Petrodollar 
உலகம்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு.. டாலரின் ஆதிக்கம் முடிவுக்கு வரப்போகிறதா? உலக நாடுகளை டாலருக்கு அடிமையாக்கிய ரகசியம்!

போருக்குப் பிறகு பணத்தைக் கட்டுப்படுத்தும் நாடுதான் உலக நாடுகளின் அமைதியையும் கட்டுப்படுத்தும் என்பதும் அந்த நாடுகளுக்குத் ஏற்கனவே தெரிந்திருந்தது.

Vinvizhi Leninton

1971-ல் ஐக்கிய அமெரிக்க உலகத்தோடு கொண்டிருந்த ஒரு ஒப்பந்ததத்தை உடைத்தது. அது என்ன வென்றால் எல்லா நாடுகளும் டாலர்களை வைத்திருந்த ஒவ்வொரு நாட்டிடமும் 'இது தங்கத்திற்கு சமமானது' என்று கூறியது. ஆனால், ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் அமெரிக்க அதிபர் அந்த வாக்குறுதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த விவகாரத்தில் எந்தவித முன்னறிவிப்போ, வாக்கெடுப்போ, மன்னிப்போ எதுவும் இல்லை. ஆனால், இதனால் அமெரிக்கா வீழ்ச்சியடைந்து விடவில்லை. மாறாக, முன்பைவிட அதிக சக்திவாய்ந்த நாடாக மாறியது. இந்த குறிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியானது, மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி ஆயுதமாக மாறிய சுவாரஸ்ய நிகழ்வைத்தான் இப்பொது பார்க்கவிருக்கிறோம்.

இது பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள நாம் 1944-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பயணம் செய்ய வேண்டும். இரண்டாம் உலகப் போரானது ஐரோப்பாவிலும் பசிபிக் பிராந்தியத்திலும் இன்னும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம்தான் அது. ஆனால், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், 44 நாடுகள் வேறொரு விஷயத்திற்காக போராடிக்கொண்டிருந்தன. அதுதான் பணம். போர் முடிவுக்கு வரப்போகிறது என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு இன்னும் ஒரு முக்கியமான விஷயமும் தெரிந்திருந்தது. அதுதான், போருக்குப் பிறகு பணத்தைக் கட்டுப்படுத்தும் நாடுதான் உலக நாடுகளின் அமைதியையும் கட்டுப்படுத்தும் என்பதும் அந்த நாடுகளுக்குத் ஏற்கனவே தெரிந்திருந்தது.

அது ஒரு போர் காலம் என்பதால், போரின்போது குண்டுவீச்சுக்கு ஆளாகிவிடுவோமோ? என்ற அச்சத்தில் இருந்த ஐரோப்பிய நாடுகள், தங்களுடைய தங்கத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய ஒரே இடமாக அமெரிக்காவைக் கருதி அங்கு அனுப்பிவைத்தன. இந்த காரணத்தால், 1944-ம் ஆண்டுக்குள் உலகின் மொத்த தங்க இருப்பில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அமெரிக்காவின் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அந்த நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினர். அதுதான் 'பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தம்' (Bretton Woods Agreement).

அதன் விதிமுறைகள் மிகவும் எளிமையானது:

ஒரு அவுன்ஸ் (எடை அலகு ) தங்கத்தின் மதிப்பு 35 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, அமெரிக்க டாலரின் மதிப்பானது தங்கத்துடன் இணைக்கப்பட்டது.

மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் டாலருடன் இணைக்கப்பட்டன. பிரிட்டிஷ் பவுண்ட், பிரெஞ்சு ஃபிராங்க், ஜப்பானிய யென் என அனைத்து பணத்திற்கும் டாலரின் மதிப்பையே அடிப்படையாக கொண்டிருந்தது. இதனால், டாலர் என்பது அமெரிக்காவின் பணமாக மட்டும் இல்லாமல், உலக நாடுகளின் பொதுவான பணமாக மாறியது.

