சென்னை என்றாலே பெரிய பெரிய கட்டிடங்கள், ஐடி வேலைகள், பறக்கும் ரயில்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வாகனங்களில் அங்கும் இங்கும் நிற்க நடக்கக் கூட நேரம் இல்லாமல் மக்கள் பம்பரமாய் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த சிங்கார சென்னையில் கடலுக்கு அருகே கேட்கும் அழுகுரலை கொஞ்சம் நின்று கேட்போமா?.
ஆம்!, சென்னை பட்டினம்பாக்கம், இதுதான் அந்த பகுதி. இந்த பகுதி மக்களுக்கு கடல்தான் எல்லாம். அன்றாட வேலை, கடலன்னையின் தாலாட்டாய் ஒலிக்கும் அலையோசை, கடல் வாரி தரும் மீன் இதுதான் அவர்களது வாழ்க்கை. கடலுக்கும் அவர்களுக்கும் இருக்கும் இந்த பந்தமானது பிரிக்கவே முடியாத ஒன்று என்றே சொல்லலாம். அதற்கு உதாரணம்தான் சுனாமி. கழுத்தளவு அலையில் சிக்கியும் இன்றுவரை தங்களது வாழ்விடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கும் அவர்களை பார்க்கும்போதே நமக்கு புரிய வந்து விடுகிறது.
ஆனால், இவர்களது வாழ்க்கை என்பது துன்பங்களால் நிறைந்தும், இவர்கள் படும் வலி மற்றவர்கள் கண்ணில் இருந்து மறைந்தும் காணப்படுகிறது. சமீபத்தில் கூட தமிழக முதல்வர் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்காக பட்டினம்பாக்கத்தை தேர்வு செய்துள்ளார் என்ற செய்தியை கூட யாரும் மறந்திருக்கமாட்டோம். அதற்காக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு அலைகள் கிளம்பியது. ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் களமிறங்க தொடங்கின. ஒருவேளை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் வந்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், தங்களுக்கு இந்த தொழில்தான் தெரியும் இதை தவிர்த்து எதுவும் தெரியாது என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் பட்டினம்பாக்கத்திற்கு உள்ளே சீனிவாசா புரத்தில் எழுப்பில்லாத உடலைப் போல பாதி உடைந்தும், இடிந்தும் இருக்கும் கட்டடம் பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. மேலும், அந்த இடத்தில் சில குடும்பங்கள் வசிக்கிறார்கள் என்று கூறுவது என்பது காண்போரை கலங்க வைக்கிறது. குறுகலான சந்துகள் வழியாக உள்ளே செல்ல செல்ல கட்டடங்களே தங்களது அவல நிலையை சொல்வது போன்று உடைந்தும், இடிந்து இருக்கிறது. மீன் விற்றும், வீடு வேலை செய்தும் குடும்பத்தை காப்பாற்றும் பெண்கள், கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் ஆண்கள். இவர்களையே பட்டினம்பக்கத்தில் உள்ள சீனிவாசா புரம் தன் கரங்களில் அணைத்து வைத்திருக்கிறது.
அந்த பகுதியில் 64 குடும்பங்கள் வசித்து வருவதாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் பேசியபோது, அவர்கள் படும் இன்னல்களை தெரிவித்தனர். அதில்,1992-ல் திருணம் செய்து இதே ஹௌசிங் போர்டிற்கு குடிவந்தவர் தற்போது அந்த ஹௌசிங் போர்ட் கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் இருப்பதால், தனது மகள் அந்த ஹௌசிங் போர்ட் முன்புறம் கூடுதலாக ஒரு சிறிய வீட்டினை கட்டி அவர்கள் இருப்பதாகவும், தான் சிறிது தொலைவில் ஒரு ஓட்டு வீட்டில் இருப்பதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் கூறினார். மேலும், தற்போது அந்த ஹௌசிங் போர்ட்-டில் இருக்கும் வீடுகள் துகள் துகளாக அதாவது சிறிது சிறிதாக இடிந்து விழுவதாக அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர், சாயிரா பேகம் என்பவர், "மழை பெய்தால் நாங்கள் எங்கே செல்வது?. இங்குதான் நாங்கள் இருக்க முடியும் வேறு எங்கு செல்லமுடியும். இதே இடத்தில்தான் 50 வருடங்களாக இருக்கிறோம். 10 வருடங்களாக இடிந்து போய் இருக்கும் இந்த கட்டிடத்தை யார்? வந்து பார்த்தாங்க?. நீதிமன்றத்தில் இருந்து வெளியேற கூறினாலும் கூட எங்கே போறது?. ரோட்டுல உக்காந்துகிடலாமா?. எந்த அரசும் உள்ள வந்து எங்ககிட்ட கேக்காது, வெளியவே கேட்டுகிட்டு போயிரும். கணக்கெடுக்கத்தான் வருவாங்க. வெளிய நாங்க தங்க வீடு ஒதுக்குனா பொழப்ப யாரு பாக்குறது?. குழந்தைங்க ஸ்கூல்-க்கு எப்படி போகும். உங்க இஷ்டத்துக்கு தண்ணி வர்ற இடத்துல வீடு கட்டி கொடுப்பிங்க.
