சாலை ஓரத்தில் வசிக்கும் 10 வயது சிறுமி.. கொடூரமாக சீரழித்து வீசி சென்ற டாக்சி டிரைவர்! 100 கேமராக்களில் அலசி பிடிக்கப்பட்ட குற்றவாளி?

குடும்பம் நடைபாதையிலேயே தங்கியிருந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது
Delhi
Published on
Updated on
1 min read

டெல்லியில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயது வாடகைக் கார் ஓட்டுநரை காவல்துறையினர் விரைவாக கைது செய்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் டெல்லி மெஹ்ரௌலி பகுதியில் வசித்து வந்தனர். வாடகை வீட்டை இழந்த பின்னர், குடும்பம் நடைபாதையிலேயே தங்கியிருந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தினக்கூலித் தொழிலாளர்களான பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில், உயிரிழந்த சிறுமி பலூன்கள் விற்பனை செய்து குடும்பத்துக்கு உதவி செய்து வந்துள்ளார்.

திங்கள்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில், சிறுமி காணாமல் போனதை உணர்ந்த அவரது பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மெஹ்ரௌலி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையின் போது, செயலி மூலம் வாடகைக் கார் ஓட்டி வந்த ஒருவரின் நடமாட்டம் சந்தேகத்திற்குரியதாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி, பப்லு என அடையாளம் காணப்பட்ட 25 வயது நபரை வெறும் நான்கு மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

காவல்துறை விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சிடிஆர் சௌக் அருகே நடைபாதையில் இருந்த சிறுமியை கடத்தியதாகவும், பின்னர் அவரை குருகிராம் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறுமி கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளி அளித்த தகவலின் அடிப்படையில் மெஹ்ரௌலி வனப்பகுதியில் இருந்து சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் மீட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com