மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீட்டு வாசல்கள், வண்ணமயமான பூக்கோலம் அறுசுவை கொண்ட ஓண சத்யா, புத்தாடைகள், உறவுகளின் சந்திப்பு, வீடு முழுவதும் நிறையும் சிரிப்புச் சத்தம் என ஓணம் வந்தாலே ஒரு விதமான மகிழ்ச்சியான சூழல் உருவாகிவிடுகிறது. கேரளத்தின் மிக முக்கியமான பாரம்பரியப் பண்டிகையாக கருதப்படும் ஓணம், இன்று கேரளத்தின் எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியுள்ளது.
குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மலையாளிகள் மட்டுமின்றி, பல்வேறு சமூகத்தினரும் ஓணம் கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். அப்படியென்றால், கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் எப்படி தமிழ்நாட்டிலும் இவ்வளவு பிரபலமானது? இதற்குப் பின்னால் இருப்பது வெறும் பண்டிகை கொண்டாட்டமா... அல்லது பல நூற்றாண்டுகளாக தொடரும் தமிழகம்–கேரளத்தின் கலாசார உறவா?
மகாபலி மன்னரின் கதை
புராண நம்பிக்கைகளின்படி, அரக்க குலத்தில் பிறந்திருந்தாலும் மகாபலி ஒரு சிறந்த அரசராக ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், சமத்துவத்துடனும் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. பாகுபாடு, வறுமை, ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சிறந்த காலமாக மகாபலியின் ஆட்சி சித்தரிக்கப்படுகிறது. மகாபலியின் புகழ் மூவுலகிலும் பரவிய நிலையில், அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்ததாக புராணம் கூறுகிறது.
சிறுவனாக மகாபலியிடம் மூன்று அடிகள் நிலம் கேட்ட வாமனர், பின்னர் விஸ்வரூபம் எடுத்து முதல் அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாதபோது, மகாபலி தனது தலையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதாளத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஒருமுறை தனது மக்களை வந்து சந்திக்க மகாபலிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதன் படி, மகாபலி தனது மக்களை சந்திக்க வரும் நாளாகவே ஓணம் கொண்டாடப்படுகிறது.
ஓணம் கொண்டாடிய மதுரை மாநகர்
மதுரையில் சங்க காலத்தில் ஓணம் கொண்டாடப்பட்ட ஆதாரங்கள் மாங்குடி மருதனார் இயற்றிய ‘மதுரைக்காஞ்சி’யில் இடம்பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியின் 590–591-வது வரிகளில், “கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்” என்று பாடப்பட்டுள்ளது. இங்கு ‘மாயோன்’ என்பது திருமாலைக் குறிக்கும். ‘ஓண நன்னாள்’ என்பது திருவோண நாளைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் விளக்குகின்றனர். இதன் மூலம் சங்ககால மதுரையில் ஓணம் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடப்பட்டதற்கான இலக்கியச் சான்று கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், அந்த ஓண நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்களையும் மதுரைக்காஞ்சி விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. “சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட…” என வரும் வரிகளில், மலர் மாலைகள் அணிந்த வீரர்கள் யானைகளைச் செலுத்தும் காட்சிகளும், அவற்றைக் காண மக்கள் திரண்டிருந்ததையும், விழாக்கால மகிழ்ச்சியில் மக்கள் ஈடுபட்டிருந்ததையும் பாடல் சுட்டுகிறது. அதனால், இன்றைய ஓணம் போலவே சங்ககாலத்திலும் இது வெறும் வழிபாட்டு நாளாக மட்டுமின்றி, மக்கள் ஒன்றுகூடி மகிழ்ந்த கொண்டாட்ட நாளாக இருந்திருக்கலாம் என்பதை மதுரைக்காஞ்சியின் வரிகள் காட்டுகின்றன.
பூம்பாவைப் பதிகத்தில் ஓணம்
திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரைப் பற்றித் திருஞானசம்பந்தர் அருளிய “மட்டிட்ட புன்னையங்கானல்” எனத் தொடங்கும் பதிகமே பூம்பாவை பதிகம் எனப்படுகிறது. இந்தப் பதிகத்தின் 11 பாடல்களில், திருமயிலையில் நடைபெற்ற பல்வேறு திருவிழாக்கள் வரிசையாகக் குறிப்பிடப்படுகின்றன. அதில் ஐப்பசி மாத திருவோண விழாவும் இடம்பெறுகிறது.
குறிப்பாக, “...திருவோண விழா காணாதே போதியோ பூம்பாவாய்!” என்ற பொருளில், பூம்பாவை இந்த விழாக்களைக் காணாமல் சென்றுவிட்டாளே எனத் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். இதன் மூலம், திருமயிலையில் திருவோண விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்ட மரபு குறித்த இலக்கியச் சான்றாக இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது.
