கார்த்திகை பெண்கள், 27 நட்சத்திரங்கள், நாகங்கள் உட்பட தேவாதி தேவர்கள் தினம்தோறும் வழிபடும் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முருகன் கோவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே வில்வராணி என்ற ஊரில் குன்றின் மீது காட்சியளிக்கிறது
வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து முருகன் சிவபெருமானுக்கு நித்திய பூஜை செய்யும் தனிப்பெரும் ஆலயமாக இது திகழ்கிறது.
மலைகள் எல்லாம் தனது வாழ்விடமாக நினைத்து வீற்றிருக்கும் , ஆறுமுகன், பேரெழிலன், வேல்முருகன்,மால் மருகன், மயில்வாகனன், சரவணன் இக்கோவிலில் தனித்தன்மையோடு சுயம்புவாக காட்சி தருகிறார்.
சிவனும் சிவமைந்தன் முருகனும் ஒன்றே என்பதை விளக்கும் இந்த அற்புதமான திருத்தலம் ஜவ்வாது மலையில் உருவாகி, வங்கக் கடலில் சங்கமிக்கும் செய்யாற்றின் கரையோரம் கம்பீரமாக காட்சி தருகிறது.
அறுபடை வீடுகளிலும் வேலோடும்,சிரித்த முகத்தோடும் , மயிலோடும் காட்சி தரும் முருகன் வில்வாரணி நட்சத்திர கிரியின் நடுமலையில் வேலோடு நின்ற வானுயர்ந்த சிலையாக காட்சி தருகிறார்
ஒருமுறை வாழைத் தோட்டத்தில் வல்லவன் முருகன் வில்லெடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் எய்த ஒரு அம்பு பருவத மலையின் மீது பாய்ந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த சப்தரிஷிகள் தலைகளை துண்டாடியது.
அப்போது ரிஷிகளின் ரத்தம் ஆறாக வழிந்தோடிய நிலையில் முருகனின் அருளால் நன்னீராக மாறி தற்போது நதி நீராக ஓடி வருகிறது.
விளையாட்டாய் வினை செய்ததால் சப்தரிஷிகளை கொன்ற பாவம் நீங்க, அன்னை பார்வதியின் ஆலோசனை பெற்ற முருகன் இந்த வில்வ ராணி மலையில் அமர்ந்து சுற்றி இருந்த ஏழு மலைகளில் சண்டிகேஸ்வரரையும், ஏழு மலைகளில் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த 14 ஆலயங்களுக்கும் வழிபாடுகள் செய்த சிவாச்சாரியார்களின் கனவில் தோன்றிய முருகன் நட்சத்திர கிரி மலையின் நடுவில் நான் சுயம்புவாக வீற்றிருக்கிறார், நாடி வந்து என்னை வழிபட்டால் நட்சத்திர தோஷங்களை போக்கி நல்லருள் புரிவார் என்று அருள் கூறினார்.
நட்சத்திர கிரி மலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நாகங்கள் வழிகாட்ட, மலை மீது சப்பாத்திக்கள்ளி புதரில் ஒரு சுயம்பு ரூபமாய் சர்வ சக்தி படைத்த முருகன் காட்சி அளித்ததை அடுத்து அங்கே கோயில் எழுப்பப்பட்டதாக தல வரலாறுகளும், காஞ்சிபுராணம் மற்றும் அருணாச்சல புராணங்களும். எடுத்துரைக்கின்றன .
கதிரவனும் சந்திரனும் இந்த உலகில் உள்ளவரை, தினம் தோறும் 27 நட்சத்திரங்களும் நாகங்களும் என்னை வழிபடும் என்று முருகப்பெருமான் அருளியிருக்கின்ற இந்த ஆலயத்தில் கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு ஆக சிவனும் ஒருசேர காட்சி தருகின்றனர்.
மலையின் கீழ் இருந்து 227 படிகள் ஏறி சென்றால் முருகனஅழகாக சிரித்த முகத்தோடு பக்தர்களுக்கு காட்சியளிப்பதை காணலாம்.
இக்கோவிலில் உள்ள சுயம்பு முருகனை வழிபட்டால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை கொண்ட பக்தரகள் கார்த்திகை தோறும் இந்த நட்சத்திர கிரி மலையை வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இக்கோவில் குடமுழுக்கின் போது, மலேசியா நாட்டில் உள்ள முருகன் சிலையை போல், 42 அடி உயர முருகன் சிலையை .பக்தர்கள் இங்கு எழுப்பி குன்றின் அழகை மேலும் கம்பீரமாகியுள்ளனர்.
இக்கோவிலில் செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு தேனினால் அபிஷேகம் செய்து, சம்பா அரிசியில் சாதம் செய்து படைப்பார்கள்,மேலும் இக்கோவிலில் முருகருக்கு செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாக தோஷம், புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும் என்பது ஐதீகமாகும்.
பக்தர்களின் ஜாதகத்தில் ஒரு கிரகம் படுமோசமாக நீச்சகத்தில் இருந்து அதனால் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வந்தாலும், ஒரு கர்மாவின் அடிப்படையில் நீங்கள் இந்த நட்சத்திர கோவிலுக்கு சென்றே தீர்வீர்கள் என்பதும். அப்படி செல்லும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது வழக்கம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்