

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மணிமுருகன் (டப்பா மணி) என்பவர் மூன்று பேர் கொண்ட கும்பலுடன் காரில் கடத்தி சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கடத்தப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை கடத்தல் கும்பலை காவல்துறை கைது செய்யாததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கடத்தப்பட்ட மாணவியின் தாய் மற்றும் பாட்டி கண்ணீர் மல்க அழுது புரண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடக்கு புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து கருப்பன், இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி இசக்கியம்மாள், இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர். இதில் மூத்த பெண் குழந்தை 17 வயது சிறுமி, தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்கருப்பன் தனது மகளை உயர்கல்விக்காக, சாயர்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தந்தை முத்துக்கருப்பனிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கையாளாக வேலை பார்த்த ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த 33 வயதான மணிமுருகன். இவர் கடந்த ஒன்றாம் தேதி மாலை வீட்டில் இருந்து கடைக்கு சென்ற முத்துக்கருப்பனின் மகள் 12 ஆம் வகுப்பு மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பலுடன் டாடா இண்டிகா காரில் கடத்தி சென்றுள்ளார்
இந்த செய்தி அறிந்த முத்துக்கருப்பன், தனது மகளை கடத்தி சென்ற மணி முருகன் என்ற டப்பா மணி மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மாணவியை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் கடந்த மூன்று நாட்களாகியும் கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடிக்கவும் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உடனடியாக கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கடத்தலில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான மணி முருகன் உள்ளிட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட மணியின் தொலைபேசி இணைப்பும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் “தனது மகளுக்கு என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை, எங்களுக்கு அச்சமாக உள்ளது" என பெற்றோர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கடத்தப்பட்ட மாணவியின் தாய் மற்றும் பாட்டி கண்ணீர் மல்க மாணவியை உடனடியாக மீட்க வேண்டும் என தரையில் அழுது புரண்ட சம்பவம் அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மாணவியை கடத்திச் சென்ற மணி முருகன் என்ற டப்பாமணி மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் 17 வயது மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட மாணவி குறித்து எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை என்பது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.