வங்கக்கடலில் உருவான “டித்வா” புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழலந்துள்ள நிலையிலும் தொடர்ந்து சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர்,திண்டுக்கல்,தேனீ, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 18 மணிநேரமாகமாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ள டித்வா சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையை கொடுத்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று பெய்த கனமழையில் சென்னை தாசமஹால் சாலையில் அமைந்துள்ள சுமார் 80 ஆண்டுகளுக்கு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் இட்லி கடை நடத்தி வந்த பெண் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பேசியுள்ள வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புயல் கரையை கடந்த நிலையிலும் அடுத்தடுத்த காற்று ஊடுருவல் காரணமாக கடலோர மாவட்டங்களிலில் அதிகாலை முதல் காலை வரையிலும் உள் மாவட்டங்களில் மாலை முதல் இரவு வரையிலும் வரும் (டிச 06) தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறிய இடைவெளி ஏற்பட்டு மீண்டும் (டிச 15) தேதி பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.