வெளியானது விஜய்யின் 10 முக்கிய வாக்குறுதிகள்! "ஸ்டாலின் சார் மற்றும் பலர் போன்று ஏமாற்றப்போவதில்லை" என மக்கள் மத்தியில் உறுதி..

தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் இன்று (16ம் தேதி) தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளிட்டார்.
வெளியானது விஜய்யின் 10 முக்கிய வாக்குறுதிகள்! 
"ஸ்டாலின் சார் மற்றும் பலர் போன்று ஏமாற்றப்போவதில்லை" என மக்கள் மத்தியில் உறுதி..
Published on
Updated on
4 min read

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் இந்த சமயத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் இன்று (16ம் தேதி) தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளிட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலான தாஜ் கோரமாண்டலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வந்த மக்களிடம் பேசிய N. ஆனந்த் மக்களை "மீண்டும் மீண்டும் நேரில் சந்தித்து, தவெகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குகளை சேகரியுங்கள்" என்று பேசினார். இதனை தொடர்ந்து தவெக-வின் தேர்தல் வாக்குறுதியின் முதல் பிரதியை விவசாயிக்கு வழங்கி சிறப்பித்தார். கல்வி பணி செய்யக்கூடிய ஆசிரியருக்கு அடுத்த பிரதியை வழங்கி சிறப்பித்தார். மேலும், ஆட்டோ ஓட்டுனர்களின் பிரதிநிதியாக சூர்யா, அங்கன்வாடி ஊழியர் பொன்னி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி SP. அமிர்த லிங்கம், மீனவர் சுகுமாறன், கைத்தறி நெசவாளர் பி.எஸ் லிங்கப்பன், மாற்று பாலினத்தவரான அனுஸ்ரீ வேலனுக்கு, இளைஞர் பி.ஜி. வினிஷ், எம். வனிதா, சோபியா, லட்சுமி அம்மா, எஸ். எம். எஸ் ஹமீது மௌலானா, உமுல் ஹபீபா ஆகியோர்க்கு முதல் பிரதியை வழங்கி சிறப்பித்தார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறளே தவெக-வின் அடிப்படை கோட்பாடு என்றும், அந்த திருக்குறளின், அறம், பொருள் இன்பத்தினை வைத்து தேர்தல் வாக்குறுதி அமைந்துள்ளதாகவும் தவெக தலைவர் விஜய் கூறினார். அறம் என்றால் நேர்மை, பொருள் என்றால், அரசியல் ஆட்சிமுறை, கல்வி, வேளாண்மை, வாழ்க்கைக்கு தேவையான பொருள் தேடும் முறை என்றும், இன்பம் என்றால் கலங்காத மனஉறுதி, தேடல், நேர்மையான உழைப்பு மூலம் வருவது என்றும் அவர் கூறினார்.

"நேர்மையையே ஒரு சித்தாந்தமாக எடுத்துள்ளது தவெக. ஸ்டாலின் சார் போன்று ஏதேதோ சொல்லியோ அல்லது அந்த மற்றும் பலர் போன்று அள்ளி விடப்போவதோ இல்லை". திமுக மற்றும் இந்த மற்றும் பலர், ஒன்றுதான் என்பதற்கு உதாரணம் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளும் ஒரே மாதிரி இருப்பதாக விஜய் சுட்டிக்காட்டினார். மேலும், "இந்த ஊழல் கூட்டம் போன்று நாம் ஏமாற்றப்போவது இல்லை" என்றும் மக்கள் மத்தியில் அவர் கூறினார்.

தனது தேர்தல் வாக்குறுதி 2026ல் முக்கியமான 10 அறிக்கைகளை மக்கள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் வாசித்தார்.

1. ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் மிக்கவர் என்று பறைசாற்றும் வெற்றி மகளிர் திட்டங்கள்: அதில், 60 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு பெண்ணிற்கும் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக 2,500/- செலுத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் தரப்படும். ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் 1 சவரன் 8 கிராம் தங்கமும் மற்றும் ஒரு தரமான பட்டு சேலையும் வழங்கப்படும். 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் தாய் அல்லது பாதுகாவலருக்கு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க ஆண்டுக்கு 15,000/- வழங்கப்படும். பெண்களால் நடத்தப்படும் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன்கள் வழங்கப்படும்.

2. உலகம் தரம் வாய்த்த கல்விக்கான உத்தரவாதம்: அதில், 100 காமராஜர் தார் கொண்ட பள்ளிகள். அனைத்து மாவட்டங்களிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தரமான கல்வியை வழங்கும் உறைவிட பள்ளிகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் நவீன, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு உருவாக்கப்படும். ஒவ்வொரு தமிழ் மாணவரின் கல்வி கனவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கல்வி கடன் கொடுக்கப்படும். எதிர்கால பயிற்சி மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இலவச போட்டி தேர்வு பயிற்சி.

3. மக்கள் நலம் பேணும் சுகாதார உத்தரவாதம்: அதில், போதை பொருள் இல்லா தமிழகம். பள்ளி கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மன்றங்கள் உருவாக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு 25 லட்சம் வரையிலான 'யூனிவேர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ்' வழங்கப்படும். அதில், புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய நோய்களுக்கான சிகிச்சைகளை உள்ளடக்கப்படும். ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை, அனைவருக்கும் மலிவு விலை மருந்து வழங்குதல் போன்றவை வழங்கப்படும்.

4. இளைஞர்களுக்கு ஏணிப் படிகளாக இருக்கும் உத்தரவாத திட்டங்கள்: வேலை வாய்ப்பு அலுவலங்கங்களில் பதிவு செய்தவர்களில், வேலையில்லா பட்டதாரி ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 4000மும், 12 வகுப்பு, ஐஐடி, டிப்ளமோ முடித்த ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாயும் வழங்கப்படும். ஆண்டுதோறும், 5 லட்சம் 'இன்டெர்ன்ஷிப்' செல்லும் மாணவர்களுக்கு பயிற்சியின் போது ரூ. 10,000மும் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 8,000 வழங்கப்படும். தொழில் முனைவோராக விரும்புவோர்க்கு ரூ. 25 லட்சம் பிணையில்லா தொழிலில் முனைவோர் கடனுக்கான உத்தரவாதம் அளிக்கப்படும். 'முதல்வன் மக்கள் சேவை நண்பன்' என்ற திட்டத்தின் படி மக்கள் வீட்டு வாசலிலேயே அரசின் திட்டங்களை பெறுவதை உறுதி செய்வதற்காக தமிழகம் முழுவதும், அந்தந்த பகுதிகளில் மாதம் ரூ.18,000 ஊதியத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான நிலையான ஆட்கள் சேர்ப்பு கால அட்டவணை உருவாக்கப்பட்டு அதை முறையாக செயல்படுத்தப்பட்டு, அரசு பணியில் 'காலிப்பணியிடங்கள் இல்லை' என்ற நிலை உருவாக்கப்படும்.

5. உழவர்கள் உள்ளம் மகிழும் திட்டங்கள்: 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலில் இருந்து பெறப்படும் அனைத்து பயிர் கடன்களும் முழு தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களிலில் இருந்து பெறப்படும் கடன்களுக்கு 50% தள்ளுபடி செய்யப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500, தென்னை விவசாயிகளுக்கு, கோப்புறை தேங்காய் விலை நிலைப்படுத்துதல், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகளுக்கு நேரடியாக ஆண்டுக்கு ரூ.10,000, 5 லட்சம் சோலார் பம்பு செட்டுகள் மற்றும் 100% பயிர் காப்பீடு ஆகியவை உறுதி செய்யப்படும்.

