மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதுமே அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் வட்டாரங்களில் சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே புதிய கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா, தற்போது கட்சியின் பெயரையும் அறிவித்து முழுநேர அரசியலில் களம் இறங்கியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக மக்களின் நலனுக்காகவும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இந்தப் புதிய கட்சி பாடுபடும் என்று உறுதிப்படத் தெரிவித்தார். திராவிட அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் பெயரை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடப் போகும் சின்னத்தையும் சசிகலா அறிமுகப்படுத்தினார். தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட "தென்னந்தோப்பு" சின்னத்தில் தனது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அவர் அறிவித்தார். தென்னந்தோப்பு சின்னம் என்பது விவசாயிகளோடும், சாமானிய மக்களோடும் நெருங்கிய தொடர்புடைய ஒன்று என்பதால், இது மக்களிடையே எளிதில் சென்றடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தச் சின்னத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளர்கள் தென்னந்தோப்பு படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி அணிவகுத்து நின்றனர்.
தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் குழப்பங்கள் தன்னை வேதனையடையச் செய்ததாகக் குறிப்பிட்டார். "திமுக என்ற தீய சக்தியைத் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே அம்மாவின் லட்சியம். அந்த லட்சியத்தை நிறைவேற்றவும், உண்மையான விசுவாசிகளை ஒன்றிணைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று அவர் ஆவேசமாகப் பேசினார். அதிமுகவின் வாக்கு வங்கியில் சசிகலாவின் இந்தப் புதிய கட்சி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் நோக்கர்களின் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தென் மாவட்டங்களில் சசிகலாவிற்கு இருக்கும் செல்வாக்கு, தென்னந்தோப்பு சின்னத்தின் மூலம் வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய்யுடன் கூட்டணி சேர்வீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, "எங்கள் கருத்தோடு ஒத்துப் போகும் எந்த கட்சியோடும் நாங்கள் சேர்ந்து பயணிப்போம்" என்று முடித்துக் கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்