

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 14 வயது எட்டாம் வகுப்பு மாணவியை கரும்புத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில, பாதிக்கப்பட்ட மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே வசிக்கும் 8 வயது சிறுவனுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த விம்லேஷ் என்ற இளைஞரும், அவரது நண்பர் எனக் கூறப்படும் மற்றொரு நபரும் மாணவியை வலுக்கட்டாயமாக கரும்புத் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இருவரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின்போது மாணவியுடன் இருந்த 8 வயது சிறுவன் இதைப் பார்த்ததாகவும், உடனடியாக அங்கிருந்து ஓடி சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் புல் வெட்டிக் கொண்டிருந்த மாணவியின் தாயிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுவன் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து மாணவியின் தாய் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது, அதற்குள் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாயார் நவாப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விம்லேஷ் என்பவர் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபரின் அடையாளத்தை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவி சிறுமி என்பதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் POCSO சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட தகவல்களின் அடிப்படையில் வழக்கில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், மூத்த காவல் கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாக கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடும் பணியில் மூன்று தனிப்படை போலீஸ் குழுக்களும், சிறப்பு நடவடிக்கைக் குழுவான SOG-வும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை முழுவதும் நவாப்கஞ்ச் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இரண்டாவது நபரை அடையாளம் காணவும், அவரது இருப்பிடத்தை கண்டறியவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கிராமத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்