தமிழக சட்டமன்ற தேர்தலில் 107 தொகுதிகள் பெற்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தற்போது விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தனது 5 MLA களுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்னும் ஆட்சி அமைக்க 6 MLA ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே தொடர்ந்து இரண்டு நாட்களாக இடது சாரிகள் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக-விடம் ஆதரவு கேட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் இல்லையா என்பதை நாளை தெரிவிக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்த எம். பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் “இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்.. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதிகாரபூர்வமான அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார்” என தெரிவித்திருந்தார். மேலும் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என பேசப்பட்டு வந்த நிலையில், எம்.பி தம்பிதுரை அளித்த பதில் மீண்டும் அதிமுக திமுக கூட்டணி குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. அதனை தொடர்ந்து திமுகவின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அவர் “மக்கள் யாருக்குமே பெரும்பான்மை கொடுக்காத நிலையில் அது பெரிய குழப்பத்தை உண்டாகியுள்ளது. நங்கள் ஆளுநரே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம்” என கூறினார். மேலும் அதிமுக மற்றும் திமுக கூட்டணி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு “வந்ததிகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” என தெரிவித்தார்.
இதனால் தற்போது தமிழக அரசியலில் மூன்று முக்கிய சாத்தியக்கூறுகள் பேசப்படுகின்றன. ஒன்று, இடதுசாரி மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைப்பது. இரண்டாவது, திமுக வெளிநிலை ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பது. மூன்றாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அமையாத சூழலில் ஆளுநர் தலையீடு அதிகரித்து, அரசியல் மற்றும் சட்ட ரீதியான புதிய திருப்பங்கள் ஏற்படுவது. அடுத்த 48 மணி நேரம் தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் இறுதி முடிவு, தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை நிர்ணயிக்க கூடியதாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.