சேரர் செப்பேடு ஓணம்
சேரப் பெருமாள் மன்னர் ஸ்தாணு ரவி குலசேகரன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த திருவல்லா அருகிலுள்ள திருவாற்றுவாய் செப்பேடு, ஓணம் கொண்டாடப்பட்டதற்கான முக்கியமான வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது. கி.பி. 861-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த செப்பேடு, ஸ்தாணு ரவியின் 17-ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. அதில் “ஆவணி ஓணம்” தொடர்பான விழா ஏற்பாடுகளுக்காக நிலம் வழங்கப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது. கோயில் சபையும் அதிகாரிகளும் ஒன்றுகூடி ஓணம் விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாகவும், செந்தன் சங்கரன் என்பவர் அதற்காக நிலம் வழங்கியதாகவும் பதிவு குறிப்பிடுகிறது.
இதனால், 9-ஆம் நூற்றாண்டிலேயே சேரர் ஆட்சிப் பகுதியில் ஓணம் ஒரு அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டதற்கான நேரடி கல்வெட்டு ஆதாரம் கிடைக்கிறது. குறிப்பாக “ஆவணி ஓணம்” என்ற பெயரே செப்பேட்டில் இடம்பெற்றிருப்பது, ஓணம் தமிழ்நாட்டில் நிலவிய பழமையான விழா மரபுகளில் ஒன்றாக இருந்ததை வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் மங்கிய ஓணம்
பின்னர் ஒரு காலகட்டத்தில் சேரர் மரபு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அப்பால் வலுப்பெற்று, அப்போது அங்கு ஓணம் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு அது பாரம்பரிய விழாவாக தொடர்ந்தது. மேலும் இன்றைய கேரளப் பகுதிகளில் தனித்த அரசியல்–பண்பாட்டு அடையாளம் உருவாகியபோது, ஓணம் அந்த நிலப்பரப்பின் முக்கியமான திருவிழாவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மகாபலி வழிபாடு, திருவோண நட்சத்திரம், பூக்கோலம், ஓணசத்யா போன்ற உள்ளூர் மரபுகளுடன் இணைந்து, ஓணம் கேரளத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாக உருவெடுத்தது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஓணத்தின் பழைய தடங்கள் மெல்ல மங்கியதற்கு காரணம் சோழர் மற்றும் பின்னர் விஜயநகரப் பேரரசின் காலங்களில் தமிழகத்தின் அரசியல், கோயில் மற்றும் சமூக விழா மரபுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கேரளத்தில் ஓணம் தொடர்ந்து மகாபலி–திருவோண விழாவாக மக்கள் வாழ்க்கையுடன் இணைந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் அந்த விழா அதே அளவிலான தொடர்ச்சியைப் பெறவில்லை.
மீண்டும் புதுப்பொலிவு
தமிழ்நாடும் கேரளமும் புவியியல் ரீதியாக அருகில் இருப்பது, வரலாற்று தொடர்புகள், வணிகம், வேலைவாய்ப்பு, திருமண உறவுகள், குடியேற்றம், மொழி மற்றும் கலாசார பரிமாற்றம் என பல காரணங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் கேரளத்திற்கும் பல நூற்றாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். கன்னியாகுமரி பகுதி வரலாற்றில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தது. பின்னர் மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் போது தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும், அந்தப் பகுதியின் மலையாள கலாசாரத் தொடர்புகள் முற்றிலும் மறைந்துவிடவில்லை. இதன் காரணமாக கன்னியாகுமரியில் தமிழ் மற்றும் மலையாள கலாசாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்த ஒரு தனித்துவமான பண்பாட்டு சூழல் அமைந்துள்ளது எனவே அப்பகுதியில் உள்ள மக்கல் பொங்கல் போலவே போனதையும் கொண்டாடுகின்றாரனார்.
அடுத்து, கேரளத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழ்நாட்டின் பல நகரங்களில் குடியேறியுள்ளனர். குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பகுதிகளில் மலையாள மொழி பேசும் சமூகங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன. அவர்கள் தங்களுடன் கொண்டு வந்தது மொழியை மட்டுமல்ல… உணவு, உடை, இசை, நடனம், வழிபாடு, பண்டிகை என ஒரு முழு கலாசாரத்தையே. இதன் காரணமாகவே தமிழகத்தில் பல இடங்களில் மலையாள சங்கங்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஓணம் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மேலும் இன்று ஓணம் கேரளத்தின் எல்லைகளைத் தாண்டி, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி உள்ளதற்கான காரணம் இன்றைய இளைஞர்கள் வெள்ளை நிற பாரம்பரிய உடைகள் அணிவது, பூக்கோலம் அமைப்பது, ஓணசத்யாவின் அறுசுவை உணவுகளை ருசிப்பது போன்ற ஓணம் கொண்டாட்டங்கள் மீது ஆசை மற்றும் விருப்பம் ஏற்பட்டு ஆர்வத்துடன் பின்பற்றுவதுதான். தொடர்ந்து சமூக வலைதளங்களும் இந்தக் கொண்டாட்டங்களை மேலும் பிரபலப்படுத்தி, ஓணத்தை ஒரு கலாசார விழாவாக பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.