து, மே 25, 2026 அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவரின் ராஜினாமாவிற்கு பிறகு அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததும், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, ராஜினாமா செய்த அதே வேட்பாளர்களை மீண்டும் தவெக சார்பில் களமிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் இதே அணுகுமுறையைப் பின்பற்றி வெற்றி கண்ட தவெக, மீண்டும் அதே பார்முலாவைக் கையில் எடுக்குமா? அல்லது புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்குமா? தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே இதற்கான விடை தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.