“கிரிவலம் சென்ற பெண்களுக்கு அரங்கேறிய பாலியல் கொடூரம்” - 30 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமக்கொடூரன்கள்.. கடவுளின் நகரத்தில் இப்படியா?

உங்களது நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியதின்
திருவண்ணாமலை
Published on
Updated on
3 min read

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரும் கோவிலில் பெண்களை மடக்கி பாலியல் சீண்டல் மற்றும் பணம் பறிக்கும் கும்பலால் பரபரப்பு. இரண்டு பெண்களிடம் நகை மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்ட 11 நபர்களில் சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட எட்டு பேர் கைது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வது விஷேசமான ஒன்று. இதனால் ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலதிற்கு வருகின்ற ஆன்மீக தளமாக திருவண்ணாமலை கோவில் இருந்து வருகிறது. இந்நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் கடந்த 30ம் தேதி நண்பகல் தொடங்கி 31ம் தேதி நண்பகல் நிறைவுற்றது. அதன்பேரில் கிரிவலம் செல்வதற்காக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 30ம் தேதி இரவு கிரிவலம் வந்துள்ளார். அவர் கிரிவலம் முடித்த பின்னர் திருவண்ணாமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலை வழியாக தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருவண்ணாமலை அடுத்த பெரிய கோளாப்பாடி பாறை அருகே அந்த இளம்பெண் அவரது ஆண் நண்பருடன் தனியாக நின்று பேசி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களின் செல்போனில் அந்த இளம்பெண் மற்றும் உடன் இருந்த ஆண் நண்பரை நிர்வாணமாக்கி படம் எடுத்து, வெளியில் சொன்னால் இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து மறுநாள் 31ம் தேதி அந்த இளம்பெண் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றவுடன், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பல் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு 2 பவுன் தங்கச் சங்கிலி பத்தாது என்றும், மேலும் 1 லட்சம் பணம் வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். பணம் அனுப்பவில்லை என்றால் “உங்களது நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியதின் பெயரில் முதற்கட்டமாக ரூ.4 ஆயிரம் GPay மூலம் அனுப்பியுள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியதால், அதற்க்கு மேல் பணம் அனுப்ப முடியாததால் செய்வதறியாமல் தர்மபுரியில் இருந்து 100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்து உள்ளனர்.

புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் தர்மபுரியில் உள்ள பெண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக திருவண்ணாமலைக்கு வரவழைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து கடந்த 31ம் தேதி இரவு திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த திருவண்ணாமலையில் பியூட்டி பார்லரில் பணியாற்றி வரும் 23 வயது இளம் பெண் ஒருவர் தனது பணியை முடித்து விட்டு அன்று இரவு கிரிவலம் சென்று உள்ளார். கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை கிராமம் அருகே சென்ற போது அவருக்கு நடக்க முடியாமல் கால் வலி ஏற்பட்டதால் தனது ஆண் நண்பருக்கு தொலைபேசி செய்து தன்னை அழைத்து சென்று வீட்டில் விடும்படி கேட்டு உள்ளார். அதன்பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கிரிவல பாதைக்கு வந்து அந்த இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஓட்டலில் சிற்றுண்டி வாங்கி கொண்டு அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் சென்று உணவு அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் அங்கிருந்த ஒரு காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று இருவரையும் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இளம்பெண்ணில் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பிடுங்கிக் கொண்டு நாளை ஜி.பே.மூலம் பணம் அனுப்ப வேண்டும் என எச்சரித்து அனுப்பி உள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் அன்று இரவு வீட்டுக்குச் சென்று தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுது உள்ளார். அதன் பேரில் கடந்த 1ம் தேதி திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து அவர்களும் புகார் அளித்து உள்ளனர்.

பவுர்ணமி தினத்தில் 2 வழக்குகள் அடுத்தடுத்து வந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 2  வழக்குகளை பதிவு செய்து திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் போலீஸ் ராஜன் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 5 தனிப்படைகளும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை இளம் பெண் சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வாசுதேவன், பெரியபாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, அரிகரன், சர்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாவாஜி நகரை சேர்ந்த சிவகணேசன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். தர்மபுரி இளம்பெண் சம்பவத்தில் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், 16 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேர் தொடர்புடையது தெரியவந்தது. திருவண்ணாமலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரில், 2 பேர் தர்மபுரி இளம்பெண் சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 7 பேரை வேலூர் மத்திய சிறையில், ஒருவரை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் போலீசார் அடைத்தனர். இந்த 2 வழக்குகளிலும் பெண்கள் வன்கொடுமை சட்டம், வழிப்பறி, பாலியல் தொந்தரவு செய்தல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வழிப்பறி மற்றும் பாலியல் சீண்டலுக்காக பயன்படுத்தப்பட்ட 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்களை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து உள்ளனர்.

போலீசார் இந்த வழக்கில் பறிமுதல் செய்த செல்போனை ஆய்வு செய்த போது எந்தவித தடயங்களும் கிடைக்காமல், அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதனை போலீசார் செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பி அவற்றில் வேறு இளம் பெண்களின் புகைப்படங்கள் உள்ளதா, வேறு பெண்களிடம் பணம் பறித்து உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் வைத்துள்ள செல்போனில் 30 க்கு மேற்பட்ட பெண்கள் வீடியோக்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் பணம் மற்றும் நகைகள் பறிகொடுத்து இருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் புகார் அளிக்கும் பெண்கள் பெயர்கள் ரகசியமாக காக்கப்படும் என காவல்துறை வதெரிவித்துள்ளது. 

மேலும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் திருவண்ணாமலை மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com