கரூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி. கரூரில் நடந்த துயர சம்பவத்தில் தனது மனைவி ஹேமலதா மற்றும் தனது இரண்டு மகள்கள் சாய் லக்சனா சாய் ஜீவா ஆகியோரை பறிகொடுத்தவர். இவர் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற விஜய் ஆறுதல் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இன்று கரூர் வந்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
“30 நாள் காரியம் முடித்துவிட்டு என்னையும் என் குடும்பத்தாரையும் கார் மூலமாக அழைத்து சென்று பின்னர் ஸ்லீப்பர் பேருந்து மூலம் மாமல்லபுரம் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். எங்களுக்கு உணவு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்தனர். அன்று இரவு அங்கு தங்கிய பிறகு திங்கள்கிழமை காலை 9.30 மணி அளவில் தனி அறையில் இருந்த விஜய் சந்திக்க எங்கள் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர். அந்த அறையில் அவரை தவிர வேறு எந்த உதவியோளரோ பாதுகாவலர் யாரும் இல்லை.
எங்கள் குடும்பத்தினர் அவரை தாக்கியிருந்தாலும் கூட வெளியில் யாருக்கும் தெரியாத நிலை இருந்தது. நாங்கள் அவரைக் கண்டதும் நிலை குலைந்து போனோம் என்னை விட மிகவும் பரிதாபமாக இருந்தார். என் அம்மாவை கண்டதும் அவரது கால்களில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் அம்மா என கதறி அழுதார். இதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை அவர்களோடு நான் கூறியதாவது அண்ணா வீடியோ காலில் பேசும் பொழுது நான் உங்களிடம் சொன்னேன் ‘என் பாப்பா போட்டோ உங்கள் கைகளில் இருந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்' என.. சொன்னேன் உடனே எனது மகள் போட்டோவை வாங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் ‘உங்களுக்கு என்ன தேவை எந்த விஷயம் இருந்தாலும் சொல்லுங்கள் நாங்கள் இறுதி வரை உங்கள் குடும்பத்துடன் இருப்போம்’ என உறுதி அளித்தார். அவர் நிலையை கண்டு எங்களால் மேலே ஏதும் பேச முடியவில்லை எங்கள் குடும்பத்துடன் மட்டும் சுமார் அரை மணி நேரம் பேசினார். பின்னர் நாங்களாக வெளியில் வந்து விட்டோம். அவர் நினைத்து இருந்தால் தனியாக விமான மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கரூருக்கு ஆறு வழியாக வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து சென்றிருக்கலாம்.
இந்த செலவு அவரோடு அவருக்கு மட்டும் தான் வந்திருக்கும் ஆனால் எங்கள் அனைவரையும் அழைத்து சென்று தங்க வைத்து உணவு கொடுத்து மன்னிப்பு கேட்கிறார். கரூருக்கு நேரில் முடியாததற்கு என்ன காரணம் எனவும் எங்களிடம் விளக்கினார். ‘இந்த பிரச்சனைகள் முடிந்தவுடன் நான் நேரடியாக கரூர் வந்து உங்கள் ஒவ்வொருவரது வீடுகளுக்கும் வருவேன் என உறுதி அளித்தார்’. என கூறினார்” மேலும் இது குறித்து விமர்சிப்பவர்களுக்கு “நீங்க வந்து என்கிட்ட பேட்டி எடுத்துட்டு போறீங்க அந்த வீடியோ கீழ கமெண்ட் பண்ணுவாங்க எவ்வளவு கேவலமா பதிவு பண்றாங்க பாதிக்கப்பட்டவங்க நாங்க. இந்த சம்பவம் அவர்கள் வீட்டில் நடந்து இருந்தால் இந்த மாதிரி கமெண்ட் பண்ணுவாங்களா? இவங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா?” என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.