25 ஆண்டுகளாக இந்த முறை சிறப்பாகச் செயல்பட்டது. டாலர் என்பது தங்கத்திற்குச் சமமானதாகக் கருதப்பட்டது. அதாவது, ஒரு வெளிநாட்டு அரசாங்கமானது அமெரிக்க வங்கிக்குச் சென்று தன்னிடம் உள்ள டாலர்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு இணையாக உண்மையான தங்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இங்குதான் இந்த ட்விஸ்ட்டே ஆரம்பிக்கிறது. ஆம்! அந்த அமைப்பில் ஒரு விரிசல் விழத்தொடங்கியது. 1960-களின் இறுதியில், அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்குப் பணத்தைச் செலவழிக்கத் தொடங்கியது. ஏனெனில் அமெரிக்கா இரண்டு போர்களை எதிர்கொண்டிருந்தது. ஒன்று, வியட்நாமில் நடைபெற்ற நேரடிப் போர். மற்றொன்று, சொந்த நாட்டிற்குள் நடைபெற்ற வறுமைக்கு எதிரான போர். இந்த இரண்டிற்குமே பெருமளவு பணம் அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. இந்தச் செலவுகளுக்காக அமெரிக்கா அச்சடித்துக்கொண்டிருந்த டாலர்களுக்கு இணையான அளவில் தங்கம் அந்நாட்டிடம் போதுமான அளவு இருப்பு இல்லை.

அமெரிக்காவின் இந்த நிலையை வெளிநாட்டு அரசாங்கங்கள் கவனிக்கத் தொடங்கின. குறிப்பாக, சார்லஸ் டி கோல் தலைமையிலான பிரான்ஸ், யாரும் எதிர்பார்க்காத ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, டாலர்களை அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பி, அதற்குப் பதிலாகத் தங்கத்தை தரக்கோரி கேட்டது. இந்த நிதி அமைப்பின் மீது டி கோலுக்கு நம்பிக்கை இல்லை. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான தங்கத்தை மீண்டும் பெறுவதற்காக, ஒரு பிரெஞ்சு போர்க்கப்பலையே நியூயார்க்கிற்கு அனுப்பியது. இந்த ஒரு நாடு மட்டுமின்றி மற்ற நாடுகளும் அமைதியாக இதே நடவடிக்கையைப் பின்பற்றத் தொடங்கின.

அமெரிக்கா கூறுவதைப் போல உண்மையிலேயே டாலருக்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை அவை எழுப்பத் தொடங்கின. மேலும், அமெரிக்காவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை அச்சடிக்கும் அதிகாரம் இருக்கிறது என்று பலரும் நினைத்தனர். ஆனால், அப்போது அந்த நிலை இல்லை. மேலும், 1971-ம் ஆண்டுக்குள், போருக்குப் பிந்தைய காலத்தில் உச்சத்தில் இருந்த அமெரிக்காவின் தங்க இருப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது. மேலும், இதன் காரணமாக அரசாங்கத்திற்குள்ளேயே இருந்த பொருளாதார நிபுணர்கள், இந்த நிலையைக் கண்டு ரகசியமாகக் கவலைப்படத் தொடங்கினர். இந்த நிலையில், டாலர்களை வைத்திருந்த அனைத்து நாடுகளும் ஒரே நேரத்தில் முன்வந்து தங்கத்தைக் கேட்டால், அமெரிக்காவால் அவற்றுக்குத் தங்கத்தை வழங்கவே முடியாது. அதாவது, தங்கக் கையிருப்பு முற்றிலும் காலியாகிவிடும்.

