“ஓடையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி.. பாலியல் வன்கொடுமை செய்து கொலை!” - CCTV-யில் சிக்கிய பக்கத்து வீட்டுக்காரர்

உடல் நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்
pune pocso
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், சிறுமியின் பக்கத்துக்கு வீட்டுக்காரரான 25 வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளது காவல்துறை. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து புனே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் தெரிவித்த தகவலின் படி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் ஆவார். அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று உடல் நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் மாணவி. சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில் சிறுமி தனியாக இருந்ததை பயன்படுத்தி பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர், சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மாலை நேரத்திலும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல மணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர். காவல்துறை விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சைக்கிளில் சென்ற சந்தேகத்திற்குரிய நபரின் காட்சி போலீசாரின் சந்தேகத்தை தூண்டியது. விசாரணையில் அந்த நபர் வீட்டைச் சேர்ந்த சாஹில் கைரே என்பது தெரியவந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, சிசிடிவி காட்சியில் இருந்தது நான்தான் என்று சாஹில் கைரே ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த தகவலின் அடிப்படையில், கிராமத்திற்கு அருகில் உள்ள ஓடை பகுதியில் உள்ள மரத்தின் அடியில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. கிராம மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். "சிறுமிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்" என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com