Vijay Coimbatore visit 
தமிழ்நாடு

"நீ வந்ததும்.. மழை வந்தது.." - கொட்டும் மழையில் விஜய்.. வழிநெடுகிலும் மக்கள் வெள்ளம்! கோவையில் கவனம் ஈர்த்த முதல்வரின் 'ரோடு ஷோ'

கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மக்கள் முதல்வரை காண வழி நெடுகிலும் காத்திருந்தனர்.

Vinvizhi Leninton

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கோயம்புத்தூரில் ₹300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவியல் மையமான பெரியார் அறிவுலகத்தை இன்று (அக் 16) திறந்து வைத்தார். சென்னையிலிருந்து முதலமைச்சர் வருகைக்கு முன்னதாக, பலத்த போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த விழாவினை முடித்து விட்டு, முதல்வர் விஜய் ஹெலிகாப்டர் மூலம் திருச்சூருக்கு நவராத்திரி விழாவினை காண செல்வார் எனக் கூறப்பட்ட நிலையில் மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளாவிலும் முதல்வருக்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் கேரளாவில் அவருக்கான வரவேற்பு எப்படி இருக்கும்? என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பயணமானது மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வா் விஜய் இன்று திறந்து வைத்தார். விழாவிற்காக இன்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தார். அப்போது பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்குச் செல்லும் வழியில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நடந்தது. அப்போது, ஆருத்ரா என்ற குழந்தைக்கு உதவிகோரி அக்குழந்தையின் பெற்றோர் பதாகை ஏந்தி நின்றுகொண்டிருந்துள்ளனர்.

இதனை கவனித்த முதல்வர் விஜய், பாதுகாவலர் மூலம் பெற்றோரிடம் இருந்து பதாகையை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதாக சைகை செய்து உறுதி அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து, அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மையத்தின், தரைத்தளம் உட்பட 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த எட்டு மாடிக் கட்டிடம், கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைக்குச் சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திறந்து வைத்த மையத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடவும் செய்தார் முதல்வர்.

இந்த திட்டத்திற்கு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், 2024 நவம்பர் 6 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வளாகத்தில் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட அச்சுப் புத்தகங்கள், ஒரு டிஜிட்டல் நூலகம், சிறுவர் நூலகம், வாசிப்புப் பிரிவுகள் மற்றும் ஊடாடும் அறிவியல் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இது நவீன கணினி அமைப்புகள், ஒரு பரந்த மின்-புத்தக வலையமைப்பு, டிஜிட்டல் ஆவணக்காப்பகங்கள் மற்றும் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஊடாடும் கற்றல் ஊடகங்கள் ஆகியவற்றைக் கொண்டும் மைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் விழாவினை முடித்து விட்டு கோவை விமனநிலையத்திற்கு செல்லும் வழியில், திறந்த வெளி வாகனத்தில் நின்று மக்கள் வெள்ளத்திற்கு நடுவே குடை பிடித்தபடி பயணித்தார். கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மக்கள் முதல்வரை காண வழி நெடுகிலும் காத்திருந்தனர்.

சாலையின் இருபுறத்திலும் கைகளை அசைத்தபடி முதல்வரை காண மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர். முதல்வர் விஜய் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் கையில் குடையுடன் மக்களுக்கு கைகளை அசைத்தபடி, இன்முகத்துடன் 'ரோடு ஷோ' சென்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.