விக்டோரியாவில் உள்ள மலையாளி சங்கத்தின் ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது, மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது கைப் பையைச் சோதனை செய்த அதிகாரிகள், அதில் மல்லிகைப்பூ இருந்ததால் அவருக்கு AUD 1,980 (இந்திய மதிப்பில் சுமார் ₹1.14 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கடுமையான விதிகள் ஏன்?
ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்விகத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்க, வெளிநாட்டிலிருந்து தாவரங்கள், பூக்கள், விதைகள், பழங்கள், காய்கறிகள் அல்லது விலங்குப் பொருட்களை அனுமதி இல்லாமல் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நவ்யா நாயர் கூறுகையில், "நான் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு, என் அப்பா எனக்காக மல்லிகைப்பூ வாங்கித் தந்தார். அவர் அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்தார். கொச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வரை, ஒரு பகுதியைத் தலையில் வைத்துக்கொள்ளச் சொன்னார். மீதமுள்ள மற்றொரு பகுதியை என் கை பையில் வைத்துக்கொள்ளச் சொன்னார், அதைப் பின்னர் சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போகும்போது அணிந்துகொள்ளலாம் என்று கூறினார். அதனால் நான் அதை என் பையில் வைத்திருந்தேன்," என்று தெரிவித்தார்.
மேலும், "நான் செய்தது தவறுதான். தெரியாமல் செய்த தவறுதான் என்றாலும், தவறு தவறுதான். அந்த 15 செ.மீ மல்லிகைப்பூவுக்காக அதிகாரிகள் AUD 1,980 அபராதம் விதித்தனர். 28 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்று கூறினர்," என்றார். இந்தச் சம்பவம் அவரது திருவிழா மனநிலையைப் பாதிக்கவில்லை என்றும், அவர் ஓணம் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.