அமெரிக்காவில் ஒரு புதிய குடியேற்ற விதி அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் குடியேற்ற ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் அபராதம் அல்லது சிறைத் தண்டனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
டொனால்ட் ட்ரம்ப் அரசு அறிவித்த இந்த விதியில், 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் அரசாங்கத்தில் பதிவு செய்து, அந்த ஆவணங்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதி ஏப்ரல் 11, 2025 முதல் நடைமுறையில் உள்ளது.
விதியின் விவரங்கள்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தெளிவாகக் கூறுகிறது: “18 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள், Immigration and Nationality Act (INA) பிரிவு 262-இன் கீழ் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் பதிவு ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.” என்று. இந்த விதி கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், வேலை அல்லது படிப்பு விசா உள்ளவர்களுக்கும் பொருந்தும். இவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போதைய குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஆவணங்களை எப்போதும் எடுத்துச் செல்வது பாதுகாப்பானது என்று சட்ட நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த விதி எதற்கு?
ஏப்ரல் 11, 2025 அன்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், செயலாளர் கிறிஸ்டி நோயம் பேசுகையில், “30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் Alien Registration Act-இன் கீழ் பதிவு செய்ய வேண்டும். இதைப் பின்பற்றத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும். இதற்கு அபராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.” என்றார். இந்த விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், இதற்கு முன் இது கண்டிப்பாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால், இப்போது ட்ரம்ப் அரசு இதை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறது.
எப்படி வந்தது இந்த விதி?
USCIS-இன் விளக்கப்படி, INA பிரிவு 262-இன் கீழ், 14 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது பதிவு செய்யப்படாதவர்கள், 30 நாட்களுக்கு மேல் தங்கினால் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் கைரேகை பதிவும் செய்ய வேண்டும். 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பதிவு செய்ய வேண்டும்.
ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்குவதாக உறுதியளித்திருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன், ஜனவரி 20, 2025 அன்று அவர் ‘Protecting the American People Against Invasion’ என்ற உத்தரவை வெளியிட்டார். இது பதிவு விதியை கண்டிப்பாக அமலாக்க உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
இந்த விதிக்கு எதிராக சில இலாப நோக்கற்ற அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவர்கள், இந்த விதி முறையான அறிவிப்பு இல்லாமல் கொண்டுவரப்பட்டதாகவும், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை பயமுறுத்துவதாகவும் வாதிட்டனர். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு இந்த விதியை எதிர்க்க உரிமை இல்லை என்று தீர்ப்பளித்து வழக்கை நிராகரித்தது.
இப்போது என்ன செய்ய வேண்டும்?
USCIS-இன் பட்டியலின்படி, கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், விசா உள்ளவர்கள், வேலை அனுமதி பெற்றவர்கள் போன்றவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாக உள்ளனர். இந்தியர்களைப் பொறுத்தவரை, சட்டப்பூரவமாக அமெரிக்காவுக்கு வந்தவர்கள் இந்தப் பிரிவுகளில் இருப்பார்கள்.
ஆனால், சட்டவிரோதமாக எல்லை தாண்டியவர்கள் அல்லது பதிவு செய்யப்படாதவர்கள் இப்போது புதிய G-325R படிவம் மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ பதிவு செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை ஏற்படலாம். முக்கியமாக, இந்தப் பதிவு எந்த கூடுதல் சலுகைகளையும் தராது. இது குடியுரிமை அந்தஸ்து, வேலை அனுமதி அல்லது வேறு உரிமைகளை வழங்காது என்று USCIS தெளிவாகக் கூறியுள்ளது.
இந்தியர்கள் கவனத்திற்கு
சட்டப்பூரவமாக அமெரிக்காவில் இருப்பவர்கள் தங்கள் ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இது பாதுகாப்பானது மற்றும் எந்தவித பிரச்சனையையும் தவிர்க்க உதவும். சட்டவிரோதமாக இருப்பவர்கள் இந்த விதியைப் பின்பற்றுவது குறித்து சட்ட ஆலோசகர்களிடம் பேசுவது நல்லது. இந்த விதி கண்டிப்பாக அமலாக்கப்படுவதால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்