ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காட்சிதரும் சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வீற்றிருக்கும் சிறப்புமிக்க கோவிலை பற்றி காணலாம்
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காட்சிதரும் 
சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்
Admin
Published on
Updated on
2 min read

சிவ ஆலயங்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இந்த வைணவ ஆலயத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவராக காட்சி தந்து பக்தர்களின் கடன் பிரச்சனைகளை தீர்த்தருளும் தெய்வமாக வீற்றிருக்கிறார்.

சொர்ண ஆகர்ஷ்ண பைரவரும், கல்விஞானத்தைத் தரும் ஹயக்ரீவரரும், சரஸ்வதியும், உடல் ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரியும் அருள் வழங்கும் அற்புதமான கலை நயம் மிக்க கோவிலை தான் இன்று நமது மாலை முரசு தொலைக்காட்சி வழியாக தரிசனம் செய்ய உள்ளோம்

திண்டுக்கல் இருந்து கரூர் செல்லும் வழியில் தாடிக்கொம்பு என்னும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்திரராஜப் பெருமாள் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு சிற்பக் கலைகளின் சிகரமாக விளங்குகிறது

விஜயநகர பேரரசு வம்சத்தில் வந்த அச்சுத தேவராயர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக் கோவிலில், பிரதான தெய்வமாக அழகர் மலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரிலும், லட்சுமிதேவி சௌந்தரவல்லி தாயார் என்கிற பெயரிலும் வீற்றிருந்து பக்தர்களின் சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை தருகின்றனர்.

ஒரு சாபத்தின் காரணமாக தவளை உருவம் பெற்ற மாண்டூக முனிவர், மதுரை அழகரை நோக்கி தவமிருந்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் இது என்றும், பின்னர் முனிவரின் விருப்பத்தின் படியே மதுரை கள்ளழகர் இத்தளத்தில் சுந்தரராஜ பெருமாளாக அருள்பாளித்து வருவதாகவும் தல வரலாறுகள் கூறுகின்றன.

ஐந்து நிலை ராஜகோபுரத்தோடும், சுற்றி அழகிய மதிற் சுவறுகளோடும் அமைந்துள்ள கோவிலின் உள்ளே பிரகாரமும். ஐந்து சன்னதிகளும் தெய்வீக ஆற்றல் நிறைந்ததாக காட்சியளிக்கிறது.

கோவிலின் கர்ப்பகிரகத்தில் அழகிய திருமேனி கொண்ட அலங்கார சௌந்தர் ராஜ பெருமாள்,ஶ்ரீ தேவி, பூதேவி, சமேதகராக காட்சி அளிக்கிறார். அதனோடு.ஆழ்வார்களின் செப்பு திருவுருவங்களும் திருமாலின் தசாவதாரத்தினை விளக்கும் சிற்பங்களும் காண்போர் கண்களை பிரமிக்க வைக்கிறது.

உலகில் வேறு எங்கும் காண முடியாத படி இக்கோவிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர்,சரஸ்வதி அடுத்தடுத்து காட்சி தந்து அருள் பாலிக்கின்றனர் .படிப்பில் மந்தம் , ஞாபக மறதி, பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள், திருவோணத்தன்று ஹயக்ரீவருக்கு நடக்கும் தேனாபிஷேகத்தில் கலந்து கொண்டு. ஏலக்காய் மாலை அணிவித்து வணங்கினால் உடல் குறைகள் நீங்கி சிறந்த கல்வி அறிவு பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பாக சர்வ நோய்களுக்கும் நிவாரணம் வழங்கும் தன்வந்திரி பெருமாளுக்கு அமாவாசை நாளில் நடக்கும் நெய்கலந்த லேகியமும், சந்தனாதி தைலமும், அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் அருமருந்தாக வழங்கப்படுகிறது.

இங்குள்ள தாயார் சன்னதி மண்டபத்தில் அமைந்துள்ள ரதி மன்மதன் சிலைகளுக்கு பிரதி வியாழக்கிழமைதோறும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு அபிஷேகத்தை காணும் போது திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதாக நம்பப்டுவதால் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

வியாழக்கிழமை தோறும் இங்கு உள்ள ஆண்டாளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணம் கை கூடும்,.குழந்தை வரம் , வணிக வளர்ச்சி , வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .

கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதால் மதுரையில் சித்ராபவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்குவது போல, இங்குள்ள பெருமாளும் குடகனாற்றில் இறங்கும் சிறப்புமிக்க விழா பல லட்சம் பக்தர்கள் சூழ நடந்தேருகிறது.

இன்னும் ஏராளாமான தெய்வாற்றல் நிறைந்த கோவிலுக்கு செல்வோம், தெய்வருள் பெற்று வளமோடு வாழ்வோம்.

மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ராஜ்குமாருடன் கலைமாமணி நந்தகுமார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com