சாத்விக் - சிராக்  சாத்விக் - சிராக்
விளையாட்டு

"நாங்கள் வென்றது யாருக்கும் தெரியாது.. யாருக்கும் அக்கறையும் இல்லை": பதக்கம் வென்ற கையோடு சாத்விக் - சிராக் ஆவேசப் பதிவு!

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் உலகளாவிய சாதனைக்குக் கிடைக்கவில்லை என்பதே சாத்விக் - சிராக் ஜோடியின் கோபத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் இரட்டையர் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர், தாமஸ் கோப்பைத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால், அரையிறுதியில் பிரான்சிடம் தோல்வியடைந்ததால் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. பதக்கம் வென்ற பிறகு இந்திய அணி நாடு திரும்பியபோது, அவர்களுக்கு விமான நிலையத்தில் எந்தவிதமான உற்சாக வரவேற்போ அல்லது பெரிய அளவிலான பாராட்டுக்களோ கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது மனவேதனையை வெளிப்படுத்தும் வகையில், சாத்விக் மற்றும் சிராக் இருவரும் இந்திய அணியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், "தற்போது வீட்டிற்குத் திரும்பிவிட்டோம். வழக்கம்போல, கடந்த இரண்டு வாரங்களாக என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது, உண்மையைச் சொல்லப்போனால் இதைப் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை என்று தோன்றுகிறது" என ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். தங்களது இந்த அதிரடிப் பதிவிற்கு அவர்கள் மேலதிக விளக்கங்கள் எதையும் அளிக்கவில்லை என்றாலும், விளையாட்டு ரசிகர்களிடையே இந்தப் பதிவு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதற்கிடையில், இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான எச்.எஸ். பிரணாய், இந்த வெண்கலப் பதக்க வெற்றி குறித்து தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்திருந்த அவர், "இந்த வெற்றி நீண்ட காலத்திற்கு என் நினைவில் இருக்கும். பதக்கத்தை விடவும் அந்தத் தொடர் முழுவதும் இருந்த குழுவின் ஆற்றலும், ஒருவருக்கொருவர் இருந்த நம்பிக்கையும் தான் மிக முக்கியமானது. அந்த கடைசி சில நாட்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அது ஒரு உணர்ச்சிகரமான பயணம்" எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடப்புத் தொடரில் டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்த அரையிறுதியில், முன்னணி வீரர்கள் இல்லாத பலவீனமான இந்திய அணி, வரலாற்றுச் சாதனையை நோக்கி முன்னேறிய பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. குறிப்பாக, முழங்கை காயம் காரணமாக நட்சத்திர வீரர் லக்ஷ்யா சென் விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் களமிறங்கிய ஆயுஷ் ஷெட்டி, உலகின் நான்காம் நிலை வீரரான கிறிஸ்டோ போப்போவிடம் 11-21, 9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

அடுத்ததாக நடந்த இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிடம்பி, உலகின் 10-ஆம் நிலை வீரரான அலெக்ஸ் லானியரை எதிர்த்து கடுமையாகப் போராடினார். இருப்பினும் 16-21, 18-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தது இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஆட்டத்தில் எச்.எஸ். பிரணாய், உலகின் 17-ஆம் நிலை வீரரான டோமா ஜூனியர் போப்போவிடம் 19-21, 16-21 என்ற செட்களில் வீழ்ந்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தத் தோல்வியால் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது. தாமஸ் கோப்பை வரலாற்றில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி மேடையில் ஏறுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல்முறையாகத் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா, இம்முறை வெண்கலத்தை வென்றுள்ளது. இருப்பினும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் இந்த உலகளாவிய சாதனைக்குக் கிடைக்கவில்லை என்பதே சாத்விக் - சிராக் ஜோடியின் இந்தத் தார்மீகக் கோபத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.