Trichy ration shop 
தமிழ்நாடு

"இதை எப்படி சாப்பிடுவது?" - கழிவறை அருகே ரேஷன் கடை.. அரிசியில் மொய்க்கும் வண்டுகள்! முதல்வர் விஜய் சொன்னது நடக்குமா?

அரிசியில் வண்டுகள் இருப்பதை அறிந்த அதிகாரிகள் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Vinvizhi Leninton

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள 'அமராவதி ரேஷன்' கடையில் வண்டுகள் மொய்த்த அரிசியை விநியோகம் செய்வதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அங்கு இயங்கி வரும் ரேஷன் கடை இயங்கி வரும் கட்டிடத்தில் சேதமடைந்த தரை தளத்திலிருந்து வண்டுகள் அரிசியில் மொய்த்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அரியமங்கலம் சீனிவாசன் நகரில் அமராவதி ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களாக அரிசியில் வண்டு மொய்த்த வண்ணம் இருப்பதாகவும் அதனை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Trichy ration shop

தொடர்ந்து அரசின் அலட்சியத்தால், ஏழை மக்கள் உண்ணக்கூடிய ரேஷன் அரிசியானது தரமற்ற முறையில் விநியோகம் செய்து வருவதால் அதனை சில குடும்ப அட்டைதாரர்கள் வாங்க மறுத்து வருவதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (நவ 21) குடும்ப அட்டைதாரர் ஒருவர் வாங்கிய ரேஷன் புழுங்கல் அரிசியில் சிறிய வண்டுகள், பெரிய வண்டுகள் என அதிகப்படியான வண்டுகள் உண்ணக்கூடிய அறையில் மொய்த்த வண்ணம் காணப்பட்டது. இதனை வாங்க மறுத்த குடும்ப அட்டைதாரர் இது போன்ற அரிசிகளை அரசு விநியோகம் செய்யக்கூடாது எனவும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். மேலும் அங்கிருந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ரேஷன் கடைக்காரரிடம் அரிசியில் வண்டு மொய்த்திருப்பது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அரிசியில் வண்டுகள் இருப்பதை அறிந்த அதிகாரிகள் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த ரேஷன் கடை இயங்கி வரும் கட்டிடத்தில் சேதமடைந்த தளத்திலிருந்து வரும் வண்டுகள் அரிசியில் மொய்த்து வருவதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கட்டிடத்தை சீரமைக்கும் வரை வேறொரு கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trichy ration shop

இது மட்டுமின்றி, இந்த ரேஷன் கடைக்கு அருகில் பொது சுகாதார கழிப்பறைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரேஷன் கடையில் துர்நாற்றம் வீசி வருவதாகவும், அருகில் இருந்து விஷ வண்டுகள், புழுக்கள் ஆகியவை ரேஷன் பொருட்களின் மொய்த்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை தரப்பில் இருந்து, துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கழிவறைபகுதியில் உள்ள ரேஷன் கடையை மாற்றி வேறொரு இடத்தில் அமைத்து தர வேண்டியும், தரமான ரேஷன் பொருட்களை அரசு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கல்ல தங்களின் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

ஏற்கனவே, முந்தைய ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ரேஷன் அரிசியானது கால்நடைத் தீவனமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று வருவாய்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்றத்தில் பேசியது விவாதத்தை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மே மாதம் முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு "ரேஷன் கடைகளில் தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரத்தில், மக்கள் சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் அரிசியில் வண்டுகள் மொய்த்திருப்பது பேசுபொருளாகி, உயர் அதிகாரிகள் காதிற்கு வரை சென்றுள்ள நிலையில் இது குறித்து அந்த குறிப்பிட்ட துறை அமைச்சர் கவனத்திற்கு எடுத்துசெல்லப்படுமா? முதல்வர் கூறியதுபோல கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.