அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் தொடர்புகள் குறித்து தொடர்ந்து பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறுமிகள் மற்றும் இளம் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட எப்ஸ்டீன், அமெரிக்காவில் மட்டுமின்றி ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் தனது தொடர்புகளை விரிவுபடுத்த முயன்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, ரஷ்யாவைச் சேர்ந்த 17 இளம் பெண்கள் அவரது பாலியல் கடத்தல் வலையமைப்பில் சிக்கியதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எவ்வாறு இந்த வலையமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்க ஆவணங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. அடையாளம் காணப்பட்ட 17 பெண்களில் மூன்று பேர், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டலுக்கு எதிராக பின்னர் நீதி கேட்டு முன்வந்துள்ளனர்.
எப்ஸ்டீனுக்கு ரஷ்யா மீதான ஆர்வம் 1990களிலேயே தொடங்கியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியம் 1991ஆம் ஆண்டு சிதைந்த பிறகு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் மாடலிங் துறை வளர்ச்சியடைந்தது. இதைப் பயன்படுத்தி பல மாடலிங் நிறுவனங்கள் இளம் பெண்களைத் தேடி வந்தன. இந்தத் துறையில் தொடர்புடையிருந்த பிரெஞ்சு மாடலிங் முகவர் ஜீன்-லுக் புருனெல், ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெண்களைத் தேர்வு செய்து பாரிஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புருனெலுக்கும் எப்ஸ்டீனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
1991ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒரு விருந்தில் எப்ஸ்டீனைச் சந்தித்ததாக முன்னாள் மாடல் தைசியா ஹுயிஸ்மன் தெரிவித்துள்ளார். அப்போது மிகவும் இளம் வயதுடையதாகத் தோன்றிய ஒரு ரஷ்யப் பெண், அந்த விருந்தில் எப்ஸ்டீனுடன் அதிக நேரம் இருந்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். அந்தப் பெண் மாடலிங் வேலை சரியாக இல்லை என்றும், எப்ஸ்டீன் தன்னைப் பார்த்துக்கொள்வதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தச் சம்பவம் மற்றும் அந்தப் பெண்ணின் அடையாளம், வயது ஆகியவற்றைத் தனியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் 1998 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். முதல் பயணத்தில் சோவியத் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய சரோவ் நகருக்குச் சென்றார். இரண்டாவது பயணத்தில் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்களுக்குச் சென்றதாக விமானப் பயணப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்போது அவருடன் புருனெல் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
2008ஆம் ஆண்டு சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். அதன்பிறகும் தனது செல்வாக்கையும் செல்வந்தர்களுடனான தொடர்புகளையும் மீண்டும் உருவாக்க ரஷ்யாவைச் சேர்ந்த முக்கிய நபர்களுடன் நெருக்கம் ஏற்படுத்த முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விளாடிஸ்லாவ் டோரோனின் மற்றும் முன்னாள் துணைப் பொருளாதார அமைச்சர் செர்கே பெல்யாகோவ் ஆகியோர் அவரது தொடர்பு வட்டத்தில் இருந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு முன்னாள் இஸ்ரேல் பிரதமர் எஹுட் பாரக்குக்கு அனுப்பிய மின்னஞ்சலில், பெல்யாகோவ் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், எப்ஸ்டீன் புதினை நேரில் சந்தித்ததற்கோ, ரஷ்ய உளவுத்துறையுடன் பணியாற்றியதற்கோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று விசாரணை தெளிவுபடுத்தியுள்ளது.
எப்ஸ்டீன் 2019ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்தார். அப்போது அவர் சிறுமிகள் தொடர்பான பாலியல் கடத்தல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வந்தார். ரஷ்யாவில் செல்வாக்கு பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவிலான வணிக ஒப்பந்தங்களாகவோ, புதினைச் சந்திக்கும் வாய்ப்பாகவோ மாறவில்லை. இருப்பினும், அவரது சர்வதேசத் தொடர்புகள் மற்றும் பாலியல் கடத்தல் வலையமைப்பு குறித்த விசாரணைகளில் ரஷ்யத் தொடர்புகள் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.