விளையாட்டு

ஷுப்மன் கில்லின் இரண்டு கிரிக்கெட் ஹீரோக்கள்: அதுல ரோஹித் ஷர்மா இல்லையா?

அதற்குப் பின்னால் இருக்கும் நுட்பமான விஷயங்கள், ஒரு போட்டியின் மனரீதியான மற்றும் வியூக ரீதியான அம்சங்கள் என அனைத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தாராம்.

மாலை முரசு செய்தி குழு

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில், தன் வாழ்க்கையில் கிரிக்கெட் விளையாடக் காரணமாக இருந்த இரண்டு முக்கிய ஜாம்பவான்கள் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். ரசிகர்கள் பலர் ரோஹித் ஷர்மாவின் பெயரை எதிர்பார்ப்பார்கள். ஆனால், கில் குறிப்பிட்ட இரண்டு பெயர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர்: அப்பாவுக்குப் பிடிச்ச ஹீரோ

கில்லுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எண்ணம், அவரது அப்பாவால்தான் வந்தது. அவருடைய அப்பாவுக்கு மிகவும் பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர். சின்ன வயதில் சச்சின் விளையாடுவதைப் பார்த்தே கில்லுக்கு கிரிக்கெட் மீது காதல் வந்தது. "எனக்கு இரண்டு வழிகாட்டிகள் இருந்தாங்க. அதில் முதல் ஆள் சச்சின் சார். என் அப்பாவுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்த்துதான் நான் கிரிக்கெட் விளையாட வந்தேன்" என்று கில் கூறியுள்ளார்.

கில், 2011 முதல் 2013 வரை கிரிக்கெட் வெறும் திறமை மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இருக்கும் நுட்பமான விஷயங்கள், ஒரு போட்டியின் மனரீதியான மற்றும் வியூக ரீதியான அம்சங்கள் என அனைத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தாராம்.

விராட் கோலி: ஆட்டத்தில் ஈர்த்த உத்வேகம்

கிரிக்கெட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்த அதே காலகட்டத்தில்தான், விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்த்து கில் வியந்துபோனாராம். கோலி விளையாடும் விதமும், வெற்றிபெற வேண்டும் என்ற அவரது ஆக்ரோஷமான ஆசையும் கில்லை மிகவும் கவர்ந்ததாம்.

"அப்பதான் நான் விராட் கோலி ஆட்டத்தை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன். அவர் கிரிக்கெட் விளையாடுற விதமும், அவரோட வெறித்தனமான ஆர்வமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. திறமையையும், டெக்னிக்கையும் நாம கத்துக்க முடியும். ஆனா, ஜெயிக்கணும்ங்கிற வெறிங்கிறது இயல்பாவே வரணும். விராட் கோலிக்கு அந்த வெறி அதிகமா இருந்தது. அது எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துச்சு" என்று கில் கூறியுள்ளார்.

இந்தியாவின் எதிர்காலம் கில்லின் கையில்

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் மற்றும் கோலி ஓய்வு பெற்றதால், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-2 என சமன் செய்ததற்கு கில்லின் பங்களிப்பு மிக அதிகம். அந்தத் தொடரில், 4 சதங்கள் அடித்து, தொடரின் சிறந்த வீரராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களிடமிருந்து உத்வேகம் பெற்று, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஷுப்மன் கில் உருவாகியிருக்கிறார். இனி வரும் காலங்களில், இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முக்கியப் பங்காற்றுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.