காவிரி விவகாரம்: "ஒரு சொட்டு கூட தண்ணீர் வராது!" - சௌமியா அன்புமணி எச்சரிக்கை TN Assembly
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: "ஒரு சொட்டு கூட தண்ணீர் வராது!" - சௌமியா அன்புமணி எச்சரிக்கை

ஜூன்மாதம் வழங்க வேண்டிய 9.18 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக வெறும் 2 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டது. ஜூலை மாதம் 31.24 டிஎம்சி வழங்க வேண்டிய இடத்தில் 1 டிஎம்சி-க்கும் குறைவாகவே வழங்கப்பட்டது. - சௌமியா அன்புமணி

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் இன்று, காவிரியில் மேகதாது அணை கட்டக் கூடாது என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, கர்நாடக அரசு தமிழ்நாட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அணை கட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எடுத்துரைத்தார்.

நீதிமன்றத்தை மதிக்காத கர்நாடக அரசு

தனது உரையில் அவர் கூறியதாவது:

"ஆண்டுக்கு 750 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வருகிறது என்பதுதான் ஒரு கணக்கு. இதில் தமிழ்நாட்டுக்கு 404 டிஎம்சிக்கு மேல் உரிமை இருக்கிறது. ஆனால், இது பல்வேறு பேச்சுவார்த்தைகளில் குறைக்கப்பட்டு, இன்றைக்கு 175.25 டிஎம்சி ஆக இருக்கிறது. புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, கேரளாவுக்கு 25 டிஎம்சி.

இதனை ஒவ்வொரு மாதமும் ஒரு டைம் டேபிள் போட்டு கர்நாடக அரசு நமக்குத் தந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அப்படி தந்ததாக வரலாற்றில் பதிவு கிடையாது."

"ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.18 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக வெறும் 2 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டது. ஜூலை மாதம் 31.24 டிஎம்சி வழங்க வேண்டிய நிலையில், 1 டிஎம்சிக்கும் குறைவாகவே வழங்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆணையத்தின் தீர்ப்பையோ அல்லது உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மதிக்கவில்லை. தற்போது ஆடிப்பெருக்கு விழாவிற்காக வந்த நீர், கர்நாடக அரசு மனமுவந்து கொடுத்தது அல்ல; கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு, கபினி அணை நிரம்பியதால் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்ட உபரி நீர் மட்டுமே.

ஹாரங்கி அணையில் இருக்கிற தண்ணீரையோ, ஹேமாவதி அணையில் இருக்கிற தண்ணீரையோ, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருக்கிற தண்ணீரையோ அவர்கள் திறந்து விடவில்லை."

அன்புமணி கேட்ட அந்தக் கேள்வி

"நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து அன்புமணி அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கடைமடை மாநிலமான தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்காமல் கர்நாடகா அணை கட்ட முடியுமா என்ற கேள்விக்கு, முதல்மடை மாநிலங்கள் அனுமதி பெறத் தேவையில்லை என அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) மத்திய அரசோ அல்லது நாடாளுமன்றமோ இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்பதை நீர்வளத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களைப் பெற்றதே மருத்துவர் அன்புமணி அவர்கள்தான். அப்படி இருக்கும்போது, அவருடைய ஆலோசனையைக் கேட்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்."

தமிழகத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அணை எதற்காகத் தெரியுமா?

"மேகதாது அணையை எங்கு கட்டப்போகிறார்கள் தெரியுமா? நம்ம தமிழ்நாட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில். மற்ற அணைகள் எல்லாம் எங்கோ தள்ளி, தள்ளி 200 கிலோமீட்டர், 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லையிலேயே 4 கிலோமீட்டர் தொலைவில் எதற்காகக் கட்டப்போகிறார்கள்? ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்த அணை கட்டப்படுவதால் மூன்று வனவிலங்கு சரணாலயங்கள் பாதிக்கப்படும். 12,500 ஏக்கர் காடுகள் அழிந்துவிடும். பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் புலிகள் காப்பகம் இருக்கிறது. காவிரி வனவிலங்கு சரணாலயம் இருக்கிறது. அத்துடன், மாதேஸ்வரன் மலை சரணாலயமும் இருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய நீர்வேம்பு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட மரங்கள், 700 ஆண்டுகள் பழமையான மரங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிடும்."

"சாம்பல் நிற நீர்நாய்கள், மகாசீர், மயில் கெண்டை மீன்கள், நான்கு கொம்பு மான்கள் என அனைத்துமே அழிந்துவிடும். இதையெல்லாம் அழித்துவிட்டுத்தான் மேகதாது அணையைக் கட்டப்போகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். இதற்காக நிறைய சுற்றுச்சூழல் வழக்குகளைத் தொடர்ந்து, இந்த அணையைக் கட்டவிடாமல் நாம் தடுக்க வேண்டும்.

ரெண்டே ரெண்டு ஆப்ஷன்தான். ஒன்று, மேகதாது அணையைக் கட்ட வேண்டும்; இல்லையென்றால், மேகதாது அணையைக் கட்டக்கூடாது. இதற்கு நடுவில் எந்த முயற்சியும் தேவையில்லை. அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கண்டிப்பாக ஓர் ஒத்த முடிவோடு நாம் டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை."

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்