இதனால், 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தனது முக்கியப் பொருளாதார ஆலோசகர்களை ரகசியமாக 'கேம்ப் டேவிட்' என்ற இடத்திற்கு அழைத்தார். அந்த அறைக்குள் என்ன நடக்கப்போகிறது? என்பது வெளியுலகில் இருந்த யாருக்குமே தெரியாது. அதாவது, இது குறித்து, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கோ, அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கோ, ஏன், அமெரிக்க வெளியுறவுத்துறைக்குக்கூட இது குறித்து தெரியாது என்று கூறப்படுகிறது. மூன்று நாட்களாக அவர்கள் ஒரே ஒரு கேள்வி குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. அந்த அந்த கேள்விதான், உலகம் நமது பணத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உடையப்போகும் நிலையில், நாம் என்ன செய்ய வேண்டும்?. இது குறித்துதான் அவர்கள் விவாதித்தாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை இரவு, நிக்சன் தேசியத் தொலைக்காட்சியில் வந்து, அமெரிக்கா இனிமேல் டாலர்களுக்குப் இணையாக தங்கத்தை வழங்காது என்று அறிவித்தார்.

மேலும், அந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கும் வந்தது. ஒரே ஒரு தொலைக்காட்சி உரையின் மூலம், 27 ஆண்டுகளாக உலகளாவிய நிதி அமைப்பின் அடித்தளமாக இருந்த வாக்குறுதி என்பது முடிவிற்கு வந்தது. இந்தச் சம்பவத்திற்கு ஒரு பெயரும் வழங்கப்பட்டது. அதுதான் நிக்சன் அதிர்ச்சி (Nixon Shock). இந்த அறிவிப்பில் காரணமாக சந்தைகள் பதற்றமடைந்தன. அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடும் கோபமடைந்தன. ஏனெனில், இந்த முடிவு குறித்து அந்நாடுகளுக்கு முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை. உலகம் முழுவதும் இது குறித்து பயங்கரமான கேள்விகள் எழுந்தன.

டாலருக்குத் தங்கத்தின் ஆதரவு இல்லையென்றால், அதன் மதிப்புக்கு இப்போது எதை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்ற கேள்விகள் எழுந்தன. அந்த நேரத்தில், டாலரின் சக்தி அப்படியே வீழ்ச்சியடைந்துவிடும் என்று பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால், பழைய நிதி அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னால் ஒரு திருப்பமும், புதிய அமைப்பிற்கான மிகப்பெரிய வாய்ப்பும் காத்திருந்தது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

தங்கத்தின் ஆதரவு டாலருக்கு இல்லாமல் போனதால், அமெரிக்காவுக்கு வேறொன்று தேவைப்பட்டது. அது கண்ணுக்குத் தெரியும் பொருளாகவோ, பளபளக்கும் உலோகமாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஒவ்வொரு நாளும் தவிர்க்க முடியாமல் உபயோகிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். இதற்கான பதில், அரேபிய தீபகற்பத்தின் மணலுக்கு அடியில் இருந்தது.

நிக்சன் தங்கத்திற்குப் பதிலாக டாலர்களை வழங்கும் முறையை நிறுத்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹென்றி கிஸ்ஸிங்கர் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் சவுதி அரேபியாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் முன்வைத்த திட்டமானது, உலகப் பொருளாதாரத்தையே அமைதியாக மாற்றியமைக்கப்போகிறது என்பது அப்போது செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்த பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை.

அமெரிக்கா சவுதி அரேபியாவிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்தது. “நீங்கள் உங்களுடைய எண்ணெயை அமெரிக்க டாலர்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.” பிரெஞ்சு ஃபிராங்க்-கிலோ, ஜப்பானிய யென்-னிலோ கிடையாது, தங்கத்திலும் கிடையாது, அமெரிக்க டாலர்களில் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.

இதற்குப் பதிலாக அமெரிக்கா அவர்களுக்கு இரண்டு விஷயங்களை வழங்கியது. ஒன்று, ராணுவப் பாதுகாப்பு. இரண்டாவது, சவுதி அரேபியா தனது எண்ணெய் விற்பனை மூலம் சம்பாதிக்கும் பெரும் வருமானத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு அளிப்பதோடு, குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான வசதியை செய்து தருவதாக கூறியது.

