தமிழ்நாடு

பழனியில் 'ஐபி. செந்தில்குமார்' வியூகம் பலிக்குமா? அறுபடை வீட்டின் அரசியல் கணக்கை மாற்றப்போவது யார்? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் அதிரடி கணிப்புகள்!

அதிமுக 2021-ல் 99 பூத்களில் ஸ்ட்ராங்காக இருந்தது, தற்போது அது 84 ஆகக் குறைந்துள்ளது

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் பழனி தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மீக மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பழனி தொகுதியில், வரும் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

வாக்காளர் அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு:

பழனி தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்கள் 11.9% ஆக உள்ளனர். பெண் வாக்காளர்கள் 51.2% ஆக உள்ளதால், பெண்களின் வாக்குகள் இங்கு வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக ரீதியாகப் பார்த்தால், இது ஒரு கலவையான தொகுதியாகும். இங்கு தேவேந்திர குல வேளாளர்கள் 17%, வேளாள கவுண்டர்கள் 15%, பிள்ளைமார்கள் 12%, மற்றும் முக்குலத்தோர் 10% என உள்ளனர். முஸ்லிம் சமூகத்தினர் 10% அளவில் உள்ளனர். மற்ற சமூகத்தினர் 30% உள்ளனர்.

முக்கிய உள்ளூர் பிரச்சனைகள்:

பழனி ஒரு முக்கியமான ஆன்மீகத் தலம் என்பதால், அடிவாரப் பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. மலைப் பாதைகளில் ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு ஆகியவை பிரதான பிரச்சனைகளாக உள்ளன. மேலும், இப்பகுதியின் முக்கிய விவசாயப் பயிர்களான மாம்பழம் மற்றும் கொய்யா விளைச்சலைப் பதப்படுத்தத் தேவையான தொழிற்சாலைகள் இல்லாமை விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது.

பழனி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் வரலாறு (2021 vs 2024):

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஐபி செந்தில்குமார் அவர்கள் 53.2% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக 38.4% வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தனது நிலையை மேலும் உயர்த்தி 56.2% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே சமயம் அதிமுக 34.6% ஆகச் சரிந்துள்ளது. நாம் தமிழர் கட்சி 3.8%-லிருந்து 6.82% ஆகத் தனது வாக்குகளை உயர்த்தியுள்ளது.

2026 தேர்தல் கணிப்பு மற்றும் பூத் நிலவரம்:

வாக்குச் சாவடி வாரியாகப் பார்த்தால், 2021-ல் திமுக 140 பூத்களில் வலுவாக இருந்தது. 2024-ல் அது 132 ஆகச் சற்று குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 99 பூத்களில் ஸ்ட்ராங்காக இருந்தது, தற்போது அது 84 ஆகக் குறைந்துள்ளது. வரும் 2026 தேர்தலில் திமுக 105 பூத்களிலும், அதிமுக 90 பூத்களிலும் வலுவாக இருக்க வாய்ப்புள்ளது. சுமார் 90 பூத்கள் ஸ்விங் பூத்களாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 முன்கூட்டிய கணிப்பின்படி, திமுக கூட்டணி 36% வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. அதிமுக 34% வாக்குகளைப் பெறக்கூடும். நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 24% வாக்குகளைப் பிரிக்கும். வெற்றி வித்தியாசம் வெறும் 2% ஆக மட்டுமே இருக்கும். இம்முறை சிபிஐ(எம்) வேட்பாளர் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், மிக நெருக்கமான போட்டியில் திமுக கூட்டணிக்குச் சிறிய முன்னிலை இருப்பதாகக் கணிப்புகள் கூறுகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.