செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்தனவா? என்பதை அறிய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். கோளின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வறண்ட ஏரிப்படுகையில் உருவான பாறையில், ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவரால் உறுதிசெய்யப்பட்ட ஏழு விதமான கரிமச் சேர்மங்களில் ஐந்து, செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு ஒருபோதும் அடையாளம் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நமது கோளில் உள்ள உயிரினங்களில் மரபணுத் தகவல்களைக் கொண்டு செல்லும் மூலக்கூறான டிஎன்ஏ-வின் முன்னோடிகளைப் போன்ற அமைப்பைக் கொண்ட மற்றொரு கரிமச் சேர்மம் இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
கரிமச் சேர்மங்கள் என்பவை, முதன்மையாக கார்பன் அணுக்கள் மற்ற தனிமங்களுடன் பிணைந்து உருவான மூலக்கூறுகளாகும். இவை பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் கட்டமைப்பு அடிப்படையாக அமைகின்றது. செவ்வாய் கிரகத்தில் அடையாளம் காணப்பட்ட இவற்றின் மொத்த எண்ணிக்கை தற்போது பல டஜன் கணக்கில் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சேர்மங்கள் அனைத்தும் உயிரியல் அல்லாத செயல்முறைகள் மூலமாக உருவாகியிருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பூமி மற்றும் சூரிய மண்டலத்தின் பிற கோள்களைப் போலவே, செவ்வாய் கிரகமும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒன்று. தொடக்கத்தில், செவ்வாய் கிரகம் இன்றுள்ள குளிர் மற்றும் வறண்ட இடத்தைக் காட்டிலும், வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. 'ரோவரால்' மாதிரியாக எடுக்கப்பட்ட பாறையானது, அதாவது பாயும் நீரால் படியவைக்கப்பட்ட வண்டல் குறைந்தது 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தற்போது மதிப்பிட்டுள்ளனர். "செவ்வாய் கிரகத்தில் எப்போதாவது உயிர்கள் வாழ்ந்தனவா? என்று நம்மால் இன்னும் கூற முடியாது, ஆனால் பூமியில் உயிர்கள் தோன்றிய காலகட்டத்தில் செவ்வாய் கிரகம் ஒரு வாழக்கூடிய உலகமாக இருந்தது என்பதற்கான சான்றுகளை எங்கள் கண்டுபிடிப்புகள் மேலும் ஆதரிக்கின்றன," என்று 'கியூரியாசிட்டி' அறிவியல் குழுவின் உறுப்பினரான ஏமி வில்லியம்ஸ் கூறியுள்ளார். கடந்த கால உயிரினங்கள் இருந்ததற்கான சான்றுகளைத் தற்போது திட்டவட்டமாக அடையாளம் காண, அங்குள்ள பாறை மாதிரிகளைப் பரிசோதனைக்காக பூமிக்கு கொண்டு வர வேண்டியிருக்கும். "தெளிவாகச் சொல்வதானால், இந்த ஆய்வின் மூலம் உயிரினங்கள் இருந்ததற்கான ஆதாரத்தை நாங்கள் கண்டறியவில்லை, ஆனால் செவ்வாய் கிரகத்தில் இருந்த அடிப்படை மூலக்கூறுகளை நாங்கள் மேலும் செம்மைப்படுத்தி வருகிறோம்," என்று வில்லியம்ஸ் மேலும் கூறினார். இந்தச் சோதனையானது, ரோவரின் செவ்வாய் கிரக மாதிரிப் பகுப்பாய்வு கருவி மூலம் நடத்தப்பட்டது.
மேலும், "இந்தக் கரிமப் பொருள் புவியியல் செயல்முறைகள் மூலமா?, விண்கற்களிலிருந்து விழுந்ததா?, அல்லது உயிரினங்களால் வந்ததா? என்பதை நம்மால் கூற முடியாவிட்டாலும், உயிரினங்களின் சிக்கலான கரிமப் பொருள் செவ்வாய் கிரகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தால், தற்போதைய மற்றும் வரவிருக்கும் ரோவர் கருவிகளைக் கொண்டு நம்மால் அதைக் கண்டறிய முடியும் என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது," என்று வில்லியம்ஸ் கூறினார். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்வதிலும், கரிமப் பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும் நாசாவின் ரோவர்கள் முன்னணியில் இருந்து வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்