விஜய் தனது X தளபக்கத்தின் மூலம் திமுகவை சாடி பதிவிட்டுள்ளார்  விஜய் தனது X தளபக்கத்தின் மூலம் திமுகவை சாடி பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

"விசில் புயலில் வீழ்வது உறுதி" திமுகவை எச்சரிக்கும் விஜய்! - ட்வீட்-டில் சொல்வது என்ன?

கடலூர் பிரச்சாரம் ரத்தான நிலையில், தவெக தலைவர் விஜய் தனது 'X' தளப்பக்கத்தின் மூலம் திமுகவை சாடி பதிவிட்டுள்ளார்.

Vinvizhi Leninton

கடலூர் மாவட்டத்தில் உள்ள தவெக வேட்பளர்களை ஆதரித்து நாளை விஜய் கடலூர் செல்லவிருந்த நிலையில் காவல்துறையினர் அவருக்கு 22 நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கிய நிலையில் தவெக தலைவர் விஜய் அதனை ரத்து செய்துள்ளார். கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த அந்த பிரச்சாரத்தில் 12,000 பேர் பங்கேற்க காவல்துறையினர் அனுமதியளித்துள்ளனர். காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்கவேண்டும், 100 பேருக்கு ஒரு தன்னர்வளர், மருத்துவ வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறி 22 நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர். ஏற்கனவே ஏப்ரல் 9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலூர் செல்வதாக இருந்து ரத்தான நிலையில் தற்போது இந்த பிரச்சாரமும் ரத்தாகியுள்ளது. காலை 11 மணி அளவில் விஜய் 'ஹெலிகாப்டர்' மூலம் கடலூர் வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வர் என்று எதிர்பார்த்த நிலையில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து தவெக தரப்பில், 'ரோடு ஷோ'க்கு அனுமதியளிக்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தவெக தலைவரும், நடிகருமான விஜய் தனது 'X' வலைதளப்பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராஜரும், பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் திமுக-விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் திமுக அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், "கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரச்சார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் தவெக-வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரச்சார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று திமுக-வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன".

இதனைத்தொடர்ந்து, பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் தவெக ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரச்சாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை என்றும் தவெக-வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி என்று கூறியதோடு இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம் என்று தனது சமூகவலைதளப்பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.