"Social Status" - வாய்விட்ட அமைச்சர்.. தமிழில் இதுதான் அர்த்தமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

"பொன்னி அரிசி சாப்பிடுவது மக்கள் “ஸ்டேட்டஸாக” பார்க்கிறார்கள் என அமைச்சர் பேசியது சர்ச்சையானது.."
tvk minister
Published on: 
Updated on: 
2 min read

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 8.49 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவை உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களை சந்தித்த போது, நேற்று பொன்னி அரிசி சாப்பிடுவது மக்கள் “ஸ்டேட்டஸாக” பார்க்கிறார்கள் என அமைச்சர் பேசியது சர்ச்சையானது. அது இணையத்தில் பலரால் எதிர்க்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஆங்கிலத்தில் கூறியபோது தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், மக்களின் விருப்பத்தையே தான் குறிப்பிட விரும்பியதாகவும் விளக்கமளித்தார். மேலும், தான் சிறு வயது முதலே ரேஷன் அரிசி சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது, “உங்களது குடும்ப ரேஷன் அட்டையின் நிறம் என்ன?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “தனியாக வாருங்கள், சொல்கிறேன்” என்றார்.

தொடர்ந்து தனது கருத்தை விளக்கிய அமைச்சர், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடுவதை மக்கள் மகிழ்ச்சியான அனுபவமாகக் கருதுவதாகவும், அதையே சமூக அந்தஸ்து என்ற பொருளில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். மக்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அரிசி விலை உயர்வு குறித்தும் கேள்விகள் எழுந்தன. ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கப்படுவதாக அங்கிருந்த பெண் ஒருவர் குரல் எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசு கிடங்குகளில் இருந்து அரிசியைக் கொள்முதல் செய்து அமுதம் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் வெளிச்சந்தையைவிடக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகத் தெரிவித்தார். மேலும், மலிவு விலையில் சன்ன ரக அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ரேஷன் கடைகளில் பொன்னி அரிசி போன்ற அரிசியை வழங்குவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த வெங்கட்ராமணன், சன்ன ரக அரிசியையே பொன்னி அரிசி என்று குறிப்பிடுவதாக விளக்கமளித்தார். மோட்டா ரக அரிசி குண்டாக இருக்கும் என்றும், சன்ன ரக அரிசி அதிலிருந்து வேறுபடும் என்றும் அவர் கூறினார். ரேஷனில் வழங்கப்படும் அரிசியை மக்கள் இட்லி அரிசியாக மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, “நீங்கள் ரேஷன் கடைக்குச் சென்று மக்கள் என்ன வாங்குகிறார்கள் என்பதை அவர்களோடு இருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார். தனக்குத் தேவையான அரிசியை ரேஷன் கடையில் வாங்கிப் பயன்படுத்துவதாகவும், மக்கள் அனைவரும் ரேஷன் அரிசியைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரமும் முக்கியம் என்றும், அதற்காகவே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். ரேஷன் அரிசியின் தரம் மற்றும் மக்களின் உணவுப் பழக்கம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், அவரது விளக்கங்கள் கவனம் பெற்றுள்ளன.

இதற்கிடையே, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, பட்டினப்பாக்கம் மீனவர்கள் விஜய்யைப் பார்த்துத்தான் வாக்களித்தார்கள் என்றும், தனக்காக வாக்களிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தனது தேர்தல் பிரச்சாரத்தை மீனவ மக்களிடமிருந்தே தொடங்கியதாகத் தெரிவித்தார்.

மேலும், சீனிவாசபுரம் முல்லை நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முயன்றதாகவும், அதற்காக 30 நாட்களுக்கான கட்டணத்தைச் செலுத்தி மண்டபத்தைப் பயன்படுத்த முற்பட்டபோதும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வெங்கட்ராமணன், அந்தப் பணிகள் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகத் தெரிவித்தார். பொன்னி அரிசி குறித்த சர்ச்சை, ரேஷன் அரிசியின் தரம் மற்றும் விலை உயர்வு தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com