பாரிஸில் உள்ள ஒரு பள்ளியின் வாசலில், மூன்று வயது சிறுவன் ஒருவன் உள்ளே செல்ல மறுத்து அழுதுகொண்டே உறைந்து நின்றான். அந்த சிறுவனின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைப் பார்த்து அவனது தாய் கதறி அழுதார். இறுதியில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்து கட்டாயப்படுத்தி அவனை உள்ளே அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் தலைமை ஆசிரியருக்கோ அல்லது அந்த தாய்க்கோ அந்த சிறுவன் ஏன் அவ்வளவு பயப்படுகிறான் என்று தெரியவில்லை. ஆனால், பிற்காலத்தில் அந்த சிறுவன் அந்தப் பள்ளியில் வேலை செய்யும் பணியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
பாரிஸில் உள்ள நர்சரி பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் மற்றும் பகல்நேர காப்பகங்களில் குழந்தைகளிடம் காட்டப்பட்ட உடல் ரீதியான வன்முறை, கொடுமைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் என 100-க்கும் மேற்பட்ட புகாரை பாரிஸ் போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் 84 நர்சரி பள்ளிகள், 20 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 10 காப்பகங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக பாரிஸின் தலைமை வழக்கறிஞர் லார் பெக்குவா தெரிவித்துள்ளார். இந்த புகார்கள் மூன்று மற்றும் நான்கு வயது குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மட்டும், பாலியல் புகார்களில் சிக்கிய 31 பேர் உட்பட 78 பள்ளிப் பணியாளர்களை பாரிஸ் நகர நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு நேரம், இடைவேளை மற்றும் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு குழந்தைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்களே இந்த 'ஸ்கூல் மானிட்டர்கள்'. சில நேரங்களில், ஆசிரியர்களை விட இவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இவர்களைப் பள்ளிகளோ அல்லது கல்வி அமைச்சகமோ நேரடியாக வேலைக்கு எடுப்பதில்லை; உள்ளூர் கவுன்சில்கள் மற்றும் நகர நிர்வாகமே இவர்களைத் தேர்வு செய்கிறது. பெரும்பாலும் இவர்களுக்குச் சரியான பயிற்சியோ, தகுதியோ இருப்பதில்லை. பலரும் தற்காலிக மணிநேர அடிப்படையில் மட்டுமே வேலைக்குச் சேர்க்கப்படுகிறார்கள். பிரான்சில் மூன்று வயது முதல் குழந்தைகளுக்குப் பள்ளி கல்வி கட்டாயம் என்பதால், மில்லியன் கணக்கான குழந்தைகள் தினமும் இவர்களின் பிடியிலேயே வளர்கிறார்கள்.
குழந்தைகளை ஆக்ரோஷமாகத் திட்டுவது, தள்ளுவது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது போன்ற கொடுமைகளைச் செய்ததாகப் பெற்றோர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். சில குழந்தைகளுக்கு உணவு மறுக்கப்பட்டுள்ளது, இன்னும் சில குழந்தைகள் வாந்தி வரும் வரை கட்டாயப்படுத்தி உணவளிக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமான சூழலில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஒரு பணியாளர் தான் செய்த வன்முறைக்காக ஒரு பள்ளியில் இருந்து மாற்றப்பட்ட பிறகும், அடுத்த பள்ளியில் ஒரு மூன்று வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தாங்கள் இது குறித்துப் புகாரளித்ததாகவும், ஆனால் அதிகாரிகள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் பெற்றோர்கள் குமுறுகின்றனர். ஊழியர்களைத் தேர்வு செய்யும் முறையில் உள்ள பலவீனமே இந்த அநீதி நீடிக்கக் காரணம் என்று வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். பிரான்ஸ் நாட்டின் கல்வி முறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தை ஒரு மிகப்பெரிய முறைகேடு என்று குறிப்பிட்டுள்ள பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரிகோயர், இதைச் சரிசெய்ய 20 மில்லியன் யூரோ நிதியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். சிறு வயதில் தானும் இது போன்ற ஒரு பணியாளரால் பாதிக்கப்பட்டதாக மேயரே வெளிப்படையாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.