South Korea dog meat ban 
சிறப்பு செய்திகள்

“கடைசி நாய்கறி விருந்து இதுதான்!” சாப்பிட அலைமோதும் மக்கள்.. 2027 முதல் முற்றுப்புள்ளி வைக்கும் அரசு!

பிப்ரவரி 2027-ல் முழுமையாக இந்த தடை அமலுக்கு வருவதால் தென் கொரிய மக்கள் கூட்டம் கூட்டமாக நாய்கறி விற்பனை செய்யும் கடைகளுக்கு அலைமோதுகின்றனர்.

Vinvizhi Leninton

தென் கொரியா நாட்டினை பிடிக்காத ஆட்கள் இருக்கவே முடியாது. இந்தியாவில் பலரும் தென் கொரியாவிற்கு தீவிர ஃபேனாக இருந்து வருகின்றனர். அந்த நாட்டின் இசை, எழில்மிகு இடங்கள், தொடர்கள் என வரிசை நீண்டு கொண்டே செல்லும். ஆனால், அங்கு மக்களின் பாரம்பரிய உணவான நாய்கறியை தடை செய்யபோகிறார்கள் என்பதுதான் தற்போது பேசுபவருளாக இருந்து வருகிறது. அது என்ன என்பது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

சியோங்னம், தென் கொரியாவில் பல தசாப்தங்களாக, ஆண்டின் வெப்பமான நாட்களாகக் கருதப்படும் கோடைகாலத்தில், தென் கொரியாவின் நாய் இறைச்சி உணவகங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கும் கடையாகும். இந்த நாய் கறி உணவானது தென் கொரியாவின் பாரம்பரிய உணவாக பார்க்கப்படுகிறது. நாய் கறியை தென் கொரியா அரசு தற்போது, தடை செய்யப்படவிருக்கிறது என்பது தான் அந்நாட்டில் தற்போது பேசு பொருளாக இருந்து வருகிறது. இறைச்சிக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்தல், இறைச்சிக்காகக் கொல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றின் மீதான நாடு தழுவிய தடை, பிப்ரவரி 2027-ல் முழுமையாக அமலுக்கு வரவிருக்கிறது. எனவே தென் கொரிய மக்கள் கூட்டம் கூட்டமாக நாய்கறி விற்பனை செய்யும் கடைகளுக்கு அலைமோதுகின்றனர்.

பாரம்பரிய நாய்கறி உணவு: இவர்கள் நாய்கறியை பாரம்பரிய உணவாக உட்கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாகவே, தென் கொரியாவில் நாய்கறி உணவுகள் பெரும்பாலும் வயதானவர்களுக்கானவை ஆகும். ஆனால், பல வெளிநாட்டவர்களால் இது பொதுமைப்படுத்தப்படுகிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கு அரசாங்க அனுமதி பெற வேண்டிய அளவுக்கு அவை மிகவும் மதிப்புமிக்கவையாக இருந்தன என்றும் கொரிய ஆய்வுகளுக்கான பட்டதாரிப் பள்ளியின் மானுடவியல் பேராசிரியரான டாக்டர் ஜூ யங்-ஹா கூறுவதாக பிபிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், புரதம் என்பது மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்று. அதனால் அவர்கள் அதனை நாய்களிடமிருந்து பெற துவங்கி உள்ளனர். அதாவது, 'போசிண்டாங்' எனப்படும் நாய் இறைச்சி சூப் மற்றும் வேகவைத்த நாய் இறைச்சித் துண்டுகள் போன்ற உணவுகள் மிகவும் விரும்பப்படும் உணவாக உருவாகின. இந்த 'போசிண்டாங்' என்பது கொரிய நாட்டின் பாரம்பரிய நாய் இறைச்சி சூப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நாய் இறைச்சிகளானது கோடைகாலத்தில் எளிதில் செரிப்பதாகவும், கோடையை தாங்கும் வலுவை தருவதாகவும் கொரியர்கள் நம்பினர். அதிலும் குறிப்பாக வயதான கொரிய பெரியவர்கள் இதை ஆணித்தரமாக நம்புகின்றனர். மேலும், இதில் மருத்துவ குணம் இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

