உலகம்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.. ஒரு நாளில் ₹6,350 கோடி இழப்பு - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா ஷேர் மார்க்கெட்? தொடருமென எச்சரிக்கை!

"ஊதியத்தை வெளிப்படையானதாக மாற்றுங்கள், போனஸ்களுக்கான அதிகபட்ச வரம்புகளை நீக்குங்கள்!"

Muthu Lakshmi

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சுமார் 40,000  தொழிலாளர்கள் நேற்று (ஏப்ரல் 23) தென் கொரியாவின் பியோங்டேக் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தித் தளத்தில் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அந்நிறுவனத்தின் பெருகிவரும் லாபத்தில் தங்களுக்குப் பெரும் பங்கு வேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து 18 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறைக்குத் தேவையான சிப்கள் உற்பத்தியை பெருமளவில் பாதிக்கக்கூடும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளில் விரைவான உடன்பாட்டை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தொடரப்போவதாக தென் கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் வளர்ச்சியில் சிறப்பான செயல்பாடு இருந்தபோதிலும், அது போதுமான ஊதியத்தை  வழங்கத் தவறிவிட்டதாக சாம்சங் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சிப்களுக்கான தேவை அதிகமாக இருப்பதின் காரணமாக, கடந்த ஆண்டில் சாம்சங்கின் ஷேர் பங்குசந்தையில் கிட்டத்தட்ட 300% உயர்ந்துள்ளன.

அதனால் தென் கொரியா ஊழியர்கள் "ஊதியத்தை வெளிப்படையானதாக மாற்றுங்கள், போனஸ்களுக்கான அதிகபட்ச வரம்புகளை நீக்குங்கள்!" என்று போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. தகுந்த ஊதிய உயர்வுடன், போனஸ் ஊதியத்திற்கான உச்சவரம்பை நீக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் சாம்சங் நிறுவனத்தை கோருகின்றன. தற்போது இந்த உச்சவரம்பு, ஆண்டு அடிப்படை சம்பளத்தில் 50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிப் டிவிஷனில் பணிபுரியும் 76 மில்லியன் வோன் ( இந்திய மதிப்பில் 48.5 லட்சம்) சம்பாதிக்கும் ஒரு ஊழியர், 2025-ஆம் ஆண்டில் 38 மில்லியன் வோன்( இந்திய மதிப்பில் 24.5 லட்சம்) போனஸாக பெறுவார் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இது, போட்டி நிறுவனமான SK Hynix-ல் இதே போன்ற பதவியில் உள்ள ஒரு ஊழியர் பெறும் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும். கடந்த செப்டம்பரில், SK Hynix தனது போனஸ் உச்சவரம்பு விதியை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது. இதையடுத்து சாம்சங் ஊழியர்கள்  அதே கோரிக்கையுடன் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர் என தெரிகிறது.

எஸ்.கே. ஹைனிக்ஸ் நிறுவனம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் நேரடிப் போட்டியாளர் ஆகும். இந்த இரண்டு தென் கொரிய நிறுவனங்களும்  இணைந்து உலகின் மெமரி சிப்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன. 2022-ல் ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, SK Hynix நிறுவனம் சாம்சங்கைப் பின்னுக்குத் தள்ளி, Nvidia-வின் உயர் அலைவரிசை High Bandwidth Memory (HBM)-ன் முக்கிய விநியோகஸ்தராக ஆனது. ஆனால் போனஸ் உச்சவரம்பை நீக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை சாம்சங் நிராகரித்துள்ளது. இருப்பினும், மெமரி சிப்களை உருவாக்கும் மெமரி டிவிஷன் ஊழியர்கள் இந்த ஆண்டு மற்ற நிறுவனங்கலின் ஊழியர்களை விட அதிகமாக சம்பாதிப்பதற்காக கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அது கூறியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், மே 21 முதல் 18 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. உற்பத்தி நிறுத்தத்தால் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1 டிரில்லியன் வோனுக்கும் (700 மில்லியன் டாலர், 600 மில்லியன் யூரோ) அதிகமான இழப்பு ஏற்படக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய வேலை நிறுத்தம் கூட வாடிக்கையாளர் நம்பிக்கையைச் சேதப்படுத்த கூடும் என்றும், அதிலிருந்து மீளப் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சாம்சங் அதிகாரிகள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் சிப் தயாரிப்பாளர்கள் பயனடைந்துள்ளனர், ஆனால் மத்திய கிழக்கு மோதல் விநியோகச் சங்கிலிகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த நெருக்கடி, ஹீலியம் போன்ற முக்கிய மூலப்பொருட்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தி, எரிசக்தி செலவுகளையும் உயர்த்தியுள்ளது.

தொழிற்சங்கங்களை எதிர்த்து வருவதற்கு நீண்ட காலமாக பெயர் பெற்ற சாம்சங் நிறுவனம்,  2024-ஆம் ஆண்டில் தனது வரலாற்றிலேயே முதல் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை போன்றே இப்போது ஒரு சூழலை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்