சவுதி அரேபியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. விரைவில், மற்ற OPEC உறுப்பு நாடுகளும் இதைப் பின்பற்ற தொடங்கின. இப்போது இதில் உள்ள உண்மையான அர்த்தத்தைச் சிந்தித்துப் பார்ப்போம். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் எண்ணெய் தேவைப்படுகிறது. அந்த எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்க டாலர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அப்படியானால், உலகின் ஒவ்வொரு நாடும் டாலர்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் என்பது உருவாகிறது. இது ஒரு சிறிய மாற்றம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது அப்படியல்ல. இதுதான் பெட்ரோடாலர் (Petrodollar) அமைப்பின் தொடக்கம் என்று கூறப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் உருவான மிக முக்கியமான நிதி ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். டாலர் அச்சடிக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு எப்படி கிடைத்தது?. தங்கம் என்பது குறிப்பிட்ட அளவில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு பொருள். அதை அமெரிக்கா பூமியிலிருந்து வெட்டி எடுக்க வேண்டும் அல்லது வர்த்தகத்தின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், எண்ணெய்க்கான உலகளாவிய தேவை என்பது முடிவில்லாதது. அது நிரந்தரமானது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

இங்குதான் உண்மையான ஆபத்து தொடங்குகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உலகம் முழுவதும் எண்ணெய் வாங்குவதற்கும், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதற்கும், தங்களுடைய பொருளாதாரம் நிலையானதாக இருப்பதை வெளிப்படுத்துவதற்கும் மற்ற நாடுகளுக்கு டாலர்கள் தேவைப்பட்டன. இதன் மூலம், உலகின் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத ஒரு மிகப்பெரிய சக்தி என்பது அமெரிக்காவுக்குக் கிடைத்தது. அதாவது, அனைவருக்கும் தேவைப்படும் ஒரே பணத்தை தன்னால் அதிக அளவில் அச்சடிக்க முடியும் என்ற அதிகாரத்தினை அமெரிக்கா பெற்றது.

வேறு எந்த நாடாவது தன்னுடைய நாட்டு அளவுக்கு அதிகமாக அச்சடித்தால் என்ன நடக்கும்? என்று சிந்தித்துப் பாருங்கள். அந்த நாட்டில் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரத் தொடங்கும். பணவீக்கம் மக்களின் சேமிப்பைக் கரைத்துவிடும். அந்த நாட்டிற்கு வெளியே யாரும் அந்த பணத்தை வைத்திருக்க விரும்பமாட்டார்கள் என்பதால், அந்த பணத்தின் மதிப்பும் வேகமாகக் குறையும்.

ஆனால், இந்த இடத்தில்தான் அமெரிக்காவின் நிலை என்பது தனித்து வேறுபட்டு நிற்கிறது. ஏனெனில், ஒட்டுமொத்த உலகத்திற்கும் டாலர்கள் தேவைப்படுகிறது. ஏனெனில், எண்ணெய் வாங்குவதற்கும், வர்த்தகம் செய்வதற்கும், கையிருப்பாக வைத்திருப்பதற்கும் என்று பல காரணங்களுக்காக டாலர்கள் என்பது தேவைப்படுகிறது. அமெரிக்கா அச்சடிக்கும் ஒவ்வொரு டாலரின் பெரும் பகுதி அமெரிக்காவுக்குள்ளேயே இருப்பதில்லை.

அந்தப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது. குறிப்பாக, வெளிநாட்டு வங்கிகள், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களால் அது பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, பணத்தை அதிகமாக அச்சடித்தால் கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பல தசாப்தங்களாக அமெரிக்கா அதை தவறு என்று நிரூபித்து வருகிறது. அதாவது, உலகின் மற்ற நாடுகள் தொடர்ந்து உங்களுடைய நாட்டு பணத்தை கேட்டுக்கொண்டிருக்கும் வரை, இந்த நிலைதான் தொடரும் என்பது எழுதப்படாத நியதியாகிவிட்டது.