6. மீனவர் நலன்காக்கும் மேம்பாட்டு திட்டங்கள்: ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் மீன்பிடித்தடை காலத்திற்கு உதவியாக ரூ. 27,000 வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மீனவருக்கும் ரூ. 25 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். இந்தியாவில் முதல் முறையாக சட்டப்படியான எம்எஸ்பி குறைந்த பட்சம் ஆதார விலை நிர்ணயம். மத்தி, கானான் கெளுத்தி, இறால் மற்றும் கணவாய் ஆகியவற்றை உள்ளடக்கியது. அனைத்து மீனவர்களுக்கும் நிரந்தர வீடு கட்டித்தரப்படும் லட்சிய திட்டம் போன்றவை நிறைவேற்றப்படும்.

7. மக்கள் உரிமை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் சமூக பதுகாப்பு உத்தரவாதம்: முதியோர், விதவைகள் மாற்று திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியமாக ரூ. 3,000 வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம். அரசு நிலத்தில் வீடுகட்டி வருடக்கணக்கில் இருப்போருக்கு சட்டபூர்வமான மின் இணைப்பு, வீட்டு வரி போன்ற ஆவணங்களுடன் அனைவருக்கும் பட்டா முறைப்படுத்துதல் செய்யப்படும். அனைத்து வீடுகளுக்கும் 100% குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.

8. அரசு ஊழியர்கள் நல உத்திரவாதம்: சட்டப்படி முழு பழைய ஓய்வூதிய மறுசீரமைப்பு, ஒப்பந்த ஆசிரியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், தற்காலிக எழுத்தர்கள் போன்றோரை முறைப்படுத்துதல். அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை மாதம் 18,000 மாகவும் சமூக சுகாதார உதவிகளாற்றுவோருக்கு சம்பளத்தை ரூ. 10,000 மாகவும் உயர்த்தி வழங்கப்படும். 20 வருட சேவைக்கு பிறகு ரூ.15 லட்சத்திற்கு கருணை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 5 வருட வேலைக்கு பிறகு சம ஊதியம், பணி நிரந்தரம் செய்யப்படும்.

9. தமிழனின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்: "தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பொற்காலம்" என்ற நோக்கில் 2036குள் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்மிஸ் ரூ. 15 கோடி சேஃப்ட்டி நெட் மிகையான நிவாரணம், 50 லட்சம் வரையிலான மேம்பாட்டு நிதி. அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை உறுதி செய்ய பிரத்தேயேகமான ஒரு 'மாஸ்டர் பிளான்'. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நகரம் ஆகியவை தமிழ்நாட்டை செயற்கை நுண்ணறிவு தலைநகராக மாற்ற அமைக்கப்படும். முதலீட்டு இடமாக தமிழ்நாடு மாற்றப்படும். 21 நாட்களுக்குள் வணிக உரிமம் உத்திரவாதம், தமிழ் புலம்பெயர் முதலீட்டிற்கான சிறப்பு கொள்கை ஆகியவை நிறைவேற்றப்படும்.

10. நேர்மையான நல்லாட்சிக்கான உத்தரவாதம்: ரேஷன் உட்பட அரசின் திட்டங்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்குதல். சாதி சான்றித்தல், நில பட்டா, பிறப்பு சான்றிதழ் குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டப்பூர்வமாக வழங்கப்படும். லட்சமற்ற ஆட்சி அமைக்கப்படும். பொதுமக்களின் பிரச்சனைகளை நேரடியாக விசாரிக்க சட்ட மன்றத்தில் ஒரு நாள் ஒதுக்கப்படும். நிதி செலவினங்களில் 10% மக்கள் விருப்பப்படி தீர்மானிக்கப்படும் என்று தனது 2026 தேர்தல் வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் வாசித்தார்.

மேலும், அவரை 100% நம்பலாம் என்றும் பொய் வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன் என்றும், மக்கள் பணத்தில் 1 பைசாவை எடுக்கமாட்டேன் என்று விஜய் கூறினார். மேலும், விஜயும் வேட்பளர்களும் வேறு வேறு இல்லை ஆகவே அவர்களுக்கு வாக்களித்து தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றிபெற செய்யுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com