thoranamalai murugan kovil history in tamil Admin
ஆன்மீகம்

உலகின் முதல் கபால அறுவை சிகிச்சை நடந்த இடம் - வாரணமலை எப்படி தோரணமலை ஆனது?

உலகின் முதல் கபால அறுவை சிகிச்சை நடந்த தளமாகவும் புகழப்படும் தனித்துவம் நிறைந்த தோரணமலை மலையை பற்றி காண்போம்...

Anbarasan

மேகமே கோபுரமாய், மலர் செடி மரங்களே தோரணமாய், மலை குன்றே யானை வாகனமாய், விழுகின்ற சுனை நீரின் ஓசைகளே இசையாய், மூலிகைகள் மணமே மூச்சுக்காற்றாய் வீசும் தோரணமலை என்னும் தெய்வீக இடத்தில் வேலவன், முத்தமிழுக்கும் வித்தகன், குகன் எனும் முருகன் வேலும் மயிலோடும் காட்சிதருகிறான்.

மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

விஞ்ஞானமும் மெய் ஞானமும் அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்றாய் கலந்து மனித இனத்தின் நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்த முதல் ஆய்வுக்கூடம் இங்குதான் தோன்றியது. வினை தீர்க்கும் வேலவன் நோய் தீர்க்கும் மருந்துகளை அகத்தியருக்கு அருளிய இடம்தான் தோரணமலை.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இயற்கை எழிலோடு 800 அடி உயரத்திற்கும் மேலே ஆயிரத்து 1 படிகள் கொண்ட, மலை உச்சியில்,கிழக்கு நோக்கி வலது மற்றும் இடது புறங்களில் இரு சுனைகளுக்கு நடுவே நின்ற கோலத்தில் வேலவன் வில்லோடும் மயிலோடும் காட்சியளிக்கிறார். யானை படுத்திருப்பது போல் காட்சி தருவதன் காரணமாக இந்த மலை முதலில் 'வாரணமலை ' என்று அழைக்கப்பட்டது.அதுவே தற்போது மருவி 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது. இந்த மலைக்கு தென்புறம் ராமா நதியும் வடக்கு பக்கம் ஜம்பு நதியும் தோரணம் போல கந்தனின் மலையை சுற்றி ஓடுவதால் இதற்கு தோரணமலை என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மகனுக்கு அருகில் அன்னை இருப்பது போல் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரே பத்திரகாளியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். அதன் அருகே ஸ்ரீராமரின் பாதமும் அகத்தியர் வணங்கிய லிங்கமும், புற்றுக்கோவிலும் காணப்படுகிறது.

64 தெய்வச்சுனைகள் வற்றாது வழிந்தோடும்.இந்த திருத்தலத்தில் தான் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகைகளைக் கண்ட அகத்தியர், முருகப்பெருமானின் வழிகாட்டலின்படி உலகின் முதல் மருத்துவ சாலையை உருவாக்கினார். தீராத தலைவலியால் அவதிப்பட்ட காசிவர்மன் என்ற மன்னனின் தலைவலியை நீக்க கபாலத்தை திறந்து அறுவை சிகிச்சையும் செய்தார். மனித மண்டை ஓட்டை பிரித்து முதன் முதலில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கூடம் தோன்றியது இந்த தோரணை மலையில்தான்.

ஒரு காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மருத்துவர்கள் நோய் தீர்க்கும் முறைகளை இந்தத் தோரணை மலை கால சாலையில் தான் கற்றுத் தெரிந்திருக்கிறார்கள்.

ஞானக்கண்ணில் தோன்றிய முருகன் அருளால் மருத்துவத் துறையில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்கள் எழுதிய அகத்தியரின் ஆற்றல் அறிந்து பல்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து பாடம் பயின்று பட்டங்கள் பெற்றதாக இந்தத் தோரணை மலை வரலாறு கூறுகிறது

அகத்தியரோடு இணைந்து அவரது சீடரான தேரையரும் இங்கு தங்கி இருந்து மருத்துவ ஆய்வுகள் பல செய்து புதிய மருந்துகளைக் கண்டறிந்ததோடு. 700 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்து நாடி வந்த மனிதர்களுக்கு சேவை புரிந்து இறுதியில் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

தேரையரே இந்த மலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் சித்தரின் அருள் அதிர்வலைகள் இப்போதும், எப்போதும் இந்த மலையில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதை நிரூபிக்கும் விதமாக அம்மாவாசை, பௌர்ணமி மற்றும் முக்கியமான ஆன்மீக நாட்களில் இங்கு சித்தர்கள் வழிபாடு நடத்துவதாகவும் அப்போது மணியோசைகள் கேட்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த அதிசய சக்தி நிறைந்த தோரணமலை நாளடைவில் அப்படியே தூர்ந்து முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலும் புதைந்து போனது. இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து இந்த பகுதியில் உள்ள ஒரு ஊர் பெரியவர் கனவில் தோன்றிய கார்த்திகேயன், நான் அருகில் உள்ள சுனையில் கிடக்கிறேன். என்னை எடுத்து வணங்குங்கள் கூறியுள்ளார். தேவர்கள் வணங்கும் கார்த்திகேயக் கடவுள், சிலையாய் சுனையில் கண்டெடுக்கப்பட்டு இன்றும் குககையில் கோயில் கொண்டு காட்சியளிக்கிறார்.

மலையடிவாரத்தில் வல்லப விநாயகர், சப்த கன்னியர், குரு பகவான் மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. மேலும், சுதையாலான சிவபெருமான், சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன

தொழில் வளம் சிறக்க, குடும்பப் பிரச்னை தீர, எதிரிகளின் தொல்லை அகல, நோய்கள் குணமாக, கல்வி, வேலை வாய்ப்பு, திருமணப் பேறு, மகப்பேறு, உயர் பதவி ஆகியவற்றுக்காக இக்கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது

வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

கிருத்திகை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர, தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாள் ஆகியவை இக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களாக பக்தர்களால் விமரிசியாக கொண்டாடப்பட்டு வருகிறது

ஒவ்வொருமுறை இந்த மலைக்குச் செல்ல படிகள் ஏறும்போதெல்லாம், தங்களை வாழ்க்கையிலும் உயர்த்தி விடும் முருகப்பெருமான் அருளை பெறுவோம் ஆனந்தமாய் வாழ்வோம்

மாலைமுரசு செய்திகளுக்காக தென்காசி செய்தியாளர் கணேஷ்குமாருடன், நந்தகுமார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்