இதன் காரணமாகத்தான், அமெரிக்காவால் தொடர்ந்து 50 ஆண்டுகளாக வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடிந்தது. சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவழிக்க முடிந்தது. இரண்டு உலகப் போர்களுக்குச் செலவிடப்பட்ட தொகைக்கு இணையான அளவில் ராணுவத் தளங்களைப் பராமரிக்க முடிந்தது என்று கூறபடுகிறது. பொருளாதார நிபுணர்கள் இதற்கு ஒரு பெயர் வைத்துள்ளனர். அதுதான் அமெரிக்காவின் 'அளவுக்கு மீறிய சிறப்புரிமை' (Exorbitant Privilege) என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்வளவு நாள் டாலரில் நடந்த பரிமாற்றமானது ஒருகட்டத்தில் அவரவர் நாட்டு பணத்தினை பயன்படுத்தி எண்ணெய் வாங்கினால் என்னவாகும்? என்ற நிலை உருவானது. 2000-ம் ஆண்டில், ஈராக் அதிபர் சதாம் உசேன் தனது நாட்டின் எண்ணெயை அமெரிக்க டாலர்களுக்குப் பதிலாக யூரோவில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்தார்.பார்ப்பதற்கு இது ஒரு சிறிய மாற்றமாகத் தோன்றலாம். ஆனால், அமெரிக்கா இந்த விவகாரத்தினை சாதாரணமாக எடுத்து விடும் என்று நினைக்கக்கூடாது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. பேரழிவினை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதுதான் அந்தப் படையெடுப்பிற்கான அதிகாரப்பூர்வக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், வரலாற்று ஆய்வாளர்களும் பொருளாதார நிபுணர்களும், ஈராக் தனது எண்ணெய் வர்த்தகத்தில் டாலருக்குப் பதிலாக யூரோவைப் பயன்படுத்த முடிவு செய்ததுதான் இதற்குப் பின்னால் இருக்கும் உலகில் வெளிப்படையாக பேசப்படாத ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

2011-ம் ஆண்டில், லிபியாவின் முயம்மர் கடாபி இதைவிடப் பெரிய திட்டம் ஒன்றை முன்னெடுத்தார். அதாவது, தங்கத்தின் ஆதரவுடன் இயங்கக்கூடிய ஆப்பிரிக்காவின் பணத்தை உருவாக்க அவர் முயன்றார். இதன் மூலம், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் டாலரைப் பயன்படுத்தாமல் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவானது. அதே ஆண்டில், லிபியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 'நேட்டோ படைகள்' தலையிட்டன. அதன் பின்னர் சில மாதங்களுக்குள் கடாபி கொல்லப்பட்டார்.

ஆனால், இங்கே ஒரு விஷயத்தினை நாம் கவனிக்க வேண்டும். இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே காரணங்கள்தான் இருக்கும் என்று எண்ணிவிட முடியாது. . இந்த இரண்டு போர்களுக்கும் பல்வேறு அதிகாரப்பூர்வக் காரணங்கள் கூறப்படுவதால் இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும், இந்த கூற்றினை புறக்கணிக்கவும் முடியாது. மேலும், எண்ணெய் வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்த பல நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்தித்துள்ளன. அவற்றில் பல நாடுகள் ராணுவ ரீதியிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

இவை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவையா? அல்லது தற்செயலாக நடந்தவையா? என்பது ஒருபுறம் இருந்தாலும், உலக நாடுகள் புரிந்துகொண்ட செய்தி ஒன்றுதான். 'பெட்ரோடாலர்' அமைப்பு என்பது வெறும் பொருளாதார ஒப்பந்தம் மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு விஷயமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என்பதுதான் அது.

