இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அணி நிர்வாகம் அவருக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கிய போதும், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராகுல் டிராவிட் விலகியது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "ராகுல் டிராவிட் பல ஆண்டுகளாக ராயல்ஸ் அணியின் பயணத்தில் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார். அவரது தலைமைப் பண்பு, இளம் வீரர்களின் தலைமுறையை வடிவமைத்துள்ளது. மேலும், அணிக்குள் வலிமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அணியின் கலாச்சாரத்தில் ஓர் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவரது சிறப்பான சேவைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
ஏமாற்றம் அளித்த ஐபிஎல் 2025 சீசன்
ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அணி பத்து போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒருபடி மேலே, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
டிராவிட்டுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நீண்ட தொடர்பு உண்டு.
2012 மற்றும் 2013 ஐபிஎல் சீசன்களில் அவர் அணியின் கேப்டனாக இருந்தார்.
2014 மற்றும் 2015-இல் அணியின் வழிகாட்டியாகவும் (mentor) பணியாற்றினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
தோல்விக்கான காரணங்கள்
ஐபிஎல் 2025 சீசனில் அணி ஏமாற்றம் அளித்ததோடு, கேப்டன் சஞ்சு சாம்சன், உடல்நலக் குறைவு காரணமாக 14 லீக் போட்டிகளில் ஒன்பதில் மட்டுமே விளையாடினார். அவர் இல்லாத நேரத்தில், ரியான் பராக் அணிக்குத் தலைமை வகித்தார்.
தற்போதுள்ள நிலையில், டிராவிட்டின் ராஜினாமாவுக்குப் பிறகு, ஐபிஎல் 2026-க்கான அணியை வலுப்படுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.