
டெல்லியில் உள்ள செங்கோட்டை வளாகத்தில் நடைபெற்ற ஜெயின் சமூகத்தின் மத நிகழ்ச்சியில், சுமார் ₹1.5 கோடி மதிப்புள்ள இரண்டு தங்கக் கலசங்கள் மற்றும் பிற பொருட்களைத் திருடிய நபர், உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 3 அன்று, டெல்லி செங்கோட்டைக்கு அருகிலுள்ள பூங்காவில், ஜெயின் சமூகத்தின் 'தஸ்லக்ஷண் மகாபர்வ' என்ற 10 நாள் மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்காக, தொழிலதிபர் சுதிர் ஜெயின், சுமார் ₹1 கோடி மதிப்புள்ள தங்கக் கலசம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை தினமும் பூஜைக்காகக் கொண்டு வந்துள்ளார்.
இந்தக் கலசம் 760 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆனது, மேலும் அதில் 150 கிராம் வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள் பதிக்கப்பட்டிருந்தன.
விழாவிற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வந்தபோது, அவர்களை வரவேற்பதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்தனர். அந்த நேரத்தில், கூட்டத்தின் சலசலப்பைப் பயன்படுத்தி, பூஷன் வர்மா என்பவர், துறவி வேடத்தில் மேடைக்கு வந்து, தங்கக் கலசத்தை ஒரு பையில் போட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பூஷன் வர்மா, பாரம்பரிய வேட்டி-சட்டை அணிந்து பக்தர்களுடன் கலந்து கொண்டார். அங்கு, அவர் சுமார் 760 கிராம் எடையுள்ள ஒரு தங்க 'ஜரி' (கலசம்), தங்கக் தேங்காய் மற்றும் வைரங்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட 115 கிராம் எடையுள்ள மற்றொரு தங்க 'ஜரி' ஆகியவற்றைத் திருடியுள்ளார். இவை அனைத்தும் ஜெயின் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள்.
திருட்டு குறித்த தகவல் கிடைத்ததும், டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது. சம்பவ இடத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியின் உருவத்தை அடையாளம் கண்டனர். விசாரணையில், குற்றவாளி இதற்கு முன்பு மூன்று கோவில்களில் திருட முயற்சி செய்துள்ளதும் தெரியவந்தது.
பல குழுக்கள் அமைத்துத் தேடியதில், உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் என்ற இடத்தில், பூஷன் வர்மா என்ற அந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்கக் கலசம் மீட்கப்பட்டது. குற்றவாளி தற்போது டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீசாரின் தகவலின் படி, பூஷன் வர்மா ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருடப்பட்ட பொருட்கள், அந்த நிகழ்ச்சிக்கு அவற்றை தினமும் எடுத்து வந்த தொழிலதிபர் சுதிர் ஜெயினுக்குச் சொந்தமானது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சுதிர் ஜெயின், "இந்தத் திருடன் கூட்டத்தைப் பயன்படுத்தி இந்தச் செயலைச் செய்துள்ளான். இந்த ஆபரணங்கள் வெறும் அழகுக்காகப் பயன்படுத்தப்பட்டவை. ஆனால், இந்த கலசம் எங்களது மத உணர்வுகளுடன் தொடர்புடையது. அதற்கு நாம் மதிப்பைக் கணக்கிட முடியாது" என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.