Admin
ஆன்மீகம்

சனி தோஷங்கள் நீக்கி அருள் தரும் ஐயப்பன்.. அரசர்களுக்கு சாப விமோசனமாக அமிர்தத்தை வழங்கிய அதிசய கோவில்!

கேரளாவில் உள்ள அனைத்து சாஸ்தா கோவில்களிலும் காணமுடியாத அளவிற்கு இங்குள்ள ...

மாலை முரசு செய்தி குழு

கேரளாவில் உள்ள கோட்டயத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் கோட்டையம் நீந்தூர் கல்லற வைக்கம் சாலையில் அழகாய் அமைந்துள்ளது கைப்புழா ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம். கேரளாவின் புகழ்மிக்க தெக்குங்கூர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள இந்த கோவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தோடு பல சாம்ராஜ்யங்களால் பராமரிக்கப்பட்ட கோயிலாகவும் விளங்குகிறது. கேரள கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட இத்தலத்தின் முன்புறத்தின் மேல் ஒரு சிறிய கூம்பு முக்கோண வடிவ கோபுரமும் மரத்தாலான நுழைவு வாசலும், ஏராளமான மரச்சிற்பங்களும் கேரள கலைஞர்களின் கை வண்ணங்களையும் எடுத்து காட்டுகிறது.

கேரளாவில் பரசுராமரால் உருவாக்கப்பட்ட 108 கோவில்களும் மலையாள பூமியின் ஆன்மீக அடித்தளங்கள் என்றால் மறுக்க முடியாது. அந்த வகையில் சாஸ்தாவிற்காக உருவாக்கப்பட்ட இக்கோவிலில் பழங்கால வழிபாட்டுமுறைகள் மாற்றப்படாமல் இன்றளவும் நடந்து வருகிறது. கேரளாவில் உள்ள அனைத்து சாஸ்தா கோவில்களிலும் காணமுடியாத அளவிற்கு இங்குள்ள ஐயப்பன் வித்தியாசமாக கருவறையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

முதலையை மிதித்து, அதன் வாலை ஒரு கையால் இழுப்பது போலவும், மறு கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடிம் காட்சிதருகிறார். சாஸ்தாவின் இத்திருக்கோலத்திற்கு பின்னால் உள்ள ஒரு புராணக்கதை இத்தெய்வத்தின் சக்தியை எடுத்துகாட்டுகிறது.ஒரு காலத்தில் ஏரிகளும் ஆறுகளும் நிறைந்த இந்த கைப்புழாவில் முதலைகளின் அட்டகாசம் தலைவிரித்தாடியுள்ளது. இதனால் பெரும் துன்பங்களுக்காளான மக்கள் ஊரில் இருந்த முனிவர்களிடம் தங்கள் வேதனைகளை தெரிவித்து மன்றாடியுள்ளனர்.

அப்போது முனிவர்கள் சாஸ்தாவான ஐயப்பனை நோக்கி பிரார்த்தனை செய்தனர். இதனையடுத்து மனமிறங்கிய சாஸ்தா சாபத்தால் முதலைகளாக மாறிய அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்கி சாப விமோச்சனம் அளித்து இங்கு கோவில் கொண்டதாகவும் தல புராணம் தெரிவிக்கிறது தர்மத்தின் தெய்வமாக காட்சி தரும் சாஸ்தா தவறுகளை தண்டிப்பவனாகவும், பேரிடர்களில் இருந்து பக்தர்களை காப்பவனுமாக இங்கு கோயில் கொண்டுள்ளார்.

வருடத்தில் இரு முக்கிய திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அதில் மார்கழி மாதத்தில் நடக்கும் பங்குனி உத்திர விழாவும், சித்திரை மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் கலமெழுத்து பாட்டு உற்சவம் ஆகும் சபரிமலையில் நடப்பது போல இங்கு நடக்கும் பங்குனி உத்திர விழாவின் போது மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாஸ்தாவை வணங்கி வழிபட்டு வருகின்றனர்

அது போல சித்திரை மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் கலமெழுத்து பாட்டு உற்சவம் இங்கு உக்கிர மூர்த்தியாக உள்ள ஐயப்பனுக்காக நடத்தப்படும் வழிபாட்டு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்சியின் போது சாயத்தூள்களை நிலத்தில் வரைந்து சாஸ்தாவின் கதா கலாட்சேபங்கள் நடத்தப்படுகிறது. 7 நாட்கள் நடத்தப்படும் நிகழ்வில் கேரள தேசத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு இறைவனின் ஆசியை பெறுகின்றனர்.

கோவிலில் உள்ள சாஸ்தா சனி தோஷங்களை நிவர்த்தி செய்யும் இறைவனாக இருப்பதால் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி தேவனை வணங்கி அருள் பெற்று வருகின்றனர். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சாஸ்தா, முதலையை பிடித்தபடி காட்சிதரும் தேவன், சாம்ராஜ்யங்களின் குலம் தெய்வம், சனி தோஷம் நீக்கும் சாஸ்தா போன்ற பெருமைமிக்க போற்றுதல்கள் இக்கோவிலின் மகத்துவத்தை பறைசாற்றி நிற்கிறது.

மாலை முரசு செய்திகளுக்காக கலைமாமணி நந்தகுமார்..

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.