minister aadhav arjuna  
தமிழ்நாடு

“தவெக அரசு விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக அமையும்” - ரூ.5 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி.. சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா அதிரடி!

முன்னாள் வேளாண்துறை அமைச்சருக்கு விவசாயிகளுக்கு கடன் இருப்பது தெரியாதா?...

Mahalakshmi Somasundaram

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முன்னாள் வேளாண்துறை அமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசினார். அதற்கு பேசிய அவர், “முதலில் ஒப்பீடு செய்வதே நியாயமா என்பதை பார்க்க வேண்டும். நமது ஆட்சி தொடங்கி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. மூன்று மாத ஆட்சியையும், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த அரசையும் ஒப்பிடுவது நியாயமானது கிடையாது” எனக் கூறினார்.

மேலும், முதலமைச்சர் விஜய்யின் முதல் பிரச்சார காலடி விவசாய பிரச்சினைக்காக பரந்தூரில் பதிந்ததாக தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பரப்புரையின்போது விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததாகவும், அதன் அடிப்படையில் தற்போது ரூ.5 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த திமுக, தனது தேர்தல் பரப்புரையில் விவசாயக் கடன் குறித்து பேசவில்லை. முன்னாள் வேளாண்துறை அமைச்சருக்கு விவசாயிகளுக்கு கடன் இருப்பது தெரியாதா?” என கேள்வி எழுப்பினார்.

“சொல் அல்ல, செயல். சொல்வதை செய்து காட்டக்கூடியவர் எங்கள் முதலமைச்சர். சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,750, கரும்புக்கு ரூ.4,000 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை அழைத்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்” என்றும் கூறினார். மேலும், இங்கு இருக்கும் யாராவது ரேஷன் கடைகளில் வழங்கு அரிசியை சாப்பிடுவோம்.. மக்கள் சமைத்து சாப்பிட முடியாத அளவுக்கு அரிசியின் தரம் குறைந்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வந்த கருத்துகளை முதலமைச்சர் கவனத்தில் எடுத்ததாகவும், சன்ன ரக நெல்லின் உற்பத்தியை அதிகரித்து, அதனை ரேஷன் கடைகளில் வழங்கும் நோக்கில் அதன் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

கரும்பு கொள்முதல் விலை ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். கடந்த சில ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாகவும், விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டால் சர்க்கரையை பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். இறுதியாக, “முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஐந்து ஆண்டு ஆட்சி விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக நிச்சயம் அமையும்” என ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்