

தென்காசி மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததுடன், அந்தச் சம்பவத்தை பார்த்த பேரனையும் அடித்துக் கொலை செய்த வழக்கில், 19 வயது இளைஞருக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நாளன்று இரவு சுமார் 11 மணியளவில், தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியது. அடவிநயினார் கோவில் அணைக்கு செல்லும் சாலையில் உள்ள வீட்டில் அப்துல்கனியின் மனைவி, 70 வயதான சைத்தான் பீவி தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த முகம்மது காசிம் (19) என்ற நபர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலின் போது சைத்தான் பீவி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
மூதாட்டி உயிரிழந்த பிறகு, அவரது உடலை நிர்வாண நிலையில் வீட்டிலிருந்து வெளியே தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு இருந்த அவரது பேரன் காஜீர் அலி, இருட்டில் என்ன நடக்கிறது என்று புரியாமல் "யார் அது?" என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குற்றவாளி, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து காஜீர் அலியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அச்சன்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மேக்கரை கிராமம் வண்ணாத்திப்பாறை சாலை பகுதியைச் சேர்ந்த முகம்மதுகனியின் மகன் முகம்மது காசிம் (19) என்பவரே இந்த இரட்டை கொலை வழக்கின் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.
அவரை கைது செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்து சாட்சிகள், மருத்துவ ஆதாரங்கள் மற்றும் புலனாய்வு ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், முகம்மது காசிம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி தீர்ப்பளித்தது. இதையடுத்து, 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்கும், அவரது பேரன் காஜீர் அலியை கொலை செய்ததற்கும் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் வேல்கனி புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டார். தலைமை காவலர் இசக்கியும் விசாரணையில் முக்கிய பங்காற்றினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென்காசியை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கில் தற்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்கள் மற்றும் முதியோருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை வழக்குகளில் கடுமையான தண்டனையை உறுதி செய்யும் முக்கிய தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.