பிற்காலத்தில் இந்த நாய் கறிகளை உண்ணும் விவகாரமானது மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பினை சம்பாதிக்க துவங்கியது. ஏனெனில், உலகளவில் மக்கள் நாய்களை வெறும் செல்லப்பிராணிகளாகவே பார்ப்பதால் அதை எப்படி உண்பது? என்ற கேள்விகளை அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த சர்வதேச எதிர்ப்பின் ஒரு எதிர்வினையாக, கொரிய தேசியவாதிகள் பலர், நாய் இறைச்சித் தொழிலுக்கான தங்கள் ஆதரவை படிப்படியாக வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கினர். பல கொரியர்கள் வெளிநாட்டினரின் தீர்ப்பை வெறுப்பதோடு, நாய் கறி உண்பதை தங்கள் கலாச்சார அடையாளத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதுகின்றனர். ஆனால், பலர் இதனை கவனிக்க தவறுவதாக கொரிய மக்கள் கூறுகின்றனர். தென் கொரியாவில் நாய் கறி உண்பதற்கென்றே பிரத்யேகமாக 'இறைச்சி நாய்கள்' என்று குறிப்பிடப்படும் 'நூரியோங்கி' இனமே, கொரியாவில் இறைச்சிக்காக அதிகம் வளர்க்கப்படும் நாய் இனமாகும். கொரிய கலாச்சாரத்தில், 'நூரியோங்கி' இனம் ஒரு கால்நடை என்றும், செல்லப் பிராணிகளாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல என்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து.

சில அறிஞர்கள் கூறுவது என்னவெனில், பண்டைய காலத்தில் இருந்தே நாய் கறி கொரிய மக்களின் உணவுகளில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது என்று கூறுகின்றனர். ஆனால், 1988 சியோல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, இந்தப் பழக்கத்தைச் சுற்றி தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஒரு முக்கியமான பேசுபொருளாக உருவெடுத்தது. அக்காலத்தில் தென் கொரிய அரசாங்கம், தலைநகரின் பாரம்பரிய சந்தைகளில் நாய் இறைச்சி விற்பனைக்குத் தற்காலிகமாகத் தடை விதித்ததுடன் , வெளிநாட்டினரைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, நாய் இறைச்சி விற்பனையாளர்களைத் தங்கள் கடைகளில் இருந்து நாய் சடலங்களை அகற்றுமாறும் கேட்டுக்கொண்டது. இந்த அறிவிப்பானது உள்நாட்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிலர் இதனை வரவேற்றாலும் சில மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதாவது, இது மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்தியத்தை காட்டுகிறது என்றும், கொரிய பாரம்பரியத்தை அழிக்கிறது என்றும் மக்கள் தங்களது உரிமைக் குரல்களை எழுப்பினர். மேலும், பல்வேறு விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டுக்கொண்டுதான் உள்ளது. அதில் "நாய்க்கு மட்டும் என்ன விதிவிலக்கு?. இங்கு காட்டும் இரக்கத்தை மற்ற உயிரினங்களுக்கும் காட்டலாம் அல்லவா?" என்ற கேள்விகளையும் முன்வைத்தனர். இது ஒருபுறம் இருந்தாலும், தென் கொரியாவில் நாய் இறைச்சி நுகர்வு என்பது அந்நாட்டு மக்களிடையே குறிப்பாக 2000-ம் ஆண்டிலிருந்து, பெருமளவில் சரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத கூற்று.

இளைய தலைமுறையினரிடம் நாய் வளர்ப்பு என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. மேலும், 8% மக்கள் மட்டுமே நாய் இறைச்சியைச் சுவைத்துள்ளனர். இது 2015-ல் இருந்த 27% என்ற அளவிலிருந்து கணிசமான சரிவாகும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், தற்போது இந்த நாய் கறி தடை சட்டமானது, பல்வேறு கேள்விகளை மக்களிடையே எழுப்பியுள்ளது. குறிப்பாக, "ஒருவர் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதில் நேரடியாக அரசு தலையிடுவது என்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னாளில் இந்த தடை மசோதா முயற்சியானது கொரோனா சமயத்தில் இன்னும் தீவிரமாக்கப்பட்டது. மேலும், இந்தத் தடையானது கொரிய நாய்களுக்கும், நாய் பிரியர்களுக்கும், விலங்குப் பாதுகாவலர்களுக்கும் ஒரு நற்செய்தியாக இருந்தாலும், உள்நாட்டு வர்த்தகத்தை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்களையும், தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைச் செய்து வருபவர்களையும் இது பெரிதும் பாதிக்கும் ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான கிம் கியோன் ஹீ ஆகியோரின் கீழ், நாய் இறைச்சி வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பிரச்சாரம் வேகம் பெற்றது. கிம் கியோன் ஹீ, விலங்குகள் நலனுக்காக வெளிப்படையாகப் பேசும் ஒரு வழக்கறிஞராக இருந்தார், மேலும் அவர் இந்தத் தடையை பகிரங்கமாக ஆதரித்தார். இவர்களும் இந்த சட்டம் அமலாக ஒரு முக்கிய காரணம் எனலாம்.

இறுதியாக தற்போது, இந்த சட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2027-ல் அமலாக உள்ள நிலையில், வயதானவர்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ள இந்த நாய் கறிக்கு மக்கள் அலைமோதுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்