அமெரிக்காவில் உள்ள 'டார்கெட்' (Target) பல்பொருள் அங்காடியில் இந்தியப் பெண் ஒருவர் ₹1.1 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான போலீசாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இந்தியர்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு 'டார்கெட்' கடையில், இந்தியப் பெண் ஒருவர் சுமார் 7 மணி நேரம் சுற்றித் திரிந்துள்ளார். அவர் டிராலி முழுக்க பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்குப் பணம் செலுத்தாமல் வெளியேற முயன்றபோது, கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
போலீசாரின் 'பாடிகேமரா'வில் (உடலில் பொருத்தப்பட்ட கேமரா) பதிவான வீடியோவில், அந்தப் பெண் அதிகாரிகளிடம், "நான் இந்த நாட்டவள் அல்ல. இங்கு இருக்கப் போவதும் இல்லை. நான் பொருட்களுக்குப் பணம் செலுத்திவிடுகிறேன், என்னை விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சுவது பதிவாகியுள்ளது. அதற்கு அதிகாரி ஒருவர், "நீங்கள் கடையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பணம் செலுத்தி இருக்கலாம். அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, இப்போது பணம் செலுத்த முடியாது" என்று பதிலளித்துள்ளார்.
மேலும், போலீசாரின் விசாரணையின்போது, அந்தப் பெண் குஜராத்தி மொழியைத் தனது தாய்மொழி என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மூச்சு திணறலுடன் பதட்டமாகப் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. போலீசார், அவருக்கு மொழிபெயர்ப்பாளர் தேவையா என்று கேட்க, அவர் ஆங்கிலத்தில் பேச முடியும் என்று மறுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "ஒரு நாட்டிற்குச் சென்று அந்நாட்டின் சட்டத்தை மீறுவது வெட்கக்கேடானது" என்றும், "இந்தச் செயல் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கெடுத்துவிட்டது" என்றும் பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. "அமெரிக்காவில் திருட்டு, தாக்குதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், விசா ரத்து செய்யப்படலாம். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது" என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.