

இந்தியாவின் எந்த பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற சொல்ல முடியாதது இந்த தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம் , வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றனர்.
அதற்கு சமீபத்திய உதாரணம்தான் கோயமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவியின் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம். இந்த விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், தனிப்படை போலீசார், குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளனர்.
நவம்பர் 2 அன்று இரவு 11 மணி அளவில் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் காரில் வினித் என்ற நபர் தனது தோழியுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் இவர்கள் தனிமையில் இருப்பதை பார்த்து, இளைஞரை தாக்கி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த வினித் மயக்கமடைந்துள்ளார். மயக்கத்திலிருந்து எழுந்தபோது தன் அருகில் மாணவி இல்லாததால், பதற்றமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். கல்லூரி மாணவியை தூக்கி சென்ற மூன்று பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச்சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதில் சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் மூன்று பேர் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர்கள் கீழே விழவே அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி (20), சதீஷ் (எ)கருப்பசாமி(30), கார்த்திக் (எ) காளீஸ்வரன்(21) என்பது தெரியவந்தது. பின்னர் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. அதில் கருப்பசாமி,காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும்,இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு,வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறை தெரிவிப்பது என்ன!?
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை சுட்டுப்பிடித்தது குறித்து விளக்கம் அளிக்க காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் குற்ற விவகாரம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார், “ "இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குணா (எ) தவசி (20), சதீஷ் (எ)கருப்பசாமி(30), கார்த்திக் (எ) காளீஸ்வரன்(21) ஆகியோரில் சதீஷ் -ம் கார்த்திக்கும் சகோதரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோயமுத்தூர் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர்.
எந்த குணா இவர்களுக்கு ஒரு மாத காலமாகத்தான் பழக்கமாகியுள்ளார், மேலும் இவர்கள் மேல் கொலை வழக்கும், பல திருட்டு வழக்கும் நிலுவையில் இருந்து வந்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த அன்று கூட கோவில் பாளையத்தில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு பொய் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே மது அருந்திவிட்டு, பின்னர் சில மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு விமான நிலையம் பின்புறம் சென்றுள்ளனர்.
அங்கே இவர்கள் இருவரையும் பார்த்த பின்னர் கல்லால் காரின் கண்ணாடியை உடைத்து, அரிவாளால் உடனிருந்த நண்பரை தாக்கி, பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மோதிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தெறியுள்ளது. அவருக்கு விரைவில் மனநல ஆலோசனையும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
கட்டிட வேலையையோ, கிடைக்கிற எந்த வேலையையோ செய்துதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கிராமங்களில் இருந்து ஓடி வரும் இளைஞர்கள் எளிதில் தவறாக வழிநடத்தப்படுவதும் உண்டு.. ஆனாலும் எதற்கு வாழ்கிறோம் என்பதையே மறந்து குடிக்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமையாகி, இதுபோன்ற மிருகத்தனமான செயலில் ஈடுபடுகிறவர்களும் நம் மத்தியில்தான் இருக்கின்றனர்.
ஆனால் எந்த தவறும் செய்யாமல் பாலினத்தின் அடிப்படியில் துன்புறுத்தப்படுவது மிகப்பெரும் வன்முறையாகும். அந்த பெண் எதற்க்கு அந்த நேரத்தில் தனிமையில் இருந்தார் என பல கேள்விகள் எழுப்பப்பட்டாலும், தனது நண்பரோடுதான் பேசிக்கொண்டிருந்தார். அது ஒன்றும் பாலியல் வன்கொடுமை நிகழ்வதற்கான முகாந்திரம் அல்ல. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆண்கள்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அதே சமயத்தில் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனெனில் சமூகம் அனைத்துவிதமான அவலங்களாலும் நிறைந்துள்ளது. இம்மாதிரியான அவலங்கள் பாதிக்கப்பட்டவர்களை விடஅவர்களை சார்ந்தவர்களுக்கு அதிக அளவிலான துன்பத்தையும் மன உளைச்சலையும் தருகிறது. ஆசையாய் வளர்த்த குழந்தையை யாரோ ஒரு கயவர்கள் நாசம் செய்வதை பெற்றோர்கள் எப்படி ஜீரணித்துக்கொள்வார்கள். மேலும் இந்த கொடும் நினைவுகளிலிருந்து அவர்கள் மீள ஆண்டுகள் கூட ஆகலாம். அரசு அந்த பெண்ணுக்கு தேவையான உளவியல் ஆலோசனையை வழங்க உள்ளதாக உறுதி அளித்திருந்தாலும், அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு செல்ல ஆண்டுகள் கூட ஆகலாம். காலம் எல்லா துயரத்தையும் ஆற்றும் என்றாலும், சில சமயம் வடுக்களிலிருந்தும் ரத்தம் கசியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.