விளையாட்டு

1110 நாட்களுக்குப் பிறகு நேர்ந்த சம்பவம்.. லக்னோ வீரர் வீசிய 140 கி.மீ வேகப் பந்து.. கிளீன் போல்டாகி மிரண்டு நின்ற விராட் கோலி!

2023-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அவர் டக்-அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது

மாலை முரசு செய்தி குழு

லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, லக்னோ அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் வீசிய அபாரமான பந்துவீச்சில் கிளீன் போல்டாகி அதிர்ச்சியில் உறைந்து நின்றார். மணிக்கு 140.4 கிலோமீட்டர் வேகத்தில் வந்த அந்தப் பந்து, சுமார் 1.4 டிகிரி ஸ்விங் ஆகி கோலியின் ஆஃப் ஸ்டம்பைத் தூக்கியது. தான் அவுட்டானதை நம்ப முடியாமல் சில நொடிகள் கோலி மைதானத்திலேயே உறைந்து போய் நின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரின்ஸ் யாதவ் வீசிய அந்த அவுட்ஸ்விங் பந்தை எதிர்கொள்ள கோலி முன்னே வந்தபோது, பந்து லேட்டாக உள்ளே வந்து ஸ்டம்பைப் பதம் பார்த்தது. வெறும் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் முறையில் வெளியேறினார். இது கோலிக்கு சாதாரண அவுட் கிடையாது. ஐபிஎல் வரலாற்றில் சுமார் 1110 நாட்களுக்குப் பிறகு கோலி டக்-அவுட் ஆகியுள்ளார். கடைசியாக 2023-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அவர் டக்-அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, மிட்செல் மார்ஷின் அதிரடி சதத்தால் 19 ஓவர்களில் 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. மழையினால் போட்டி 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், மிட்செல் மார்ஷ் வெறும் 56 பந்துகளில் 111 ரன்கள் குவித்து பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதில் 9 சிக்ஸர்கள் மற்றும் 9 ஃபோர்கள் அடங்கும். அவருக்குத் துணையாக நிக்கோலஸ் பூரன் 38 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி நேரத்தில் வெறும் 10 பந்துகளில் 32 ரன்களும் விளாசி அசத்தினர்.

தொடக்க வீரராகக் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் ஹேசில்வுட் மற்றும் ரசிக் சலாம் பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 20 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர், 49 பந்துகளில் சதமடித்து லக்னோ அணி வீரர்களில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறினர். இறுதியில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 200 கடக்கச் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.