எங்க பொழப்புக்கு என்ன செய்ய?. எல்லாத்தையும் மாத்திக்க நாங்க என்ன பணக்காரங்களா?. நடந்து போய் எங்க குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரோம். இதை தண்டி போனாலே ஸ்கூல் பீஸ் அதிகமா இருக்குது. இங்கதான் பிள்ளைக எப்படியும் படிக்கலாம். இங்கயே ஒரு வீட்டை கட்டிக்கொடுங்க அதுதான் எங்க கோரிக்கை. மொதல்ல பொழைக்க சோறு வேணும்ல. 110 ரூபாய் கொடுத்து அரிசி வாங்குறோம். 6 மாசத்துக்கு முன்ன அரிசி 70 ரூபாய்னு வாங்குனேன். அப்போ சொந்த வீட்டுகாரங்க நாங்க 110 ரூபாய் குடுத்து அரிசி வாங்கணும்னு வாடகை ஏத்தமாட்டாங்களா?. நாங்க அவ்ளோ பணம் குடுக்குற மாதிரியா இருக்குறோம்?. அவங்கவங்க பங்களாக்குள்ள பாதுகாப்பாத்தான இருக்குறாங்க?. நாங்கதானே இப்படி இருக்குறோம்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார் அதே பகுதியில் 50 வருடங்களாக வாழும் சாயிரா பேகம்.
மேலும், அந்த பகுதியில் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் கடலை நம்பி உள்ளது என்பதால் அந்த ஹௌசிங் போர்டு-க்கு அருகிலேயே ஒரு சிறிய வீடாக கட்டி தங்களது வாழ்க்கையை ஓட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எத்தனையோ உண்ணாவிரதங்கள் அந்த பகுதி மக்கள் இருந்ததை நினைவு கூர்ந்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மஞ்சுளா, "எங்களுக்கு இங்கதான வாழ்வாதாரம். புள்ளைங்க ஸ்கூல் படிக்குது. பொம்பளைங்க எல்லாம் இந்த MRC-ய நம்பித்தான் இருக்கோம். அங்க வீட்டுவேலை பார்த்துதான் எங்க பொழைப்பை ஓட்டுறோம். அதுல வாங்குற சம்பளத்தை வச்சிதான் புள்ளைகள படிக்கச் வைக்கணும், நல்லது கெட்டது பார்க்கணும் எல்லாம் செய்யணும். 55 வருஷம் ஆச்சி இந்த பில்டிங் கட்டி . மொதல்ல இடிஞ்சு போனப்ப நாங்க சரிபண்ணி தரும்னு சொன்னாங்க. அப்போ சமைக்குற பாத்திரம் மட்டும் எடுத்துக்கிட்டு போனோம். அவங்க இடிச்சதுல எங்க வீட்டு கூர இடிஞ்சி விழுந்துருச்சி. நாங்க எங்க போவோம். இப்போ வேற ஒரு இடத்துல வீடு கட்டித்தர மாதிரி சொல்லிருக்காங்க" என்று அவர் அந்த பகுதியில் மக்கள் படும் இன்னல்களை தெரிவித்தார்.
தற்போது, அந்த பகுதியில் பாதி இடிந்த நிலையில் மக்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் ஹௌசிங் போர்டினை இடித்து விட்டு அதே பகுதியில் அவர்களுக்கு புதிய வீட்டினை கட்டித்தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரான இருக்கும் வி.பி. தாம்சன் மக்களோடு நின்று அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். மேலும் அவர், லட்சிய ஜனநாயக கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அவர் "55 வருடத்திற்கும் மேலாகிய இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசிக்கிறது. மேலும், சமீபத்தில் கூட மேற்கூரை இடிந்து விழுந்தது.
விழுந்த சமயத்தில் அங்கு ஆட்கள் இருந்ததால் சிலருக்கு சிராய்ப்பு போன்ற காயங்கள் ஏற்பட்டன. தற்போது உள்ள அரசு மக்களின் உயிரை காத்து அவர்களுக்கு இங்கேயே ஒரு வீட்டினை கட்டித்தரவேண்டும். இங்கிருக்கக்கூடிய மீனவர்களின் வாழ்க்கையே கடலை நம்பித்தான் இருக்கிறது. ஏற்கனவே, சில மீனவர்கள் ஏற்கவே பெயிண்ட் வெளியே போன்ற பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு தங்களது மீன்பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டனர். இதுமட்டுமின்றி வயதானவர்களுக்கு ஏற்ட்டாற்போல் 4 அடுக்கு கட்டிடமாக கட்டித்தரவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு இதனை ஒரு கோரிக்கையாக வைக்கிறோம்" என்று அப்பகுதியில் இருக்கும் மக்களின் கோரிக்கையை தெரிவித்தார்.
மீனவ மக்களின் வாழ்க்கை என்பது மறைத்து வைக்கப்பட்ட ஒரு துயர பக்கங்களாகவே இதுநாள் வரை இருந்துள்ளது. தற்போது அவர்கள் இருக்க இருப்பிடம் இன்றி இருப்பதும் அதில் ஒன்றாக இருக்கிறது. சீனிவாசாபுரத்து மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இன்றி மீண்டும் தங்களின் வாழ்க்கையை தொடங்க தமிழக அரசை நோக்கி தங்களின் கோரிக்கையை இப்போது முன்வைத்துள்ளனர். அரசு இதனை கவனத்தில் எடுத்து தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று முழுதாக நம்பியும் இருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.