sampavar vadakarai ayyapan kovil history Admin
ஆன்மீகம்

வரம் அருளும் சாம்பவர்வடகரை ஐயப்ப சுவாமி கோயில்

அழகான அருவிகளை தாண்டியும, பசுமை போர்த்திய விளை நிலங்களை கடந்தும் செல்லும் சிறிய கிராமத்திற்குள்தான் அந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் 18 படிகளை கொண்டு அருள் பாலிக்கின்றார்.

Anbarasan

பக்தர்கள் கருவறைக்குள் சென்று ஐயப்பனுக்கு தன் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபடும் ஐயப்ப சுவாமி திருக்கோவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட சாம்பவர்வடகரை கிராமத்தில் அமைந்துள்ளது.

அழகான அருவிகளை தாண்டியும, பசுமை போர்த்திய விளை நிலங்களை கடந்தும் செல்லும் சிறிய கிராமத்திற்குள்தான் அந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் 18 படிகளை கொண்டு அருள் பாலிக்கின்றார்.

இந்த அற்புதமான ஐயப்ப சுவாமி கோயிலுக்கு சென்று கால் பதித்தால் பக்தனுக்கு பாவங்கள் தீரும், அங்கு வீற்றிருக்கும் தேவனின் கண்களை பார்ப்பவனுக்கு கருணை நீர் இதயத்தில் சுரக்கும், தாழ் பணிந்து வணங்கும் உடலுக்கு நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்பதில் அணு அளவும் ஐயமில்லை.

48 நாட்கள் பிரம்மச்சார்ய விரதம் இருந்து, கடும் சோதனைகளை கடந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஒரு விநாடியில் பார்க்க துடிக்கும் ஒரே தரிசனம் ஐயப்பனின் திவ்ய தரிசனம்தான்.

கார்த்திகை பிறந்து விட்டாலே அவன் அழகை மறுமுறை மறுமுறை காண கண்கள் துடிக்கும், கழுத்தில் மாலை அணிய மனம் ஏங்கும். ஆயுள் முழுதும் அவன் தரிசனம் காண இதயம் துடிக்கும்.

கல்லும் முள்ளும் கடின பாறைகளிலும் கால் பதித்து, ஏறாத மலைகள் எல்லாம் ஏறி உடல் சோர்வடைந்த நிலையில் அந்த ஒரு வினாடி சன்னிதானத்தில் கிடைக்கும் மணிகண்டனின் தரிசனத்தற்காக ஏங்கி துடிக்கும் இதயங்கள்தான் எத்தனை எத்தனை?

அப்படிப்பட்ட தேவனை நாள் முழுதும் கண்டும், நம் கரங்களால் தொட்டு அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் ஒருவருக்கு கிடைக்கும்போது அவன் வாழ்நாளில் இதைவிட ஆத்ம திருப்தி எதில் கிடைக்கபோகிறது?

அப்படிப்பட்ட ஆத்ம தரிசனத்தை, அளவிட முடியாத ஆனந்தத்தைத் தரும் ஆலயம்தான் சாம்பவர்வடகரை ஐய்யப்ப சுவாமி திருக்கோவில்.

ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் அவசியம் சென்றுவர வேண்டிய இந்த ஆலயம் ஐயப்பனின் அருள் வாக்கின்படி அமைந்தது என்பதுதான் நிஜம்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று வழிபட்டு வந்த ஐயப்ப பக்தரான சாம்பவர்வடகரையை சேர்ந்த ராஜசேகருக்கு ஐயப்பனின் அருள்வாக்கு கிடைத்தது. அதனை திருவாக்காக நினைத்த அவர் சாம்பவர்வடகரை பகுதியில் ஐயப்ப சுவாமி கோவிலை கட்ட முடிவு செய்து. கடந்த 2006-ம் ஆண்டு பூமி பூஜையுடன் ஆலயம் அமைக்கும் பணியினை தொடங்கினார்.

2009-ம் ஆண்டு 18 படிகள் நிறுவப்பட்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலின் தோற்றத்திலேயே காட்சி தரும் வகையில்.இந்த கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்துடன் தொடங்கப்பட்டு பக்தர்கள் அங்கிருக்கும் ஐயப்பனை வழிபடத் தொடங்கினர்.

2014-ம் ஆண்டு கோவிலில் கொடிமரம் அமைக்கப்பட்ட ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. மார்கழி மாதம் 13ம் நாள் மண்டல பூஜைகள் துவங்க தை மாதம் முதல் நாள் மகர ஜோதி தீபமும் ஏற்றப்படுகிறது.

கேராளத்தில் ஐந்துமலைக்கு நடுவில் அமைந்திருக்கும் தர்ம சாஸ்தா ஆலய வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலில், பூசாரி யாரும் பணி செய்வது இல்லை, நம்பூதிரிகள் அபிஷேக ஆராதனைகள் செய்வதில்லை எல்லாம் ஐயப்ப பக்தர்களின் கரங்களால் நடக்கிறது.

சாதி மதம் பணம் பதவிகளுக்கு இந்த கோவிலில் இடமில்லை, மனிதம் மட்டுமே போதும் அந்த மகேசனை வழிபட என்கின்றனர் ஐயப்ப பக்தர்கள்.

48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் தனது கரங்களால் சுவாமிக்கு மாவுப்பொடி, மஞ்சள்பொடி போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்து தீபாராதனையை. காண்பித்து பரவசமடைகின்றனர்.

மேலும் இருமுடி கட்டி கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தேங்காயில் அடைத்து கொண்டு வரும் நெய்யால் மட்டுமே ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யமுடியும் என்பதால், உடல் எனும் தேங்காயை உடைத்து உள்ளம் எனும் நெய்யால் ஐயப்பனுக்கு இங்கே அபிஷேகம் நடைபெறுகிறது.

தீப விளக்குகளின் வெளிச்சத்தில் இந்த பொன்னம்பலம் அழகு மின்ன காட்சியளிக்கிறது. கோவில் பிரகாரம் சுற்றி வரும்போது 63 நாயன்மார்களில் நால்வரான மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய நால்வரின் சிலைகளும், அன்னை காயத்ரி, அன்னை காமாட்சி, அன்னை ஜெயலட்சுமி, அன்னை சரஸ்வதி, அன்னை அன்னபூரணி, அன்னை ராஜராஜேஸ்வரி, அன்னை அபிராமி, நாகராஜர், முத்து விநாயகரும்

அருணாசலேஸ்வரர், பரமேஸ்வரி, ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், தெய்வானை வள்ளியுடன் சுப்பிரமணியர், மாளிகை புரத்து அம்மன், சாய்பாபா, குருமுனி அகஸ்தியர் சிலைகளையும் இக்கோவிலில் ஒருசேர கண்டு வழிபடலாம்.

இக்கோவிலுக்கு இரு முடி கட்டி செல்பவர்கள் எரிமேலியில் பேட்டை துள்ளுவது போல அருகில் இருக்கும் கருப்பசுவாமி கோவிலில் இருந்து பேட்டை த் துள்ளி , ஆடிப்பாடியபடியே 18 படிகளை தாண்டி திருக்கோவிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

கேரளத்துக்கு சென்று அந்த ஐந்து மலை வாசனை வணங்க முடியாதவர்கள் யாராகினும் இந்த ஐயப்பனின் தலத்திற்கு இருமுடி சுமந்து வரலாம், இணையில்லா இறைவனின் அருளை பெறலாம்…

மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக கணேஷ்குமாருடன் நந்தகுமார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்