திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் குடிநீர் பிரச்சினை மற்றும் குப்பைகள் தேங்கி கிடந்தது தொடர்பாக துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கரை நேரில் சந்தித்து புகார் கொடுக்க சென்றுள்ளார். அவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் சரமாரியாக தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட கார்த்திக் குமார் “நான் தளபதிக்கு தான் வாக்களித்தேன்” என்று கூறும் போதும் நபர் ஒருவர் அவரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரல் ஆனது. தளபதி விஜய் என்று முதல்வர் விஜய் பெயரை பலமுறை கூறியபோதும் அதையும் பொருட்படுத்தாமல் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் கார்த்திக் குமாரை விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். அரசு பொறுப்பில் இருப்பவர் பொதுமக்களிடம் இப்படியா நடந்து கொள்வது என்ற விவாதங்களும் எழுந்தன.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியானது. அதில் குறை சொல்ல வந்த நபர், துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்தபடி ஒரு வீடியோ வெளியானது. அதில் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை சமூக ஊடகங்களில் தவறாக சித்தரித்து வெளியிட்டதாகவும், ஒரே கட்சிக்குள் ஒன்றாக சேர்ந்து பயணித்து வருவதாகவும் பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்த்திக் குமார் இன்று மற்றொரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் துணை சபாநாயகரை சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக சென்ற தன்னை தகாத வார்த்தையால் பேசி திட்டி தாக்கியதுடன் தனது இருசக்கர வாகன சாவியை, மூன்று பவுன் தங்கச் செயின், கண்ணாடியை பறித்துவிட்டு துரத்தி அடித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அட்மிட் ஆன தன்னை துணை சபாநாயகர் அடித்ததாக புற காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகும் அவர்கள் அடையாளம் தெரியாத நபர் அடித்ததாக வழக்குப்பதிந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆய்வாளர் கிருபாநிதி அவரை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, துணை சபாநாயகர் வீட்டிற்கு சென்று அத்துமீறியதற்கு என் மீது வழக்கு பதிந்து விடுவதாக மிரட்டியதுடன், நாங்கள் சொல்வது போல பேச வேண்டும் என்றும் வீடியோ வெளியிட வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சொல்வது போல பேசி வீடியோ வெளியிடாவிட்டால் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் எனக்கு பல பதவிகளை கொடுத்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டுப்பாருங்கள்.. எது வேண்டுமானாலும் செய்வார் என்று துணை சபாநாயகர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கார்த்திக் குமார், எனது உயிரை காப்பாற்றிக் கொள்ளவும் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த நேரத்தில் அந்த முடிவினை எடுத்ததாகவும், ஆறு, ஏழு முறை வீடியோ டேக் எடுத்து அதிலிருந்து ஒரு வீடியோவை தேர்வு செய்து பின்னர் சமூக வலைதளங்களில் துணை சபாநாயகர் தரப்பினர் வெளியிட்டதாகவும் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாக்கியதாக வெளியான வீடியோ குறித்து பேசிய அவர், நடந்த சம்பவம் உண்மைதான் என்றும் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை ஆனால் மிரட்டலின் காரணமாகவே வீடியோவில் நான் பேசினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். துணை சபாநாயகர் ரவிசங்கரின் இந்த அராஜக போக்குக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், அவர் மீது முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழக தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.