"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி தொகுதி, தோல் தொழிற்சாலைகள் மற்றும் பிரியாணிக்கு உலகப் புகழ்பெற்றது. 51 சதவீத கிராமப்புறம் மற்றும் 49 சதவீத நகர்ப்புறத்தைக் கொண்ட இந்தத் தொகுதியில், சிறுபான்மையினரின் வாக்குகள் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.
வாணியம்பாடி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 36 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 33.9 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக நாயுடு சமுதாயத்தினர் 26 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் 19 சதவீதமும், முதலியார்கள் 14 சதவீதமும், முஸ்லிம்கள் 12 சதவீதமும் உள்ளனர். தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாக்குகள் இந்தத் தொகுதியில் மிக முக்கியமானவை.
வாணியம்பாடி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் பாலாற்றில் கலப்பது பெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவேரி கூட்டு குடிநீர் திட்டம் முறையாகச் செயல்படவில்லை என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர். சுவாச நோய்கள் மற்றும் தோல் நோய்கள் இப்பகுதியில் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதும் வாணியம்பாடி மக்களின் பிரதான குறையாக உள்ளது.
தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 44 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 54.4 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 46.6 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 38.1 சதவீதமாகச் சரிந்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 79 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 130 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 101 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 91 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 23 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, வாணியம்பாடியில் அதிமுக 120 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 90 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 90 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 37 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.