தமிழ்நாடு

“சத்யபாமாவை நடிக்க தயார் செய்கிறார் விஜய்" - முதல்வரை ‘தற்குறி’ என விமர்சித்த TTV தினகரன்! தவெக-அதிமுக கூட்டணி பேச்சு நடந்ததா?

இந்தச் சூழலில், டிடிவி தினகரன் முன்வைத்துள்ள விமர்சனங்கள், முதல்வர் விஜய் மற்றும் தவெக ஆட்சி குறித்து அவர் பேசியது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

Muthu Lakshmi

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏற்கெனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக அறிவித்திருந்த நிலையில், தினகரனின் களப்பிரச்சாரம் அதிமுகவுக்கு கூடுதல் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. 

பிரச்சாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி, முதல்வர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் இடைத்தேர்தல் களம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, ஆட்சியை அமைப்பதற்காக நடைபெற்ற கட்சி தாவல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் சூழலை சுட்டிக்காட்டி, விஜய் தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அவர், பின்னர் தனது MLA பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததையடுத்து இந்த இடைத்தேர்தல் உருவானது. தற்போது அதே தொகுதியில் அதிமுக சார்பில் கனிதா சம்பத் களமிறங்கியுள்ளதால், இரு கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் மோதல் இரு தொகுதியிலும் முக்கிய விவாதமாகியுள்ளது. இந்தச் சூழலில், டிடிவி தினகரன் முன்வைத்துள்ள விமர்சனங்கள், முதல்வர் விஜய் மற்றும் தவெக ஆட்சி குறித்து அவர் பேசியது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

“அம்மாவின் கட்சியை முடிந்து போன கட்சி, தீர்ந்து போன கட்சி என்றும் அதிமுக திமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக நேற்று தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியிருந்தார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தினகரன், முதல்வர் தனது தற்குறி தனத்தை காண்பிக்கிறார். அண்ணா ஆரம்பித்த கட்சி திமுக, ஆனால் அவர் அதிமுகவை அண்ணா ஆரம்பித்த கட்சி என்கிறார்.

திமுக அதிமுக கூட்டணி குறித்து விஜய் பேசியது பொய் என்று மறுத்த தினகரன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், 107 சீட்டுகளோடு தவெகவால் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், தவெக உடன் கூட்டணி வைத்து, எங்களது கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயன்றோம். ஆனால், ஒத்துக்கொள்ளப்படவில்லை. அதனால், திருமாவளவனை முதல்வராக்க நினைத்தோம். இதில் திமுகவும், பாஜகவும் சம்பந்தப்படவில்லை. இதைப் பலமுறை கூறிவிட்டோம். நான் இதை மே 8-ம் தேதி கூடச் சொல்லியிருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழை ஒழுங்கா பேச தெரியாத அமைச்சர்கள் தவெக அமைச்சர்கள். இவர்களுக்கு ஆறாவது அறிவு உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தூய சக்தி என்னும் தவெக விஜய் திருட்டு தனமாக ஆசைவார்த்தை தெரிவித்து அவர்களை ரோட்டில் விட்டார். திக்கு தெரியாத காட்டில் நிற்கிறார்கள் ஆதரித்தவர்கள். தேர்தலில் மரகதம் குமரவேல் இந்த தேர்தலில் ஜெயிக்க வாய்பில்லை. இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடவார் மரகதம் குமரவேல்.

தவெக கட்சியை நாங்கள் கலைக்க வேண்டாம். உங்களது எம்.எல். ஏக்கள் உங்களை கவிழ்த்து விடுவார்கள். திமுக ஆட்சியை அழிக்க அதிமுக நினைத்ததில்லை, அதிமுகவை அழிக்க திமுக நினைத்ததில்லை. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த  ராத்திரியில் குடை பிடிப்பது போன்று.. காய்ந்த சிறகுகள் காற்றில் கோபுரத்திற்கு செல்லும் அடுத்த காற்றில் எங்கே செல்லும். ஆதவ் அர்ஜுனா அதிமுகாவில் துணை பொதுசெயளாலர் பதவிக்கு ஆசைப்பட்டார். தற்போது தவெகாவில் இணைந்து பெரும் பெட்டிகளை கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்