தமிழ்நாடு

“ரீல்ஸ் ஆட்சி வேண்டாம்.. ரியல் ஆட்சி வேண்டும்” - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கட்டமான விமர்சனம்! திமுக MLA-கள் வெளிநடப்பு

அந்த தவறு, சட்டப்பேரவையில் மீண்டும் நடக்கக் கூடாது

Muthu Lakshmi

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இடதுசாரி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 எண்ணிக்கையில் தவெக மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி கண்டது.

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தற்போதைய 19வது எதிர்க்கட்சித் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக சட்டமன்ற குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, தமிழ்நாடு அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக-வின் புதிய ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். சட்ட பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி வருவதாகவும், மாற்றம் என்ற பெயரில் மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, “CHANGE - CHANGE என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று EXCHANGE அரசியலை நடத்துகிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்” என அவர் கூறியதும் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், தற்போது நடைபெறும் ஆட்சிக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை அரசு துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள். மக்கள் கேட்பது அதுதான்” என்று கூறி சமூக வலைதளங்களில் தவெகவினர் நடந்தும் விளம்பர அரசியலை அவர் சாடினார். அரசு தரப்பில் விளம்பர அரசியல் அதிகரித்து, தரை மட்ட பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இதற்கிடையில், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தொடர்பான விவாதமும் பேரவையில் எதிரொலித்தது. பதவியேற்பு நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் உணர்கிறார்கள்… அது மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது” என்றார். தமிழ்நாட்டின் மொழி, மரபு, அடையாளம் போன்ற விஷயங்களில் அரசு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பாஜக ஆட்சிக்கு வந்துள்ள மேற்குவங்கத்தில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பாடப்பட்டுள்ளது” என்றும் “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதை ஆளுநர் வலியுறுத்தினார்.. அதற்கு அப்போதைய முதலமைச்சர் எதிர்ப்பை தெரிவித்தார்” என்றும் இதற்கு முன் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து பேசினார்.  அத்துடன், “பதவியேற்பு விழாவில் நடந்த அந்த தவறு, சட்டப்பேரவையில் மீண்டும் நடக்கக் கூடாது” என எதிர்காட்சி தலைவராக எச்சரிக்கை விடுத்தார். அவரது பேச்சு முழுவதும் ஆளும் தரப்பை நேரடியாக குறிவைத்து இருந்ததால், பேரவையில் பல முறை சலசலப்பும் எதிர்ப்பும் எழுந்தது.

“நடப்பதையெல்லாம் பார்த்து, 'பெரிய தப்பு பண்ணிட்டோமோ' என உங்களுக்கு வாக்களித்த மக்களே நினைக்கத் தொடங்கியுள்ளனர். இதை பிரதிபலிக்கும் வகையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்கிறோம்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் திமுக MLA -களுடன் வெளிநடப்பு செய்தார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இந்த கருத்துக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களிலும் அவரது “ரியல் ஆட்சி வேண்டும்” என்ற கருத்து வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.