சித்தர்கள் வாழும் திருவண்ணாமலையில் எண்ணற்ற அதிசயங்கள் நடந்து வரும் நிலையில், மலை மீது வீற்றிருக்கும் இந்த முருகன் ஆலயத்தில் மாதம்தோறும் கிருத்திகை நாளில் இந்த அதிசயம் அரங்கேறுகிறது.
அன்றைய தினத்தில் மலரும் அந்த தெய்வீக பூவை, மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பார்க்கும் போது நினைத்த காரியம் நிறைவேறுவதால் அன்று மட்டும் ஆயிரக்காணக்கான மக்கள் கோயிலில் கூடி மலரையும், மலர்ந்த முகமுடைய முருகனையும், கண்டு தரிசனம் செய்கின்றனர்.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
திருவண்ணாமலை அருகே மலைகள் சூழ்ந்த ரம்மியமான சூழல் நிலவி வரும் சோமாசிபாடியில் 83 அடி உயரமுள்ள சிறு குன்றின்மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ள முருகன் கோயிலில் தான் அந்த தெய்வீகமும், தீர்த்த மலரும் மலர்ந்து பக்தர்களை பூரிக்க வைக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு வந்த சித்தர் ஒருவர் இந்த மலையின் மகிமைகளை அறிந்து, மலைக்குமேல் வேல் ஒன்றை வைத்து வழிபட்டார். நாளுக்கு நாள் வேலின் சக்தியால் ஆற்றல் நிறைந்த இடமாக மாறிய அந்த இடம், சித்தர் ஆசியாலும் பக்தர்களின் முயற்சியாலும் கோயிலாக எழுப்பப்பட்டது. கால ஓட்டத்தில் முருகனின் அருளால் பக்தர்களின் துன்பங்களை நீக்கி வந்த சித்தர் ஒரு நாள் யார் கண்ணுக்கும் தெரியாமல் ஜீவ சமாதி அடைந்ததாகவும் அவர் கோயிலை சுற்றி அருவமாக இன்றளவும் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த முருகன் கோயிலில் முதலில் முன் மண்டபம் நம்மை வரவேற்க, அங்கே முழு முதல் கடவுளான மங்கள விநாயகரை தரிசிக்கலாம், தொடர்ந்து பலிபீடம், மயில் வாகனம், வடகிழக்குப் பகுதியில் நவகிரக சன்னதிகள் அமைந்துள்ள நிலையில் கருவறை முன்மண்டபத்தில் ராஜ கணபதி அருள்கிறார்.
கருவறையில் எழிலோவியமாய் இருக்கும் முருக பெருமானின் இருபுறமும் வள்ளி-தெய்வானை தேவியர் தரிசனம் தரும் நிலையில் தீபாராதனை காட்டும் போது தீப ஒளியில் முருகன் உயிரோட்டமாய் காணப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோயில் இருக்கும் குன்றில் சரவணத் தீர்த்தம், குமாரத் தீர்த்தம், செங்கழுநீர்த் தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் காணப்படும் நிலையில் சரவணத்தீர்த்தத்தில் குளிப்பவர்களின் பாவங்கள் நீங்கி மன அமைதியான வாழ்க்கை வாழ்பார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் அருகே இடது பின்புறம் மிகப்புனித தீர்த்தமான குமாரத்தீர்த்தத்தில் இருந்துதான் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆலயத்தின் வலது பின்புறம் சிறிய அளவில் அமைந்துள்ள தீர்த்தம் செங்கழுநீர்த் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தீர்த்தத்தில் தான் முருகனுக்கு உதந்த கிருத்திகை தினத்தில் அந்த அதிசய நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருகிறது. இத்தீர்த்தத்தில் விளைந்துள்ள செங்கழுநீர் கொடியின் வேர்பாகத்தில் பூக்கும் செங்கழுநீர் மலரே இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.
பாதுகாப்பு சுவர்களுடன் காணப்படும் இந்த செங்கழுநீர் தீர்த்தத்தில் கிருத்திகை அன்று, முருகன் ஆலயத்தில் இருந்து மேள தாள வாத்திய முழக்கத்துடன் வரும் சிவாசாரியார், தீர்த்தத்தில் வளர்ந்திருக்கும்.
மலர் கொடியில் வேர்ப் பாகத்தில் தோன்றியிருக்கும் சிறிய அரும்பு போன்ற பூவினை எடுத்து வந்து மூலவர் பாலசுப்பிரமணியருக்குச் சமர்ப்பணம் செய்வார்கள்.
இந்தப் பூ பச்சை நிறத்தில் இருந்தால் அம்மாதத்தில் நல்ல மழை வரும் என்றும், இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் காற்று வீசும் என்றும், இரண்டும் கலந்து இருந்தால் மழையும் காற்றும் ஏற்படும் என்பது காலம் காலமாய் மாறாது நடந்து வரும் அதிசய சம்பவம் ஆகும். இந்த பூ முருகனுக்கு சமர்ப்பித்து தீபாராதனை காட்டிய சில நிமிடங்களின் கரைந்து மறைந்து போவதும் இக்காலம் வரை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்து , 6 தீபங்கள் ஏற்றி செங்கழுநீர் மலரை காணும் போது நினைத்த காரியங்கள் நடைபெறுவதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துகொண்டே போகிறது.
இத்தலத்திற்குத் அரளிச் செடி தல விருட்சமாக விளங்குவதோடு இது வெள்ளை, சிவப்பு, சந்தனம் என வெவ்வேறு வண்ணப் பூக்களைப் பூக்கின்ற காட்சியும் முருகனின் அருளேயின்றி வேறில்லை என்கின்றனர் பக்தர்கள்.
மாலை தொலைக்காட்சி செய்திகளுக்காக திருவண்ணாமலை செய்தியாளர் கார்த்திகேயனுடன் கலைமாமணி நந்தகுமார்....
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்