இப்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அமைப்பில் சில விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. சீனா, சவுதி அரேபியாவிடமிருந்து வாங்கும் எண்ணெய்க்கான பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் ஒரு பகுதியை அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீன யுவானில் தனது பரிவர்த்தனையை மேற்கொள்கிறது. மேலும், 2022-ம் ஆண்டுக்குப் பிறகு டாலர் நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ரஷ்யா, மாற்று பணப்பரிவர்த்தனை வழிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய BRICS கூட்டமைப்பும், தற்போது டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது குறித்து வெளிப்படையாகப் பேசி வருகிறது என்பது கவனிக்கக்கூடிய விஷயமாகி பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கு கடந்த இரண்டு தசாப்தங்களாகக் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது வீழ்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கேதான் பெரும்பாலானோர் பேசாத ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. உலகில் ஒரே ஒரு வர்த்தக பணமாக டாலர் இருக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய நிலையில், பல்வேறு விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலும், டாலருக்கு இணையான வலுவான போட்டியாளராக வேறு எந்த நாட்டு பணமும் இன்னும் உருவாகவில்லை என்பதே உண்மை.

யூரோவை எடுத்துக்கொண்டால், அது 17 வெவ்வேறு தேசிய அரசாங்கங்களின் சில வேறுபாடுகளால் பிளவுபட்டுள்ளது. சீன யுவானைப் பொறுத்தவரை, பெய்ஜிங்கின் கடுமையான மூலதனக் கட்டுப்பாடுகளின் கீழ் அது இயங்குகிறது. தற்போது மீண்டும் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. தற்போது கைதுக்கு ஒரு உதவியாளராக, முதலீட்டில் ஏற்படும் அபாயங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் ஒரு வழியாகத் தங்கம் பார்க்கப்படுகிறது.

ஆனால், எந்தவொரு நவீனப் பொருளாதாரமும் முழுமையாகத் தங்கத்தைக் கொண்டு இயங்க முடியாது. எனவே, பெட்ரோடாலரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ஆதிக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே கூறலாம்.

ஆனால், இந்த முறை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல்முறையாக அந்த ஆதிக்கம் என்பது சவாலுக்கு உள்ளாகியுள்ளது. இப்போது மீண்டும் 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் அந்த ஞாயிற்றுக்கிழமை இரவுக்குச் செல்வோம். தங்கத்துடன் இருந்த ஒப்பந்தத்தை முறித்ததன் மூலம் நிக்சன் டாலரின் சக்தியை அழிக்கவில்லை. மாறாக, அவர் எதிர்பாராத விதமாக டாலரின் போக்கை சுதந்திரமாக்கினார். அதாவது பூமிக்குள் புதைந்திருக்கும் ஒரு உலோகத்தின் அளவைச் (தங்கம்) சார்ந்திருக்கும் கட்டுப்பாட்டிலிருந்து டாலர் விடுவிக்கப்பட்டது.

அதன்பிறகு, வரலாற்றில் இதுவரை எந்தவொரு நாட்டு பணமும் பெற்றிராத ஒரு புதிய நிலையை டாலர் பெற்றுள்ளது. அதாவது, தங்கத்தின் ஆதரவோ, வெள்ளியின் ஆதரவோ இல்லாமல், எண்ணெய், வர்த்தகம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மீதான உலகின் தேவையையே தனது மதிப்பிற்கான ஆதாரமாகக் அமெரிக்காவின் டாலர் மாற்றியுள்ளது.

வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய ஒவ்வொரு உலகளாவிய பணமும் ஒருநாள் தனது இடத்தை இழக்கும். டச்சு 'கில்டர்', பிரிட்டிஷ் 'பவுண்ட்' என இதற்கு முன்பு ஆதிக்கம் செலுத்திய அனைத்து விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. உண்மையான கேள்வி என்னவென்றால், அந்த நாள் வரும்போது, 800 கோடி மக்களைக் கொண்ட இந்த உலகில் என்ன நடக்கும்? என்பதுதான் அந்த பதிலில்லாத கேள்வி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.