சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, புறநானூறு போன்ற நூல்கள், பண்டைய துறைமுக நகரமான பூம்புகார் குறித்து விரிவாகக் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக, பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினத்தின் நகர அமைப்பு, அதன் பல்வேறு பகுதிகள், வீதிகள், துறைமுகம், வணிகப் பொருட்கள் மற்றும் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட பல அம்சங்களை விவரிக்கிறது. இதன் மூலம் அக்கால காவிரிப்பூம்பட்டினத்தின் முழுமையான படம் கிடைக்கிறது.
பட்டினப்பாலை விளக்கங்களின்படி, காவிரிப்பூம்பட்டினம் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது. அங்கு பகல் நேரச் சந்தை ‘நாளங்காடி’ என்றும், இரவு நேரச் சந்தை ‘அல்லங்காடி’ என்றும் அழைக்கப்பட்டன. கிரேக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு வணிகர்கள் நகரின் வெளிப்பகுதிகளில் தங்கி வணிகம் செய்ததாகவும், மீனவர்கள் மருவூர்ப்பாக்கம் பகுதியில் வசித்ததாகவும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில், சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பும் வரலாறும் அறிவியல் ரீதியாக எவ்வளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கியதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் என்ன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பண்டைய காவிரிப்பூம்பட்டினமான பூம்புகார், தமிழக கடற்கரையில் காவிரி ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகே அமைந்திருந்தது. நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானங்கள், வளையக் கிணறுகள், மட்பாண்டங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழையூரில் கண்டுபிடிக்கப்பட்ட ‘I’ வடிவ செங்கல் அமைப்பு, மேடை, வடிகால் மற்றும் மரத்தூண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அது துறைமுக மேடையாக இருந்திருக்கலாம் என தொல்லியலாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். இதுவரை நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில், பூம்புகார் நகரம் உண்மையில் இருந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் எந்த அளவு பகுதி அழிந்தது, எப்போது அந்த அழிவு ஏற்பட்டது, அது படிப்படியாக நடந்ததா அல்லது ஒரே பெரும் பேரழிவால் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை.
2020ஆம் ஆண்டு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட தகவலின்படி, அசல் நகரத்தின் அமைவிடம், அதன் காலகட்டம், காலப்போக்கில் ஏற்பட்ட இடமாற்றங்கள் மற்றும் அழிவுக்கான காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாத புதிர்களாகவே உள்ளன. பூம்புகார் குறித்த முதல் அதிகாரப்பூர்வ கடலோர ஆய்வு 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் கோவாவின் தேசிய கடலியல் நிறுவனம் இணைந்து மேற்கொண்டது.
அந்த ஆய்வில், பல்வேறு ஆழங்களில் அசாதாரணமான கடலடிப் பாறை அமைப்புகள் கண்டறியப்பட்டன. மேலும் கடலடியில் மூன்று அடுக்கு கற்கட்டுமானங்களும் பதிவு செய்யப்பட்டன. இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை கருதுகிறது.
1989ஆம் ஆண்டு முதல், தேசிய கடலியல் நிறுவனத்தின் கடல்சார் தொல்பொருள் ஆய்வாளர்கள் அனிருத் சிங் கவுர், சுந்தரேஷ் ஆகியோர் பூம்புகார்–தரங்கம்பாடி இடையிலான கடற்கரைப் பகுதிகளிலும், கடலுக்குள் பல கிலோமீட்டர் தொலைவிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வுகளில், அலையிடை மண்டலம் மற்றும் 5 முதல் 8 மீட்டர் ஆழம் வரை சுடுமண் வளையக் கிணறுகள், செங்கல் எச்சங்கள், மட்பாண்டங்கள் மற்றும் நீரில் மூழ்கிய கற்கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன.
காவிரி முகத்துவாரத்திற்கு அருகே கடலில் சுமார் 600 மீட்டர் தொலைவில் மணற்கல் பாறைகளில் பதிந்திருந்த அமைப்புகளும் ஆய்வில் வெளிப்பட்டன.
ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, ஒரு மீட்டருக்கும் அதிகமான வண்டல் மண்ணுக்குக் கீழே குடியிருப்பு சார்ந்த பொருட்கள் இருந்ததாகவும், ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், தற்போதைய பூம்புகார் கடற்கரையிலிருந்து 30–40 கி.மீ தொலைவில், கடலுக்குக் கீழே 50–100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு துறைமுக நகரம் இருந்திருக்கலாம் என்ற தடயங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பூம்புகார் கடலில் மூழ்கியதற்கான காரணங்களைப் பொருத்தவரை, கடுமையான கடற்கரை அரிப்பு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 1973ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கண்ணகி சிலை, கடல் அரிப்பின் காரணமாக 1994ஆம் ஆண்டில் உள்நோக்கி மாற்றப்பட்ட சம்பவமும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த மூன்று நூற்றாண்டுகளில் சுமார் 300 மீட்டர் அளவுக்கு கடற்கரை உள்வாங்கியதாகவும், கடந்த 75 ஆண்டுகளில் பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் கடற்கரை கோடு மாறியதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் காவிரி ஆறு அதிக அளவில் வண்டல் மண்ணை கடற்கரைக்கு கொண்டு வந்தது. ஆனால் அணைகள் மற்றும் நீர்மேலாண்மை காரணமாக அந்த வண்டல் வரத்து குறைந்ததால் கடற்கரை அரிப்பு அதிகரித்ததாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பனியுகத்திற்குப் பிறகு ஏற்பட்ட கடல் மட்ட உயர்வும் இத்தகைய மாற்றங்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. 20,000 முதல் 7,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடற்கரைக் கோடு நிலப்பகுதியை நோக்கி பெருமளவில் நகர்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துறைமுக அமைப்பு குறித்து 2023ஆம் ஆண்டு ஆய்வுகள், பூம்புகார் நகரம் வடக்கு–தெற்கு திசையில் சுமார் 11 கி.மீ நீளமும், கிழக்கு–மேற்கு திசையில் சுமார் 2.5 கி.மீ அகலமும் கொண்டிருந்திருக்கலாம் என கூறுகின்றன. கப்பல் போக்குவரத்து, சரக்கு ஏற்ற இறக்கம் மற்றும் நிறுத்தும் வசதிகளுக்காக கால்வாய்கள் மற்றும் கப்பல் நிறுத்தும் இடங்கள் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், துறைமுகத்துக்கு வடக்கே கலங்கரை விளக்கு போன்ற அமைப்பு, குடியிருப்பு பகுதிகள், மதில் சுவர்களுடன் கூடிய கட்டிட அமைப்புகள் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பூம்புகார் நகரம் அழிந்ததற்கான காரணமாக சுனாமி, கடல் மட்ட உயர்வு, புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் படிப்படியாக நகரத்தை இடமாற்றம் செய்து கடலுக்குள் மூழ்கச் செய்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு, பண்டைய பூம்புகாரின் பல பகுதிகள் கடலால் மூடப்பட்டிருப்பதை அகழாய்வு மற்றும் நிலவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அதன் முழு வரலாறும் அழிவின் துல்லியமான காலவரையறையும் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.