ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், தனக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குடியுரிமை வழங்க முன்வந்தும், அதைத் தான் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தனது தாய்நாடான ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவதையே பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் எழுதியுள்ள 'ரஷீத் கான்: ஸ்ட்ரீட்ஸ் டு ஸ்டார்டம்' (Rashid Khan: From Streets to Stardom) என்ற புத்தகத்தில் இது குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரின் போது நடந்த ஒரு சம்பவத்தை அவர் அதில் விவரித்துள்ளார்.
அந்தச் சமயத்தில் இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான புள்ளி ஒருவர் ரஷீத் கானைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் வந்துள்ளது. அவரைச் சந்தித்தபோது, "உங்கள் நாட்டின் (ஆப்கானிஸ்தான்) நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. எனவே நீங்கள் இந்தியாவிலேயே தங்கிவிடுங்கள். உங்களுக்குத் தேவையான இந்திய ஆவணங்களை நாங்கள் வழங்குகிறோம், இங்கேயே தங்கி கிரிக்கெட் விளையாடுங்கள்" என்று அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஷீத் கான், மென்மையாகப் புன்னகைத்துவிட்டு, "மிக்க நன்றி, ஆனால் நான் எனது நாடான ஆப்கானிஸ்தானுக்காக மட்டுமே விளையாடுவேன்" என்று பதில் அளித்துள்ளார்.
இதேபோன்ற சலுகைகள் தனக்கு ஆஸ்திரேலியாவிலிருந்தும் வந்ததாக ரஷீத் கான் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் எனக்குக் குடியுரிமை வழங்க முன்வந்தன. ஆனால் நான் அவர்களிடம் ஒன்றுதான் சொன்னேன், எனது நாட்டுக்காக நான் விளையாடவில்லை என்றால், வேறு எந்த நாட்டுக்காகவும் நான் விளையாட மாட்டேன்" என்று தனது தேசப்பற்றை உறுதிபடத் தெரிவித்துள்ளார். 25 வயதேயான ரஷீத் கான், ஆப்கானிஸ்தான் மீது வைத்துள்ள இந்த அதீத விசுவாசம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடியபோது, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் அபாரமாகச் செயல்பட்டார். அப்போது சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் பலரும் ரஷீத் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த அளவுக்கு இந்திய மக்கள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அன்பை எப்போதும் மதிக்கிறேன் என்று ரஷீத் கான் தனது புத்தகத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் ரஷீத் கானின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். தனது மகனுக்கு 'அஸ்லான்' (Aslan) என்று பெயரிட்டுள்ளதாக அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். "உலகிற்கு வணக்கம், எனது பெயர் அஸ்லான் கான்" என்று எழுதியுள்ள மரப்பலகையுடன் கூடிய புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
தந்தையான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ரஷீத் கான், "அல்ஹம்துலில்லாஹ், எனது குட்டி இளவரசனை இந்த உலகிற்கு வரவேற்கிறேன்" என்று பதிவிட்டு, தனது குடும்பத்திற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் செய்தி வெளியானவுடன் சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்குத் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.