Narendra Modi Stadium 
விளையாட்டு

பெங்களூருவில் நடக்க வேண்டிய ஐபிஎல் பைனல்.. திடீரென அகமதாபாத்திற்கு மாற்றியது ஏன்? பிசிசிஐ சொன்ன விசித்திர காரணம்

பொதுமக்களுக்கு விற்க டிக்கெட்டே இருக்காது என்கிற இக்கட்டான சூழல் நிலவியுள்ளது

மாலை முரசு செய்தி குழு

ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்து அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டதற்கான உண்மையான காரணத்தை ஐபிஎல் தலைவர் அருண் தும்மல் தற்போது உடைத்துள்ளார். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் சொந்த மைதானத்தில் தான் இறுதிப் போட்டி நடந்திருக்க வேண்டும். ஆனால், மே 31-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்டமான போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு மைதானத்தில் வெறும் 40,000 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், கர்நாடக மாநில அரசிடமிருந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களுக்கு இலவச டிக்கெட்டுகள் (Complimentary tickets) கேட்டு அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டதே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று அருண் தும்மல் தெரிவித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ-வுக்கு மூன்று இலவச டிக்கெட்டுகள் என்ற கணக்கில் அனைவருக்கும் வழங்கினால், பொதுமக்களுக்கு விற்க டிக்கெட்டே இருக்காது என்கிற இக்கட்டான சூழல் நிலவியுள்ளது. மேலும், அந்த நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போர்டு மீட்டிங் இந்தியாவில் நடக்கவுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு போதிய இடவசதி செய்ய வேண்டிய கட்டாயம் பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ளது.

1.30 லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத் மைதானம் என்றால் மட்டுமே ரசிகர்களுக்கும், விஐபி விருந்தினர்களுக்கும் டிக்கெட் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அகமதாபாத் மைதானத்திற்கு பிசிசிஐ அதிக முக்கியத்துவம் அளிப்பதாக எழுந்துள்ள புகார்களை மறுத்த தும்மல், டிக்கெட் பிரச்சனை மற்றும் இடவசதி காரணமாகவே பெங்களூருவில் போட்டியை நடத்துவது சாத்தியமில்லாமல் போனதாகக் குறிப்பிட்டார். ஒருவேளை கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் ஆகியிருந்தால், நிச்சயம் சென்னையில் இறுதிப் போட்டி நடத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார். பிசிசிஐ-யின் இந்த அதிரடி முடிவால் கர்நாடக கிரிக்கெட் சங்கம் பெரும் அதிருப்தியில் உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.