விராட் கோலி கொடுத்த ஐடியா.. அவருக்கே வினையாக முடிந்த சோகம்! லக்னோவிடம் சரண்டரான பெங்களூரு - பரபரப்பான ஆட்டத்தில் என்ன நடந்தது?

லக்னோ அணிக்கு, இந்த சீசனில் தனது சொந்த மண்ணில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்
RCB vs LSG
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 2026 தொடரில் வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் பெங்களூரு அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆப் ரேஸில் நீடிக்கிறது. மழையினால் மூன்று முறை ஆட்டம் தடைப்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பெங்களூரு அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆறு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த லக்னோ அணிக்கு, இந்த சீசனில் தனது சொந்த மண்ணில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 56 பந்துகளில் 111 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். மழையினால் ஆட்டம் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போதிலும், லக்னோ 209 ரன்களைக் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தலை முகமது ஷமி முதல் ஓவரிலேயே அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில பந்துகளிலேயே இளம் வீரர் பிரின்ஸ் யாதவ் வீசிய அபாரமான பந்தில் விராட் கோலி கிளீன் போல்டாகி டக்-அவுட் முறையில் வெளியேறினார். 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு கோலி ஐபிஎல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும்.

தன்னை அவுட் செய்த பிரின்ஸ் யாதவ் குறித்து பேசிய போது, ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். "கடந்த போட்டியின் போது நான் விராட் பாயிடம் டிப்ஸ் கேட்டேன். அப்போது அவர், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் போது ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஒரே லென்த்தில் பந்து வீசுமாறு எனக்கு அட்வைஸ் கொடுத்தார். அவர் கொடுத்த அதே ஐடியாவைப் பயன்படுத்தி தான் இன்று அவருடைய விக்கெட்டையே எடுத்தேன்" என்று பிரின்ஸ் யாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோலி கொடுத்த ஐடியாவே அவருக்கு எதிராகத் திரும்பியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அணியில் கேப்டன் ரஜத் படிதார் 61 ரன்களும், படிக்கல் 34 ரன்களும் எடுத்து அணியை மீட்கப் போராடினர். ஒரு கட்டத்தில் வெற்றி பெங்களூரு பக்கம் செல்வது போல் தெரிந்த நிலையில், பிரின்ஸ் யாதவ் மீண்டும் வந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை லக்னோ பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது, லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். இதனால் பெங்களூரு அணியால் 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோ அணியின் வெற்றிக்குக் காரணமான மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com